வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள்

on Saturday, December 11, 2010

ப்ரவாஹன்

சதுரகிரி வேள் அவர்கள், நெல்லை நெடுமாறனும் அ. கணேசனும் சேர்ந்து எழுதியுள்ள 'அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை' என்பது குறித்த தனது கருத்துக்களை கடித வாயிலாகத் தெரியப்படுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நால்வருணம் இல்லை என்று வரிந்து கட்டிக் கொண்டு மற்றோர் கடிதத்தையும் எழுதியுள்ளார்.

நால்வர்ணம் குறித்து தமிழகத்தில் வேளாளர்களின் நிலைப்பாடு எப்படிப்பட்டது என்பதை வே. கனகசபைப்பிள்ளை, '1800 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகம்' என்ற நூலில் துலக்கமாகக் காட்டுகிறார். தொல்காப்பியம் கூறும் நால்வருண இலக்கணம் குறித்து அவர் கூறுகையில் "இதுதான் தமிழர்களை தங்கள் சாதி அமைப்புக்குள் கொண்டுவர பிராமணர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், தமிழகத்தில் க்ஷத்ரிய, வைசிய, சூத்திர சாதிகள் இல்லாததனால் அவர்களால் வெற்றியடைய முடியவில்லை. மேலும் இதுநாள் வரையிலும் தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்கிற ஒரு படையாச்சி அல்லது வைசியர் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டில் வெள்ளாளர்கள் உணவருந்தவோ தண்ணீர் குடிக்கவோ மாட்டார்கள்” என்கிறார். இதன் பொருள் நால்வர்ணம் இருக்கவேண்டும், அதை நாங்கள் திட்டவட்டமாகக் கடைப்பிடிப்போம். ஆனால் நால்வர்ணத்தைப் புகுத்தியதாகப் பழியை மட்டும் பிராமணர் மீது போடுவோம் என்பதுதான். இத்தகைய முரண்பாடு தமிழக வேளாளர் சமூக அறிஞர்களின் மனோநிலையில் இயல்பாகவே அமைந்திருக்கிறது என்று கருதுகிறேன். சதுரகிரி வேளின் நிலைப்பாடும் கனகசபைப் பிள்ளையின் நிலைப்பாட்டைப் பின்பற்றியுள்ளதுதான்.

தங்களுக்குச் சாதகமானவற்றின் மீது மட்டும் கருத்துக்களைக் கூறிவிட்டு முரணாக இருப்பதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது அல்லது அத்தகைய உண்மைகளுக்கே (விளக்கங்களுக்கு அல்ல) உள்நோக்கம் கற்பிப்பது என்பதைத் தொடர்ந்து இத்தகைய ஆதிக்க சக்திகள் செய்துவருகின்றனர்.

முதல் கடிதத்தில் வேளாளர்கள் பிள்ளை என்ற பட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று சதுரகிரி கூறியிருப்பது சரியே. அதை அவர்கள் கைப்பற்றிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அது அவர்களுக்கு மட்டுமே உரியது. தங்களை மூவேந்தர்கள் என்றும் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர் என்றும் அவர்கள் கோரிக்கொள்ள விரும்புவதற்கு முரண்பாடாக இந்த பிள்ளைப் பட்டம் இருக்கிறது என்பதைக்கூட விளங்கிக் கொள்ள முடியாத அளவிற்குத் தங்களுக்குக் கிடைத்துள்ள அரசியல் ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் மனோநிலை வேளாளர்களிடம் ஊறியிருக்கிறது. அரசரின் சட்டபூர்வமான ஆண் வாரிசுகள் தங்களை இளவரசன் அல்லது இளங்கோ என்றே கூறிக் கொள்வர்.

தமிழக மூவேந்தர்கள் சூரிய-சந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் கிடைத்துள்ள அனைத்து கல்வெட்டுகளும் பிற ஆவணங்களும் இதை உறுதி செய்கின்றன. ஆனால் வேளாளர்களோ கங்கை குலத்தவர்கள் அல்லது நதிக்குலத்தவர்கள். இந்த நதிக் குலத்தவர்கள் தங்களை வேளிர் என்றும் மூவேந்தர்கள் என்றும் கூறிக்கொள்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? எந்த இடத்திலாவது மூவேந்தர்கள் தங்களை நதிக்குலத்தவர்களாக, கங்கை குலத்தவர்களாக கூறிக்கொண்டது உண்டா? அதுபோலவே வேளிர் என்போர் யது குலத்தவர் ஆவர். மேலும், சூத்திர வருணத்தவர் ஆன வேளாளர்களுடன் சூரிய-சந்திர குல க்ஷத்ரியர்களான மூவேந்தர்கள் மண உறவு வைத்திருந்தனர் என்று கூறுவது 13-14 ஆம் நூற்றாண்டைய உரையாசிரியர்கள் சங்ககால இலக்கிய வரிகள் மீது தங்கள் சமகால நிலவரத்தைச் சார்த்தி எழுதிய ஒன்றே தவிர வேறில்லை.

சங்க காலந்தொட்டு வேளாளர்களின் கடமைகள் அல்லது தொழில்கள் என்ன? இலக்கியங்களும் நிகண்டுகளும் சொல்கின்றபடி, வேளாளர்களின் முக்கிய கடமை மூன்று மேல் வருணத்தார்க்கும் ஏவல் செய்வது. மூவேந்தர்கள் மணவுறவு வைத்திருந்தனர் என்று கூறுவது ஆதாரமற்றது. மாறாக, எம் குலப்பெண்களை மூவேந்தர்கள் எம்மை இழிவு படுத்தினர் என்ற கோபத்தினால்தான் களப்பிர அரசர்கள் மூவேந்தர்களை சிறை செய்து தங்களைப் புகழ்ந்து பாடச் செய்ததற்குக் காரணம் என்று கூறினால் அது நியாயமாக இருந்திருக்கும். அரித்துவாரமங்கலம் பட்டயத்தை மேற்கோள் காட்டி நெல்லை நெடுமாறன், அ. கணேசன் ஆகியோர் கூறுவது தர்க்கபூர்வமாகவே உள்ளது.

மேலும், வேளாண்மை என்பதன் பொருள் என்ன? சங்க காலம் முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையுள்ள பல்வேறு நூல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள வேளாண்மை என்ற சொல்லுக்கு உபகாரம் என்றே பொருள். உழவுத் தொழிலைப் போற்றுகின்ற திருக்குறளிலும் கூட வேளாண்மை என்ற சொல் உபகாரம் என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிகண்டு நூல்கள் முக்கியமான வரலாற்று ஆவணங்களாகும். 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் முதலில் வந்த நிகண்டு ஆகும். அதன் பின்னர் இயற்றப்பட்ட பிங்கலந்தை, சூளாமணி, வடமலை நிகண்டு, பாரதி தீபம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டு வீரமாமுனிவரின் சதுரகராதி உட்பட அனைத்து நிகண்டுகளிலும் வேளாண்மை என்ற சொல்லுக்கு உபகாரம், மெய் உபசாரம் என்றே பொருள் கூறப்பட்டுள்ளதே தவிர விவசாயம் என்றல்ல. வேளாளர்களை வேளிர்களுடன் தொடர்புபடுத்துவதைவிட வேளத்துடன் தொடர்புபடுத்துவது பொருத்தமாகத் தெரிகிறது.

வேளாண்மை என்பதற்கு விவசாயம் என்று பொருள் கொண்டு அதனடியாக நிலக்கிழார்கள் என்றும் எனவே வேளாளர்தான் வேளிர் (குறுநில மன்னர்) என்று சதுரகிரியைப் போன்றவர்கள் கோருகின்றனர். வேளாளர்கள் உழுதுண்போர், உழுவித்துண்போர் என்பதாகப் பிற்காலத்தில் பிரிக்கப்பட்டுள்ளனர் என்பதும் ஒரு வரலாற்று உண்மை. இதில் உழுவித்துண்போர் என்பவர்கள் நிலத்தின் உரிமையாளர்கள் அல்ல. மாறாக, அவர்கள் காராளர் என்ற தகுதி உடையோர் மட்டுமே. இந்தக் காராளர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், ஐரோப்பிய நிலப்பிரபுத்துவத்தில் செய்வது போலவே, தங்கள் பகுதிக்கு நிலத்தின் உரிமையாளரான வேந்தர் அல்லது நிலப்பிரபு அல்லது ஆட்சியாளர் வருகை புரிகையில் அவர்க்குத் தேவையான அனைத்து உபசாரங்களையும் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் நால்வருணம் இல்லையென்று பல வரலாற்று ஆசிரியர்கள் வலிந்து கூறிவருகின்றனர். ஆனால் புறநானுற்றுப் பாடல் குறிப்பிடுகின்ற, வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் ... என்பதில் தொடங்கி தொல்காப்பியம் நான்கு வர்ணங்களையும் அவர்களின் கடமைகள் மற்றும் உரிமைகளையும் வரையறுத்துள்ளது. தொடர்ந்து வந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, பிற நீதி நூல்கள் என்று தொடர்ச்சியாக நால்வர்ணங்கள் குறித்த குறிப்பில்லாத நூல்களைக் காட்ட முடியுமா? வேளாளர்களை சதுர்த்தர் என்று குறிப்பிடாத நிகண்டுகளையாவது காட்டமுடியுமா? மேலும் நால்வர்ண இலக்கணத்திற்கு மாறாக தமிழக வரலாற்றில் நிகழ்ந்தவை எவையெவை என சதுரகிரி வேள் அவர்கள் பட்டியல் இடட்டும். நால்வர்ண இலக்கணத்தை ஒட்டி நிகழ்ந்தவைகள் எவையெவை என நான் பட்டியல் இடுகிறேன். எது அதிகம் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.

தமிழகத்தில் நான்கு வர்ணங்கள் இருக்கிறது என்பதை நன்கு அறிந்து கொண்ட வேதாசலம் பிள்ளை (மறைமலை அடிகள்) அவர்கள் அதைச் சரிக்கட்டுவதற்காக என்ன பாடுபடுகிறார் பாருங்கள். வர்ணத்தையே நாங்கள்தான் உருவாக்கினோம் என்று கூறிவிட்டார். சாதியையும் நாங்களே உருவாக்கினோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். வேளாளர் நாகரிகம் என்ற தனது நூலில், "தமிழகத்தில் முதன்முதல் உழவுத் தொழிலைக் காணும் நுண்ணறிவும், அதனாற் கொலைபுலை தவிர்த்த அறவொழுக்கமும், அதனாற் பெற்ற நாகரீகமும் உடைய தமிழ் மக்கள் எல்லாரினுஞ் சிறந்து விளங்கித் தம்மினின்று அந்தணர், அரசர் எனும் உயர்ந்த வகுப்பினர் இருவரையும் அமைத்து வைத்து, அறவொழுக்கத்தின் வழுவிய ஏனைத் தமிழ் மக்களெல்லாந் தமக்குந் தமதுழவுக்கும் உதவியாம்படி பதிணென் டொழில்களைச் செய்யுமாறு அவர்களை அவற்றின் கண் நிலைபெறுத்தித் தமிழ் நாகரிகத்தைப் பண்டு தொட்டு வளர்த்துவரலாயினர்” என்பார். அப்பதிணென் வகுப்பினர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் ஆகியன. இச் சாதிகளை பலபட்டடைச் சாதிகள் என்றும் அவர் கூறுகிறார். இவர் குறிப்பிடுகின்ற சாதிகள் சங்க இலக்கியத்தில் உயர்ந்தவையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

"துடியன். பாணன். பறையன். கடம்பன் இந்நான்கல்லது குடியுமிலவே” என்கிறது புறநானூறு. ஆனால், வேளாளர்களோ பிற்காலத்தில் கரணம் அமைந்த பிறகுதான் குடியானார்கள் என்பதை தொல்காப்பியம் தெளிவுற எடுத்துரைக்கின்றது. சங்க காலத்தில் பறையர்களில் ஒரு பிரிவான அறிவர்கள் அந்தணப் பிரிவில் இருந்துள்ளனர். ("பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே” - தொல்) குயவர் எனப்படும் மட்பாண்டக் கைவினைஞர்களை சங்க இலக்கியம் 'வேட்கோவர்’ என்று குறிப்பிடுகிறது. வேட்கோவர் என்போர் வேள்வி செய்யக்கூடிய தகுதியுடையோர். சங்க இலக்கியங்களின்படி கண்மாளர்கள் சூத்திரர் அல்ல. விஸ்வகர்மா என தங்களைக் கூறிக்கொள்ளுகிற இவர்கள், தாங்களே உண்மையான அந்தணர் என்பதை நிரூபிப்பதற்காக மிகவும் பிற்காலத்திலும் கூட நீதிமன்றம் சென்று வழக்காடிய வரலாறு உண்டு. அதுதான் புகழ்பெற்ற 'சித்தூர் ஜில்லா அதாலத்’ எனப்படுகிறது. மேலும் தாங்களே சோழ அரசர்களின் குலகுருக்கள் என கம்மாளர்கள் தொடர்ந்து கோரிவந்துள்ளனர். இந்த இடத்தில் மரபாக இருந்து வருகின்ற சில சமூக மோதல்களை நாம் கவனத்தில் கொள்வது ஆர்வத்திற்குரியது. அதாவது தமிழ்ச் சமூகத்தில் கம்மாளர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையிலான இந்த மோதல் மட்டுமின்றி, பார்ப்பனர்களுக்கும் பறையர்களுக்கும் இடையில் தாங்களே உண்மையான அந்தணர்கள் என்கிற சண்டை தொடர்ந்து இருந்துவந்துள்ளது. அதுபோலவே பறையர்களுக்கும் கம்மாளர்களுக்கும் இடையிலும் சண்டை இருந்துவந்துள்ளது. நாவிதர் மற்றும் மருத்துவர் எனப்படுகின்ற சாதியினர், அம்பட்டர் என்ற பெயரில் அந்தணப் பிரிவில் இருந்துள்ளனர். இன்றைக்கும் வைணவக் கோயில்களின் பூசாரிகள் 'பட்டர்’ என்றே அழைக்கப்படுகின்றனர். அமாத்தியரான அம்பட்டர்கள் குறித்து தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், "அமாத்திய நிலையும் சேனாபதி நிலையும் பெற்ற அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் வரைவில் வென்றவாறு” என்கிறார்.

இவை இங்ஙனமிருக்க வேளாளர்களை நான்காம் பிரிவினராக சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. "மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே” என்கிறது தொல்காப்பியம். இதன்பொருள், மணவினைச் சடங்குகள் இன்றி இருந்த நான்காம் வர்ணத்தவரான வேளாளர்களுக்கு மணவினைச் சடங்குகள் பின்னர் ஏற்படுத்தப்பட்டன என்பதாகும். மனுதர்மத்தில் சூத்திரர்களுக்கு திருமணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதை இத்துடன் ஒப்பிட்டுக் காணலாம். இவ்வாறு வேளாளர்களுக்கு மணவினைச் சடங்கு ஏற்படுத்தப்பட்டு இறுக்கமான குடும்ப அமைப்புக்குள் அவர்கள் கொண்டுவரப்பட்டதால் அவர்களும் குடி என்ற நிலைக்கு உயர்ந்தனர். இவ்வாறு குடி என்கிற நிலைக்கு மிகவும் பிற்காலத்தில் வந்ததாலேயே, உழுதுண்போரான வேளாளர்களை அடியற்றி உழவர்களை 'குடியானவன்’ என்று சொல்லுகின்ற வழக்கு நிலைபெற்றது.

வேளாளர்கள் காராளர்களாகி, களப்பிரர் ஆட்சிக்குப் பின்னர் நிலவுடைமையாளர்களாக ஆகிவிட்ட பின்னரும், வேளாளர் குலத்தில் உதித்து சோழ அரசனின் அமைச்சராக இருந்த சேக்கிழார், "நீடு சூத்திர நற் குலஞ்செய் தவத்தினால்” (இளையான்குடி நாயனார் புராணம்-1) எனவும் "தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல” (வாயிலார் நாயனார் புராணம்-6) எனவும் சூத்திரராகவே குறிப்பிட்டுள்ளார். வேளாளர்கள் எழுச்சி பெற்றுவிட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தொகுக்கப்பட்ட நிகண்டுகள் வேளாளரை, 'சதுர்த்தர்’ என்று குறிப்பிடுகின்றன. சேந்தன் திவாகரம், வேளாளர் அறு தொழிலில், 'இருபிறப்பாளர்க் கேவல் செயல்’ என்கிறது. வேளாளர் பத்துவகைத் தொழிலில் 'ஆணைவழி நிற்றல்’ என்றுரைக்கிறது. அடுத்து வந்த பிங்கலந்தை நிகண்டு, வேளாளர் பத்துவகைத் தொழிலில் 'ஆணை வழி நிற்றல்' என்கிறது. மிகவும் பிற்காலத்தில் தொகுக்கப்பட்ட வீரமாமுனிவரின் சதுரகராதி, சூத்திரர் தொழில், 'மூவர்க்கேவல் செயல்’ என்கிறது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புறப்பொருள் வெண்பாமாலை வேளாண் வாகையில் 'மூவர்க்கு ஏவல்’ வேளாளரின் கடமையென்கிறது. தொல்காப்பியம் 'வேளாண் பெருநெறி’ என்று குறிப்பிடுவதன் பொருள் விருந்தோம்பல். 19 ஆம் நூற்றாண்டில் நெல்சன் என்ற ஆங்கிலேயர் தொகுத்த Madura Manual என்ற நூலில் இது பற்றிய விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.

வேதாசலம் பிள்ளை, கனகசபை பிள்ளை போன்ற வேளாளர் சமூக அறிஞர்களின் நிலைப்பாடு, புலிக்கு பயந்தவனெல்லாம் என் மீது படுத்துக்கொள்ளுங்கள் என்று கூப்பாடு போட்டவனின் கதைதான். மேலே படுத்தவனையெல்லாம் புலி அடித்துவிட்டது. ஆனால், அடியில் படுத்துக்கொண்டவன் தந்திரமாகத் தப்பித்துவிட்டான் என்பது கதை. அதைப்போல, வெள்ளாளர்கள் தாங்கள் சூத்திரர் என்பதை மறைப்பதற்காக, அக்னி குல க்ஷத்ரியர்களான வன்னியர்களையும், சங்க காலத்தில் அந்தணருக்குச் சமமாக இருந்த பறையர்களையும், கம்மாளர்களையும், வேட்கோவர்களான குயவர்களையும், செல்வச் செழிப்பில் இருந்த வைசியர்களான செட்டியார்களையும் இன்னும் சில சாதியினரையும் சூத்திரர் ஆக்கிவிட்டனர். இதற்காக தமிழகத்தில் பார்ப்பனர் சூத்திரர் என்ற இரண்டே பிரிவுகள்தான் என்று மீண்டும் மீண்டும் கோயபல்ஸ் பாணியில் எழுதி நிலைநாட்டியிருக்கின்றனர். இப்போது அந்த அடித்தளம் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற அச்சத்தில்தான் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றனர்.

போரில் ஈடுபடுவதனால் அல்லது அரசாட்சிக்கு வந்துவிடுவதால் மட்டும் க்ஷத்ரிய அந்தஸ்து கிடைத்து விடாது. மன்னர் கொடுப்பாராயின் இடையிரு வகையோருக்கும் படையும் ஆயுதமும் வழங்கப்படும் என்பது தொல்காப்பியம் குறிப்பிடும் மரபு. இருப்பினும் அவர்கள் வைசியர்களாகவும் சூத்திரர்களாகவுமே இருப்பார்களேயன்றி க்ஷத்ரியர் ஆகிவிடமுடியாது. அரசன்தான் அனைத்தையும் முடிவு செய்பவன் என்பதையும், பார்ப்பனர்கள் அல்ல என்பதையும் வள்ளுவர் தெளிவாக எடுத்துரைக்கிறார். "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் /நின்றது மன்னவன் கோல்” என்பது குறள். இதன் பொருளை உணர்ந்தால், சமூகத்தின் நன்மைகளுக்கு மட்டுமல்ல தீமைகளுக்கும் க்ஷத்ரியர்கள் பொறுப்பேற்க வேண்டிய கடமை உண்டு.

இது தொடர்பாக இன்னும் எத்தனையோ விசயங்களை எடுத்து வைக்கமுடியும் என்றாலும் தற்போது எனக்கிருக்கின்ற பல்வேறு பணிகளுக்கிடையில் ஒழுங்கற்றமுறையில் இதை முன்வைப்பதற்காக வாசகர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

பிற்குறிப்பு: எந்த சாதியினர் மூவேந்தர் என்பது குறித்து எனக்கு எவ்வித கவலையும் கிடையாது. ஆனால் வரலாற்று உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்கிற ஒரே விருப்பம் உடையவன் என்கிற முறையில் ஒரு பொய்மையைத் தகர்ப்பதற்கான எனது சிறு முயற்சியே இக்கடிதம்.

3 comments:

NAMASIVAYAM said...

This writer wants to be called a 'shoothra'. You richly deserve it. Hold fast to it; that is your glory.

NAMASIVAYAM said...

Whatever this genius says, the Paarppanars of Tamilnadu assert that (1)in Kaliyugam Kshatryias and Vaisyars are extinct and (2) there are only two classes of Hindus viz. Brahmins and Shudras. This they say though Geethai says that people engaged in farming, cattle raising (gowrakshya), and trading are vaishyas! That means that they also accept that Geetha's slokas are not all valid today, though they say that the work contains exactly the words of the Supreme.

A very interesting point is that in the Merriam Webster Dictionary (unabridged) 'Vellala' is defined as 'the hihest of Shudra community'! But if you look up the word 'Reddi' (the farming community in Andhra, they are not classified as Shudras! We only know very well how this happened.

There cannot be any movement that was the direst necessity as the opposition to parppanar in Tamilnadu.

NAMASIVAYAM said...

The writer of this article is certainly a shudra, and not a vellaala. Vellaalars down from prechristian centuries refused to come under the four varnaas of the Aryaas. The culture of the vellaala community, their refinement in every aspect of life, irritated the Aryappaarppanar. They denigrated the vellaalas by many means. Grouping them with shudras was one such.

Post a Comment