தமிழீழம் : தந்தை செல்வநாயகம்பிள்ளை

on Saturday, December 4, 2010இலங்கையைப் பொறுத்தவரையில் கண்டி ராஜ்ஜியம் ஆங்கிலேயரிடம் வீழ்ச்சி காண்பதற்கு முன்னர் அது ஒரு தனி தேசமாக ஒரு குடையின் கீழ் இருந்தமைக்கான வரலாற்று ஆதாரங்கள் குறைவு அல்லது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு முன்னர் இலங்கையில் பல்வேறு ராஜ்ஜியங்களும், சிற்றரசுகளும் இருந்தமையை மகாவம்சம் கூட உறுதிப்படுத்துகின்றது.

இந்த நிலையில் பிரித்தானியரின் பிரித்தாளும் உத்தியின் காரணமாகத்தான் இலங்கையில் இன்றும் இன முரண்பாடுகள் தொடர்கின்றன. அதாவது இலங்கையில் இருக்கும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதன் மூலம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதே பிரித்தானியரின் பிரித்தாளும் உத்தியின் பிரதான நோக்கமாக இருந்தது.

இவ்வாறாக பிரித்தானியரின் பிரித்தாளும் உத்தியில் முதலாவதாக சிங்கள-முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் இன முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. இந்த கலவரத்தின்போது தமிழ் சமூகம் சிங்கள சமூகத்துக்கு ஆதராவாக இருந்தமையும், சேர் பொன் ராமநாதன் அவர்கள் சிங்களவர்களுக்காக பிரித்தானியா சென்று பேசியமையும், பின்னர் சிங்களவர்கள் அவரை தேரில் ஏற்றி இழுத்து வந்தமையும் வரலாறு.

இவ்வாறான ஒரு நிலையில்தான் இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் வழங்கி பிரித்தானியர்கள் வெளியேறினார்கள். உண்மையில் சுதந்திரத்துக்கு முன்னர் இலங்கைக்குள் இன முரண்பாடுகள் பரவலாக இருந்தபோதிலும் அவை பூதாகரமாக வெளித்தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். அந்தவகையில் சுதந்திரத்துக்கு பின்னர்தான் சிங்களவர்கள் தமிழ், முஸ்லீம் சமூகங்களை அடக்கியாள தொடங்கினார்கள்.

சிங்கள சமூகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ், முஸ்லீம் சிறுபான்மைச் சமூகம் சாத்வீகமான வழிகளில் பல போராட்டங்களை முன்னெடுத்தது. இந்தப் போராட்டங்களில் தந்தை செல்வநாயகம் அவர்களின் பங்கு மிக மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. தமிழ் சமூகத்திற்கான சமவுரிமை தொடர்பிலும், தமிழ் மொழியை அரச கரும மொழியாக்க வேண்டுமென்றும் தந்தை செல்வநாயகம் அவர்கள் உறுதியுடன் போராடினார்.தந்தை செல்வநாயம் அவர்கள் தன் வாழ்வின் பெரும் பகுதியை தமிழர்களுக்காகவும், அவர் தம் உரிமைகளுக்காகவும், தமிழ் மொழியின் இருப்பிற்காகவும் செலவிட்டவர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

நியாயமான வழிகளில், சிறு துளியும் வன்முறைகள் இல்லாமல் தந்தை செல்வநாயகம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சாத்வீக போராட்டங்களை சிங்களத் தலைமைகள் அடக்கு முறைகளையையும், வன்முறைகளையையும் கட்டவிழ்த்துவிட்டும், ஒப்பந்தங்கள் என்ற பெயரில் சில போலி நாடகங்களை அரங்கேற்றியும் தணித்துவிடலாம் என்று நினைத்தபோதிலும் தந்தை செல்வா அவர்கள் மிகவும் உறுதியுடனும், தெளிவுடனும் தனது போராட்டங்களை முன்னெடுத்தார்.

சிங்களத் தலைமைகளால் தந்தை செல்வநாயகத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் ஆகிய இரண்டும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு ஒப்பந்தங்களுடன் இலங்கை-இந்திய ஒப்பந்தம், பிரபா-ரணில் ஒப்பந்தம் ஆகியனவும் அடங்கலாக தமிழர்கள் இதுவரை இன முரண்பாட்டிற்கான தீர்வைத் தேடித்தரும் என்று மொத்தம் நான்கு பிரதான ஒப்பந்தங்களை எதிர்பார்த்தார்கள். ஆனாலும் இவ் ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீறியதுடன் அவற்றை கிழித்தெறிந்த பெருமையும் சிங்கள தலைமைகளையே சாரும்.

ஒப்பந்தங்கள், வன்முறைகள் என்று பல வழிகளிலும் தந்தை செல்வநாயகத்தின் போராட்டங்களை தணிக்க சிங்களத் தலைமைகள் முயன்று தோற்ற நிலையிலும், சிங்களத் தலைமைகளிடமிருந்து தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை என்கின்ற நிலையிலும்தான் "தமிழ் சமூகத்திற்கான ஒரே தீர்வு பிரிந்து சென்று தனித் தேசம் ஒன்றை நிறுவுவது" என்கின்ற தீர்மானம் வட்டுக்கோட்டை மாநாட்டில் எடுக்கப்பட்டது..

இவ்வாறாக தந்தை செல்வநாயகம் அவர்களால் எடுக்கப்பட்ட தனித் தேசம் என்கின்ற கொள்கையை நிறைவேற்றுவதற்காக ஜனநாயக வழிமுறைகளில் போராடுவதனால் எந்த வித பலனும் விளையப்போவதில்லை என்கின்ற நிலையில்தான் தமிழ் இளைஞர்கள் ஒன்றுகூடி பல்வேறு ஆயுத இயக்கங்கள் தோற்றம் பெற்றன.

உண்மையில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் என்கின்ற நிலை இருந்தாலும் எல்லா ஆயுத இயக்கங்களினதும் உருவாக்க நோக்கம் ஆரம்ப காலங்களில் "தமிழீழம்" என்பதாகவே இருந்தது. அதாவது இயக்கங்களால் வேறுபட்டிருந்தாலும் எல்லா போராளிகளினதும் இலட்சியம் ஒன்றாகவே இருந்தது. இவ்வாறாக தோற்றம் பெற்ற ஆயுத இயக்கங்களில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளட், ரெலோ, தமிழீழ விடுதலைப் புலிகள், ஈரோஸ் போன்றவை முக்கியமான இயக்கங்களாக காணப்பட்டன.இந்த இயக்கங்களில் ஆரம்ப காலங்களில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பு மிகவும் பலம்பொருந்திய இயக்கமாக காணப்பட்டது.

இவ்வாறாக தோற்றம் பெற்ற இயக்கங்களுக்கு இந்தியா தனது பிராந்திய நலனின் அடிப்படையில் ஆயுதங்களை வழங்கியதுடன், ஆயுதப் பயிற்சிகளையையும் வழங்கியிருந்தது. அதாவது இலங்கையில் ஒரு அமைதியான சூழ்நிலை இருந்தால் அது தனது வல்லாதிக்க சக்திக்கு எதிர்காலத்தில் சவாலாக அமைந்துவிடும் என்பதே இந்திய தேசம் தமிழ் ஆயுதக் குழுக்களை ஊக்குவிக்க காரணமாக அமைந்திருந்தது. மேலும் இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பதும் இந்தியாவின் இந்தச் செயலுக்கான காரணம் என்று சொல்ல முடியும்.

இந்தியா தனது அரசியல் தேவைகளுக்காக ஊக்குவித்த ஆயுத இயக்கங்கள் குறுகிய காலத்துக்குள் தம்மை வளர்த்துக் கொண்டமையாலும், எல்லா இயக்கங்களும் இலட்சியத்தால் ஒன்றுபட்டிருந்தமையாலும் எதிர்காலத்தில் இந்த இயக்கங்கள் மேற்குலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தம்மை மேலும் பலப்படுத்தி எல்லா இயக்கங்களும் ஒன்றுபட்டு இந்தியாவுக்கு எதிராக திரும்பினால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்கின்ற இந்திய புலனாய்வு அமைப்பான றோவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இயக்கங்களின் இலட்சியங்களைச் சிதைக்கும் செயலில் இந்தியா இறங்கியது. மேலும் தென்னிலங்கை அப்போது இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தமையும் இந்த செயலுக்கு வழிவகுத்தது.

இந்தியா தனது திட்டங்களை அரங்கேற்றுவதற்காக ஒவ்வொரு இயக்கங்களினதும் தளவைர்களை தமது நாட்டுக்கு அழைத்து மூளைச் சலவை செய்யத்தொடங்கியது. இதில் பல தலைவர்களுக்கு பணத்தாசையும், பதவியாசையும் ஊட்டப்பட்டது. அந்தவகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரைத் தவிர மற்றைய இயக்கங்களின் தலைவர்களிடத்தில் இந்தியாவின் மூளைச்ச் சலவை வெற்றியளிக்கவே ஒவ்வொரு இயக்கங்களும் தமது "தமிழீழம்" என்கின்ற கொள்கையிலிருந்து விலகிக்கொண்டன. இதனால் அதிருப்தியடைந்த குறித்த இயக்க உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இயக்கங்களைவிட்டு வெளியேறியதுடன், சிலர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தம்மை இணைத்துக் கொண்டனர்.

இந்தியாவின் இந்த மூளைச் சலவையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் வடக்கு கிழக்கிற்கான முதலமைச்சர் பதவி தருகின்றோம் போராட்டத்தை கைவிடும்படி இந்தியா கேட்டுக்கொண்ட போதிலும் பிரபாகரன் அதனை நிராகரித்ததாகவும், தமிழீழம் என்கின்ற கொள்கையிலிருந்து எந்தக் காலத்திலும் விலக முடியாது எனத் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது.

உண்மையில் இன்று தமிழீழம் என்று பேசினால் அது தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கிய கொள்கை என்கின்ற அளவுக்கு தந்தை செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழக் கொள்கையில் புலிகள் உறுதியுடன் இருந்துள்ளார்கள்.

1 comment:

Priya Balan said...

Nice to read about Trade Printers Posting.how to get Trade Printing this post. Regards Wholesale Printing

Post a Comment