மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிள்ளை

on Sunday, December 12, 2010


"பாட்டின் திறத்தாலே வையத்தைப் பாலிக்கப் பிறந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். மக்கள் கவியாக விளங்கி ஏழை எளிய மக்களுக்காகவே பாடிய கவிஞர்.

திரையுலகப் பாடல்கள் பட்டிருந்த கறை நீக்கி, மக்கள் நெஞ்சம் நிறைவுறவும், வியத்தகு செந்தமிழில் எளிமையாக அருமையான கருத்துக்கள் கொண்ட பாடல்கள் எழுதி குறுகிய காலத்தில் புகழ் அடைந்தவர் பட்டுக்கோட்டை. தமிழக ஏழை உழைப்பாளிகளும், அறிவால் உழைக்கும் இடைநிலை மக்களும் தங்களுக்காக திரையுலகிலே குரல் கொடுத்துத் தங்கள் வாழ்வை மேம்படுத்த முன்னின்ற பாடலாசிரியரை இவரிடம் கண்டனர்.

தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா

என்றும்

காயும் ஒருநாள் கனியாகும் - நம்
கனவும் ஒருநாள் நனவாகும்
காயும் கனியும் விலையாகும்

என்றும் நம்பிக்கை தந்தார்.

உழைப்பை மதித்திதுப் பலனைக் கொடுத்து
உலகில் போரைத் தடுத்திடுவோம்!
அண்ணன் தம்பியாய் அனைவரும் வாழ்ந்து
அருள் விளக்கேற்றிடுவோம்

என்று உலகளாவிய அன்புணர்வோடும், உண்மையுணர்ச்சியோடும் திரையுலகின் வழியாக உரத்த குரலை எழுப்பினார். மறைந்து கொண்டிருந்த தமிழ்த் தென்பாங்கு, சிந்து, இலாவணி போன்ற நாட்டுப் பாடல்களின் கூட்டிசைக்குப் புத்துயிரூட்டத் திரையுலகில் தனக்குக் கிடைத்த பத்தாண்டு எல்லையில் மற்றவர்கள் நூற்றாண்டு எல்லையில் செய்ய முடியாத செயலைச் செய்து, மிக சிறிய வயதில் இயற்கை எய்தினார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் காற்றிலே மிதக்கும் கவிதைகளாக மட்டுமல்லாது, ஏட்டில் சிறப்புறும் இலக்கியமாகவும் இருக்கின்றன. திரைப் பட கவிஞர்களில் இவரைப் போன்ற சமூக மறுமலர்ச்சி மக்கள் கவிஞரை, புதிய சமதர்ம சமுதாய இலட்சியக் கவிஞரை நாம் கண்டதில்லை.

ஒரு சாதாரண உழவர் குடும்பத்தில் பிறந்த இவர் (13-4-1930), உழவுத் தொழிலில் முனைந்து, படிப்படியாய் கவிதைகள் இயற்றி புலவர் மணியாய்த் திகழ்ந்து மிகச் சிறியவயதில்(29) இயற்கை எய்தினார். 1951ம் ஆண்டு "படித்த பெண்" எனும் திரைப்படத்திற்கு முதன் முதலாக பாடலை இயற்றித் திரைப்பட உலகில் நுழைந்தார்.

உழவர்கள் படும் துயரத்தைக் கண்டு உள்ளம் உருகி நாடோடி மன்னனில் இவர் எழுதியது:

சும்மாக் கிடந்த நிலத்தைக் கொத்தி, சோம்பலில்லாமல் ஏர் நடத்தி...நெல்லு வெளைஞ்சிருக்கு - வரப்பும் உள்ள மரஞ்சிருக்கு - அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் - நமக்கு கையுங் காலுந்தான் மிச்சம் ?

தொழிலாளர்கள் பற்றி எழுதியது:

செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம்
சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடி
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு
ஏற்றமுன்னா ஏற்றம் இதிலேயிருக்கு முன்னேற்றம்

குழந்தைப் பாடல்கள் மூலம் நல்ல கருத்துக்களை சொன்னது:

திருடாதே! பாப்பா திருடாதே! வறுமை நிலைக்கு பயந்து விடாதே
சின்னப் பயலே! சின்னப் பயலே! சேதி கேளடா
தூங்காதே தம்பி! தூங்காதே தம்பி, நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே -நீ ஏன் படைத்தோம் என்பதை மறந்துவிடாதே
உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட

தத்துவக் கருத்துகள் சொன்ன பாடல்கள்:

இதுதான் உலகமடா! பொருள் இருந்தால் வந்து கூடும்..
இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே..
நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்..
மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே-அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம்-ஒரு கண்ணாயிருக்கனும் அண்ணாச்சி
குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்..
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா..
அது இருந்தா இது இல்லை-இது இருந்தா அது இல்லை..
வீடுநோக்கி ஓடுகின்ற நம்மையே நாடிநிக்குதே அநேக நன்மையே
அறம் காத்த தேவியே-குலம் காத்த தேவியே-நல் அறிவின் உருவமான ஜோதியே

காதல் பாடல்கள்:

துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்..
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை-அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை
உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது
முகத்தில் முகம் பார்க்கலாம்-விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே கொள்ளும் இன்பமே
இன்று நமதுள்ளமே - பொங்கும் புது வெள்ளமே
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா ?
வாடிக்கை மறந்ததும் ஏனோ - என்னை வாட்டிட ஆசைதானோ
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று
ஆசையினாலே மனம் -ஓஹோ - அஞ்சுது கொஞ்சுது தினம்
துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது
ஆடை கட்டி வந்த நிலவோ-கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
கொக்கரக் கொக்கரக்கோ சேவலே- கொந்தளிக்கும் நெஞ்சிலே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ இளையவளா மூத்தவளா

பட்டுக்கோட்டை பல கஷ்டங்களுக்கிடையே, தன் சுயமுயற்சியாலும், இலட்சியத் தெளிவாலும் திரையுலகின் உன்னத நிலையைய் அடைந்தார். சினிமாவில் பெரும் புகழ் அடைந்த போதும், அவர் எப்போதும் விவசாய இயக்கத்தையும், கம்யுனிஸ்ட் கட்சியையும் மறந்த்ததில்லை. தான் பின்பற்றிய கட்சியின் இலட்சியத்தை உயரும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது பாடுபட்டார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் காலத்தால் மறையாது என்றென்றும் நிலைத்து நிற்கும்."

No comments:

Post a Comment