- சீவக சிந்தாமணி,
- விவேக சிந்தாமணி
என்பது போல, அபிதான சிந்தாமணி எளிதில் படிக்கக் கூடிய புராணக்கதையோ அல்லது இதிகாச நூலோ அல்ல. பல துறைகளைச் சேர்ந்த சொற்களுக்கு விளக்கம் கூறி விளங்கச் செய்யும் கலைக் களஞ்சியம் தான் "அபிதான சிந்தாமணி".
அபிதான சிந்தாமணி என்னும் இந்நூலின் ஆசிரியர் ஆ.சிங்காரவேலு முதலியார்.
இவர் பிறந்த ஊர் பொன்விளைந்தகளத்தூருக்கு அருகில் உள்ள ஆலூர். பிறந்த ஆண்டு 1855. இவர் பிறந்த தேதி, மாதம், தாய் - தந்தை பற்றிய விவரங்கள் அறியக் கிடைக்கவில்லை. இந்நூலின் முதல்பதிப்பு வெளியான 1910ஆம் ஆண்டில் சிங்காரவேலு முதலியார் சென்னை - பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார்.
1,050 பக்கங்கள் கொண்ட இந்நூல்தான் தமிழ் மொழியில் வெளியான முதல் கலைக்களஞ்சியம். பாண்டித்துரைத் தேவர் முயற்சியால் மதுரை தமிழ்ச்சங்கம் வெளியிட்டது.
சிங்காரவேலு முதலியார் இந்நூலுக்கு "சர்வார்த்த சித்தி" என்னும் பெயரை வைத்திருந்தார். இந்நூல் கையெழுத்துப் பிரதியாக இருந்தபோது இதற்கு ஓர் அறிமுக உரையை யாழ்ப்பாணம் கனகசபை பிள்ளை எழுதித்தந்துள்ளார். இவர் எழுதிய அறிமுக உரையில் இருந்துதான் இந்நூலின் பழைய பெயர் தெரிய வருகிறது.
சொல்லப்படும் பொருள் எதுவாக இருந்தாலும் அதைக் கவிதை வடிவில் மட்டுமே எழுதிவரும் வழக்கம் தொடக்கம் முதலே இருந்து வந்தது. அருஞ்சொற்களுக்குப் பொருள்கூற வேண்டிய தேவை பிற்காலத்தில் தான் எழுந்தது. அந்த அமைப்பில் உருவானதுதான் அபிதான சிந்தாமணி. நூல் உருவான வரலாற்றைப் பற்றி நூலாசிரியர் சிங்காரவேலு முதலியார் தமது முதற் பதிப்பு முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"நான் இந்த அபிதான சிந்தாமணி என்னும் இந்நூலைச் சற்றேறக் குறைய 1890ஆம் வருஷங்களுக்கு முன் தொடங்கினேன். இது எனது அரிய நண்பரும் சென்னை பச்சையப்பன் முதலியார் ஹைஸ்கூல் எட்மாஸ்டருமாகிய மகாஸ்ரீ சி.கோபாலராயரவர்கள், பி.ஏ., எனமண்டரம் வெங்கடராமையரவர்கள் செய்த "புராண நாம சந்திரிகை" போல், தமிழில் ஒன்று இயற்றின் நலமாம் என்று அந்தப் புத்தகமும் ஒன்று கொடுத்துதவ, அதனை முதல் நூலாகக் கொண்டு "புராண நாமாவளி" என்று பெயர் புனைந்து எழுதத் தொடங்கியது".
இந்நூலை எழுதிவரும்போது சிலர் வாயிலாகக் கேட்ட தகவல்கள் மறந்துவிடாமல் இருப்பதற்காகத் தமது கைப்புத்தகத்தில் குறித்துக்கொள்வாராம் ஆசிரியர். பின்னர் அதை எழுதும் புத்தகத்தில் பதித்துக்கொண்டு, அவற்றைச் சில நாள்கள் கழித்து அகர வரிசைப்படுத்தி மீண்டும் பெயர்த்து எழுதியுள்ளார். நூலை அச்சில் கொண்டுவர பல்வேறு தடைகள் ஏற்பட்டன சிங்காரவேலு முதலியாருக்கு. சொந்தமாக வெளியிட எண்ணமும், ஆர்வமும் இருந்த போதிலும் அவரது ஆசிரியப் பணி மூலம் குறைவான வருமானமே கிடைத்தது. ஆகவே தமிழ் - பருவ இதழ்களில் எதிலாவது வெளியிட நினைத்து ஓர் அறிக்கை தயாரித்து வெளியிட்டார்.
இதழ் உரிமையாளர்களோ பல காரணங்களைக் கூறித் தட்டிக்கழித்தனர். காலம் கடந்து சென்றது. இதைப் பயன்படுத்திக்கொண்டு வேறு சிலர் இதே போன்ற வேறு நூல்களை எழுதத் தொடங்கினார்கள். மீண்டும் அவர் மற்றொரு அறிக்கையைத் தயாரித்து இதழ்களின் மூலம் வெளிப்படுத்தினார். இவரது அறிக்கைகளைப் பற்றி அறியும் போது மகாகவி பாரதியார், தமது நூல்களை அச்சில் கொண்டுவர மக்களிடம் நிதியுதவி வேண்டி அறிக்கை வெளியிட்ட கதைதான் நினைவு வருகிறது.காலம் கனிந்தது.அபிதான சிந்தாமணியை வெளியிடும் பொருள் வசதியும் ஈர நெஞ்சமும் கொண்ட மனிதர் யாராவது தமிழகத்தில் இல்லாமலா போய்விடுவார்கள்? இருக்கத்தான் செய்தார்.
அவர்தான் மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் தலைவரும், பாலவனத்தம் ஜமீன்தாரும், தமிழ் வளர்த்த பெருமகன் பொன்னுசாமித்தேவரின் குமாரரும் ஆகிய பொ.பாண்டித்துரைசாமித் தேவர் என்பவர். இவர், சிங்காரவேலு முதலியார் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்து, தாமே சென்னைக்கு வருகை தந்து அபிதான சிந்தாமணி நூலின் கையெழுத்துப் படியைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார். கையெழுத்துப் படியை மதுரைக்கு எடுத்துச்சென்ற பாண்டித்துரைசாமித் தேவர், பல தமிழறிஞர்களைக் கொண்டு அதைச் சுத்தமாக எழுதுவித்துப் புதுப்பிரதி தயாரித்தார். அதை எடுத்துக்கொண்டு மீண்டும் சென்னைக்கு வந்து நூலாசிரியரை உடன் வைத்துக்கொண்டு அச்சகத்தில் கொடுத்து அச்சுப்பணி தொடங்க ஆணையிட்டார். அவ்வப்போது அச்சுப்பணிக்கு வேண்டிய பொருளுதவியும் செய்துவந்தார்.
சிங்காரவேலு முதலியார் இந்நூலின் முதல் பதிப்பு முகவுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"இந்நூல் ஒரு தனி நூல் அன்று. இது பல சான்றோர்கள் இயற்றிய நூல்களின் தொகுப்பாகும்". - இதிலிருந்து அவரது பணிவும், அவையடக்கமும் வெளிப்படுகின்றன.
சிங்காரவேலு முதலியார் தமது நூலுக்குத் தமிழில் முகவுரை எழுதியதுடன் அதன் சுருக்கத்தை ஆங்கிலத்திலும் எழுதிச் சேர்த்துள்ளார். அது தமிழறியாதவர்கள் அறிந்துகொள்ள வழிவகுத்தது. முகவுரையின் தொடக்கத்திலும், நூலின் தொடக்கத்திலும் அவர் எழுதி அமைத்துள்ள அகவற்பாவும், கட்டளைத்துறையும் மரபுக் கவிதை புனையும் அவரது ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. அபிதான சிந்தாமணி, தமிழில் வெளிவந்த அகராதிகளின் முன்னோடி எனலாம். சொல்லுக்குச் சொல் பொருள் மட்டும் கூறாமல் சொற்களுக்கு உரிய விரிவான விளக்கங்களையும் கூறுகிறது. அகர வரிசையில் அமைந்த இந்நூல், அகத்திய முனிவர் என்னும் சொல்லுடன் தொடங்கி, வெளவால் என்னும் சொல்லில் முடிகிறது.
நூலின் பிற்பகுதியில்,
- சிவத்தலங்கள்
- திருமால் தலங்கள்
- தேவார வைப்புத் தலங்கள்
- அறுபத்துமூவர் திருநட்சத்திரம்
- ஆழ்வார்களின் திருநட்சத்திரம்
முதலிய பட்டியல் இடம்பெற்றுள்ளன.
அதன் பிறகு "அநுபந்தம்" என்னும் பகுதியில் நூலில் விட்டுப்போன சொற்கள் அகர வரிசைப்படுத்தப்பட்டு அவற்றின் பொருளும் தரப்பட்டுள்ளன.
முதல் பதிப்பு வெளியான பிறகுதான் அதில் பல சொற்கள் விடுபட்டுப்போனது நூலாசிரியருக்குத் தெரியவந்தது. ஆகவே விடுபட்டுப்போன சொற்களையும் மேலும் பல புதிய சொற்களையும் அவர் தொகுத்து வந்தார். இவற்றையெல்லாம் சேர்த்து அபிதான சிந்தாமணியை இரண்டாம் பதிப்பாக வெளியிடும் திட்டத்துடன் அச்சுக்குத்
தந்ததுள்ளார். அச்சகத்தில் இருந்து வந்த அச்சுத்தாள்களில் 1,000 பக்கங்களை சிங்காரவேலு முதலியாரே பிழை திருத்தம் செய்து வந்தார்.
ஆனால், 1931ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நோய்வாய்ப்பட்டு அவர் இயற்கை எய்தினார். அதனால், தந்தையாரின் எண்ணத்தை நிறைவேற்றும் ஆவல் கொண்ட அவரது மகன் சிவப்பிரகாச முதலியார் தொடர்ந்து அந்த அச்சுப் பணிகளை மேற்கொண்டார். முதல் பதிப்பில் 1,050 பக்கங்கள் கொண்ட இந்நூல், இரண்டாம் பதிப்பில் 1,634
பக்கங்களுடன் வெளியிடப்பட்டது.
1855ஆம் ஆண்டு பிறந்து 1931ஆம் ஆண்டு இயற்கை எய்திய சிங்காரவேலு முதலியார், தாம் வாழ்ந்த 76 ஆண்டுகளில் செயற்கரிய இச்செயலைச் செய்து தமிழ் இலக்கிய உலகில் மங்காத புகழ் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment