தமிழும்,சைவமும் ஒருசேர தழைத்தோங்கி வளரச்செய்த பெருமைக்குரியவர் வித்துவான் பாலூர் து.கண்ணப்பர். ஆற்றல் மிக்க எழுத்தாளராய், பன்முகத் திறமையுடன் திகழ்ந்த, து.கண்ணப்பர், தமிழ் அன்னைக்குப் பல ஒளிமிக்க அணிகலன்களைப் பூட்டி அழகுபார்த்தவர்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பாலூர் எனும் சிற்றூரில், துரைசாமி முதலியார் - மாணிக்கம்மாள் தம்பதிக்கு 1908ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி பிறந்தார். சைவத்தை உயிர் மூச்சாகவும் தமிழின் மீது ஆறாக் காதலும் கொண்டிருந்தவர் இவரது தந்தையார் துரைசாமி.
மீன் குஞ்சுக்கு நீந்தவும் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ன?
தந்தை வழியைப் பின்பற்றியே சைவமும் தமிழும் இருகண்கள் எனப் போற்றி, அவை செழித்தோங்கப் பாடுபட்டார் கண்ணப்பர்.
ஆரம்பப் பள்ளிக் கல்வியை முடித்து, பின்னர் செந்தமிழ்க் கல்வியைக் கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். கல்வித் தொண்டு புரிவதையே தம் கடமையாகக்கொண்டு வாழ்ந்த டி.என்.சேஷாசலம் ஐயர் என்பவரிடம் கண்ணப்பர் ஆங்கில மொழியையும், தமிழிலக்கிய இலக்கணங்களையும் குற்றமறக் கற்றார். என்றாலும், அவரது தமிழ் வேட்கை ஒருசிறிதும் தணியவில்லை. இதனால்,
- மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை
- கோ.வடிவேலு செட்டியார்
- "இசைத் தமிழறிஞர்" சூளை வைத்தியலிங்கம்
- ஆகியோரிடமும் சென்று
- தமிழிலக்கியம்
- இலக்கணம்
- தருக்கம்
- வேதாந்தம்
- சைவ சித்தாந்தம்
- தமிழிசை
ஆகியவற்றை முறையாக, கசடறக் கற்றுத் தேர்ந்தார்.
"தமிழாசிரியர் பணியே தலையாயபணி" என்ற எண்ணம் கொண்டிருந்த கண்ணப்பர், சென்னையில் உள்ள லூத்தரன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியைத் தொடர்ந்தார். பின்னர், சென்னை முத்தியாலுப்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் நான்கு ஆண்டுகளும் திருவல்லிக்கேணியில் உள்ள கெல்லெட் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆண்டுகளும்
பணிபுரிந்தார். நிறைவாக இராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரியில் 16 ஆண்டுகள் தமிழ்த்துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றினார்.
அன்றைய நாள்களில், சென்னை - இராயப்பேட்டை, பெரம்பூர், குயப்பேட்டை முதலிய இடங்களில் பொதுமக்களுக்காக இரவுப் பாடசாலைகள் இலவசமாக இயங்கி வந்தன. அங்கு பயின்று வந்த பலருக்கு கண்ணப்பர் இலவசமாகத் தமிழ் கற்றுக்கொடுத்தார். மேலும்,புரசைவாக்கம் சுந்தரர் கல்லூரியில் புலவர் வகுப்பு
நடத்தினார்.
- புரசை கம்பன் கழகம்
- சிந்தாதிரிப்பேட்டை தமிழ்ச்சங்கம்
- சூளை இளைஞர் கழகம்
ஆகிய தமிழ் அமைப்புகளுக்குச் சென்று தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்பித்தார். இவைதவிர, "அம்மையப்பர் கழகம்" எனும் ஓர் அமைப்பைத் தோற்றுவித்து, அதன்வழி பலருக்கும் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்பித்தார்.
தமிழ் நூல் வரலாறு என்னும், "தமிழ் இலக்கிய வரலாறு" என்ற நூலை, தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளார். தமிழ் இலக்கிய வரலாற்றில் காலம்தோறும் நிகழ்ந்து வரும் பல மாற்றங்களையும், திருப்பங்களையும், புதுமையைக் கையாளும் முறைகளையும் கவனத்தில் கொண்டு, விருப்பு வெறுப்பற்ற நடுநிலைமையுடன் தான் கண்ட ஆய்வு முடிவுகளைத் துணிவாகவும் அதே நேரத்தில் தனக்கு உடன்படாத, சில முரணான செய்திகளைத் தகுந்த ஆதாரத்துடன் மறுத்தும் இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.
இதைத்தவிர,
- மாணவர்களுக்கான நூல்கள்
- இலக்கணம்
- இலக்கியம்
- வாழ்க்கை வரலாறு
- சமயம்
- தொகுப்பு
- ஆய்வு
- உரை நூல்கள்
என 57 நூல்களைப் படைத்தளித்துள்ளார்.
தெய்வானை என்னும் பெண்ணை இல்வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட கண்ணப்பர், இல்லறநெறியிலும் சிறந்து விளங்கினார். அவர்களுக்கு மகளிர் எழுவர் பிறந்தனர். பழம்பெரும் இலக்கிய, இலக்கண உரையாசிரியர்களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் முதலிய உரையாசிரியர்களுக்கு இணையாகத் தமிழ் மந்திரம், திருஈங்கோய்மலை எழுபது, சேக்கிழார் பிள்ளைத் தமிழ் போன்ற நூல்களுக்கு இவர் எழுதிய ஆராய்ச்சி உரைகளே இவரது உரைச்சிறப்புக்கு சான்று கூறுவன.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின், சேக்கிழார் பிள்ளைத் தமிழுக்கு கண்ணப்பர் எழுதிய பேருரை "பெருவிளக்கவுரை" எனப் போற்றப்படுகிறது. தமிழ் இலக்கண, இலக்கியங்கள், சைவ சித்தாந்த மெய்கண்ட சாத்திரங்கள், பெரியபுராணம் முதலியவற்றை ஆராய்பவருக்கு கண்ணப்பர் இயற்றிய இப்பேருரை மிகவும் பயனுள்ளதாகவும் மிகச் சிறந்த வழிகாட்டி நூலாகவும் விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
தொள்ளாயிரம் பக்கங்கள் கொண்ட இவரது பேருரை நூல் போல் இதுவரை வேறு எவரும் உரைவிளக்கம் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி, இவரது பணிகளிலேயே மிக உன்னதமான பணி என்று கூறினால்,
- சென்னையில் அமைந்த "சைவ சித்தாந்த சமாஜம்"
- சென்னை எழுத்தாளர் சங்கம்
- செங்கை மாவட்ட எழுத்தாளர் சங்கம்
முதலிய அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை ஏற்று அதன்வழி பல பணிகளைச் செவ்வனே செய்ததும், தமிழாசிரியர் நிலை உயரவும் பாடுபட்டது தான் எனலாம்.
மேலும், சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுவிலும் முக்கிய உறுப்பினராய்த் திகழ்ந்து பணியாற்றியுள்ளார்.
"தமிழ் மந்திரம்" என்ற ஓர் அரிய நூலைப் படைத்துள்ளார் பேராசிரியர் கண்ணப்பர். திருமூலரின் திருமந்திரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 365 பாடல்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு நூல் இது. எளிய நடையிலும், சிறந்த உரையுடனும் கூடிய இந்நூலில், 15க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். திருமந்திரத்தை ஆராய்பவர்க்கு இந்நூல் மிகுந்த பயன் தரக்கூடியது.கற்பனைக் காட்சிகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் ஓர் அற்புத நூல், "திருஈங்கோய் மலை எழுபது". இது 11ஆம் திருமுறையில் இடம்பெற்ற பக்திப் பனுவல். தலைசிறந்த ஆய்வாளரான கண்ணப்பரின் ஆய்வுத்திறனுக்குக் கட்டியம் கூறும் நூல், "பொய்யடிமை இல்லாத புலவர் யார்?" என்பது. சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பட்ட திருத்தொண்டத்தொகையில், "பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடுகிறார்.
அவர் குறிப்பிடும் "பொய்யடிமை இல்லாத புலவர் யார்?" என்று பல அறிஞர்களின் உள்ளங்களில் தோன்றிய கேள்விக்கு சரியான விடை கிடைக்கவில்லை. சுந்தரர் பாடிய ஒரு வரிக்கு, 88 பக்கங்களில் தக்க ஆதாரத்துடன் "பொய்யடிமை இல்லாத புலவர் மாணிக்கவாசகர்" தான் என்று சரியான - உண்மையான விடை கண்டவர் பேராசிரியர் கண்ணப்பர் ஒருவர்தான்.
இந்நூலின் சிறப்பு குறித்து, "திருவாளர் பாலூர் கண்ணப்ப முதலியார் இயற்றிய பொய்யடிமை இல்லாத புலவர் யார்? என்ற நூலை ஓதும் பேறு பெற்றேன். இவ்வாறு எழும் வினாவிற்கு விடையாக மாணிக்கவாசகரே எனப் பல சான்றுகள் காட்டிக் கூறுகின்றார். சிக்கலான கேள்வி இது. இருந்தாலும் இவர் நூல் இனிதாகவும், எளிதாகவும் அமைந்துள்ளமை பாராட்டத் தக்கதேயாம்" என்று பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் கூறியுள்ளார்.
சன்மார்க்க சிங்கமான வள்ளலாரின் "இங்கிதமாலை" என்ற அகப்பொருள் சார்ந்த இந்நூலுக்கு பேராசிரியர் கண்ணப்பர் அளித்துள்ள உரை விளக்கம், இவரது உரைத்திறனுக்குச் சான்றாய் அமைகிறது.கண்ணப்பரது மணிவிழா, 1969ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு, அம்மணிவிழாவின் போது சிறப்பு மலர் ஒன்றும்
வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரது அரும்பெரும் பணிகளை நினைவு கூர்ந்து போற்றும் வகையில்,
- செந்தமிழ்ச் செல்வர்
- சைவசமய சிரோன்மணி
என்று இவரைத் தமிழறிஞர்கள் போற்றிச் சிறப்பித்துள்ளனர்.
தமது 63ஆம் அகவையில், 1971ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தாலும், தமிழ்ப் பேருலகில் நிலையான தடம் பதித்துவிட்டார் பாலூர் கண்ணப்பர்.
தன் கண்ணையே பரம்பொருளுக்குத் தந்த கண்ணப்பநாயனாரைப் போல, தமிழ்ப் பணிக்காகவும் சைவ சமயத்துக்காகவும்
தமது வாழ்நாளையே அர்ப்பணித்த பேராசிரியர் கண்ணப்பரின் பெயரும் புகழும், தமிழும் சைவமும் உள்ளவரை நின்றோங்கும்!
No comments:
Post a Comment