ரா. பி. சேதுப்பிள்ளை (1896 - 1961)
ரா. பி. சேதுப்பிள்ளை ஒரு தமிழ் அறிஞர். இவர் தமிழில் சொற்பொழிவு அற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.
உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் 1896 ஆம் ஆண்டு பிறந்தார். பி.ஏ, பி.எல் பட்டங்களைப் பெற்றுச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர் திருவள்ளுவர் நூல்நயம், தமிழகம் ஊரும்பேரும், தமிழின்பம் என்பன உள்ளிட்ட பதினேழு உரைநடை நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்கள் சிறந்த செந்தமிழ் நடைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.
இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தது. 1961 ஆம் ஆண்டில் இவர் காலமானார்.
"தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு; தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்; வடக்கேயிருந்துவரும் குளிர்காற்றை " வாடை" என்றார்கள் ; தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் " தென்றல்" என்றார்கள் . வாடையென்ற சொல்லிலே வன்மையுண்டு; தென்றல் என்ற சொல்லிலே மென்மையுண்டு . தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலின் மகிழ்ந்து திளைப்பர்." (-ரா. பி. சேதுப்பிள்ளை)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment