பி. டி. ஆர். பழனிவேல்ராசன்

on Saturday, December 4, 2010



பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் தமிழ்நாட்டில் மதுரை மாநகரில் 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27, தேதியன்று பி. டி. ராஜன் - கற்பகாம்பாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டப்பேரவைத் தலைவராகவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இளமைப்பருவம்

பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் 1938 ஆம் ஆண்டில் இலங்கை கண்டியில் உள்ள டிரினிடி பள்ளியில் சேர்க்கப்பட்டார். நான்காண்டுகள் அங்கு பயின்ற அவர் அதன் பின்பு தமிழ்நாட்டில்நீலகிரி மாவட்டம், குன்னூர் சூசையப்பர் பள்ளியிலும் அதன்பின்பு 1946 -ல் சேலம் மாவட்டம், ஏற்காடு மாண்ட்போர்டு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னை கிறித்துவக் கல்லூரியில் வேதியியல் பாடத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்று பின் சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து 1954 -ல் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். 1954 -ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு மதுரையில் வழக்கறிஞராகத் தொழிலைத் தொடங்கினார்.

திருமணம்

பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் தனது 31 வது வயதில் 1963 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதியில் சேலம் சுப்பராய முதலியார் மகளான ருக்மணியம்மாளை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1966 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதியில் ஆண் குழந்தை பிறக்க பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் மகனுக்குத் தியாகராஜன் என்று பெயர் சூட்டினார்.

அரசியல்

பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் அவருடைய தந்தையும் நீதிக்கட்சியின் நிறுவனருமான பி.டி.ராஜனைப் போலவே அரசியலில் ஈடுபடத் துவங்கினார். பல கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 1967 ஆம் ஆண்டில் தேனி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்பு 1972 முதல் 1976 வரை தமிழ்நாடு கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். 1974 -ல் லண்டன் மாநகரில் நடந்த 24-வது காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டார். 1977-ல் பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சொத்துப் பாதுகாப்புக் கழக உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1980 -ல் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1984 -ல் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்கு பட்டதாரிகள் தொகுதியில் போட்டியிட்டு மேலவை உறுப்பினராகத் தெர்வு செய்யப்பட்டார். 1996ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார்.2001 ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதன்பிறகு 2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இதர பதவிகள்

மதுரை வழக்கறிஞர் பேரவைப் புரவலர், மதுரை காஸ்மோபாலிடன் கிளப் தலைவர், மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் போன்ற பல பதவிகளை ஏற்று சிறப்பாகச் செய்திருக்கிறார்.

இலங்கைத் தமிழருக்காக சிறை

1985 ஆம் ஆண்டில் இலங்கை யில் திரு.பாலசிங்கம் மற்றும் திரு. சந்திரசேகரன் ஆகியோரின் வெளியேற்ற உத்தரவை எதிர்த்து மறியல் செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மரணம்

2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று மதுரைக்கு இரயிலில் திரும்பிக் கொண்டிருந்த போது திண்டுக்கல் அருகே 20-05-2006ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட மரணமடைந்தார்.

No comments:

Post a Comment