இன்றைக்கு நூற்றியிருபது ஆண்டுகளுக்கு முன் தமிழ் அன்னையின் தவப்புதல்வராய் திருநெல்வேலியில், காந்திமதிநாத பிள்ளை - மீனாட்சியம்மை தம்பதியருக்கு 1888ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி பிறந்தவர் கா.சுப்பிரமணிய பிள்ளை.
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மூன்றாண்டு கல்வி பயின்றார். வயக்காட்டில் அமைந்த பள்ளியில் தம் கல்வியைத் தொடர்ந்தார். பள்ளி இடைவேளையின் போது ஆங்கில செய்தித்தாள்களைப் படிப்பதும் அதிலுள்ள தலையங்கங்களை ஒருமுறை பார்த்தவுடன் பாராமற் சொல்லும் திறமையும் பெற்றிருந்தார். 1906 மெட்ரிக். தேர்வில் வெற்றிபெற்று 1908ல் மாகாணத்தில் முதல் மாணவராக எஃப்.ஏ. தேறினார். மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் முதல் மாணவராக வந்து பரிசு பெற்றார். 1910ல் வரலாற்றை சிறப்புப் பாடமாக எடுத்து பி.ஏ. பட்டம் பெற்றார். அதில் முதல் மாணவராக வந்ததற்காக பவர்முர்கெட் என்ற ஆங்கிலேயர், தமிழ் ஆராய்சிக்கென அமைத்த பரிசினைப் பெற்றார். 1913ல் ஆங்கிலத்திலும், 1914ல் தமிழிலும் முதலாவதாகத் தேறி எம்.ஏ.பட்டம் பெற்றார். பின்னர் 1917ல் எம்.எல்.பட்டம் பெற்றார்.
நீதிபதி சேஷகிரி ஐயடைய அன்பினால் சென்னை சட்டக் கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. முதலில் விரிவுரையாளராக இருந்து சர்.பி.டி.தியாகராயச் செட்டியார் பேருதவியினால் சட்டப் பேராசிரியரானார். 1919 முதல் 1927 வரை சட்டக் கல்லூரியில் பணியாற்றினார்.
கோல்கத்தா பல்கலைக்கழகத்தில் தாகூர் குடும்பப் பெயரால் தாகூர் விரிவுரையாளர் பரிசு அமைத்திருந்தார்கள். சட்டக்கலையில் தரப்படும் மூன்று பொருள்களில் ஏதாவது ஒன்று பற்றி பன்னிரண்டு சொற்பொழிவுகள் செய்தல் வேண்டும். அதன் சுருக்கத்தை முதலில் அனுப்ப வேண்டும். அதனை ஆராய்ந்து தேர்ந்தெடுப்பர். 1920ல் கா.சு.பிள்ளை அப்போட்டியில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு, கோல்கத்தா சென்று பன்னிரண்டு விரிவுரைகளையும் ஆற்றி ரூபாய் பத்தாயிரம் பரிசைப் பெற்றார்.
சட்டக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்ட விதிமுறையின் காரணமாக 1927ல் பேராசிரியர் பணியிலிருந்து விலகினார். திருநெல்வேலியில் தங்கி இலக்கிய வரலாறு மற்றும் பல அரிய நூல்களை எழுதினார். 1929-30ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றினார். ஒரு வருடப்பணி முடிந்து திருநெல்வேலி சென்று அங்கு நகராட்சி உறுப்பினராகவும் அதே சமயம் சுவாமி நெல்லையப்பர் கோயில் தர்மகர்த்தாவாகவும் பணி செய்தார். தேவார, ஆகமப் பாடசாலைகளைத் தோற்றுவித்தார்.
1934ல் சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாட்டினை வரவேற்புக் கழகத் தலைவராயிருந்து சிறப்பாக நடத்தினார். அப்போது ஆற்றிய உரையில் தமிழின் பெருமை, தமிழர் பெருமை குறித்து மிக அருமையான கருத்துகளை எடுத்துக்காட்டினார். அந்த மாநாட்டின் முடிவில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. அதன் முதல் தலைவராக கா.சு.பிள்ளைத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் தலைவர் பதவியில் இருந்தார்.
1937-38ல் கா.சு.பிள்ளை, தம் நண்பர் இசைமணி சுந்தரமூர்த்தி ஓதுவாருடன் காஞ்சியில் சில காலம் தங்கியிருந்தார். அதுசமயம் பழந்தமிழ் நாகரிகம் அல்லது பொருளதிகாரக் கருத்து என்ற சிறந்த ஆராய்ச்சி நூலும், வானநூலும் எழுதி முடித்தார்.
1940ல் திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கக் கூட்டத்தில் கா.சு.பிள்ளைக்கு பல்கலைப் புலவர் என்ற பட்டம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. அதே ஆண்டு செட்டிநாடு இளவரசர் மு.அ.முத்தையா செட்டியார் செப்புப் பட்டயம் வழங்கினார்.
பின்னர் 1940ல் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் பணியேற்றார். தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் பல்துறைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். அப்போது அவரது உடல்நலம் குன்றத் தொடங்கியது எனினும் பாடம் சொல்லுதல், நூல் எழுதுதல், நூல் ஆராய்தல், சொற்பொழிவு ஆற்றல், மாநாட்டுக்கு தலைமை தாங்குதல் போன்றவற்றை சீரும் சிறப்புமாக செய்துவந்தார்.
இவரது தமிழ் இலக்கிய, சமய நூல் படைப்புகளை வரலாற்று நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், கதைகள், சமய நூல்கள், அறிவுச்சுடர் நூல்கள், கலை நூல்கள், பதிப்பு நூல்கள், ஆங்கில மொழிபெயர்ப்புகள், ஆங்கில நூல்கள், சட்ட நூல்கள், கட்டுரைகள் எனப் பிரிக்கலாம்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் வரலாறு, சேக்கிழார் சரிதமும் பெரிய புராண ஆராய்ச்சியும் போன்ற நூல்களை வெளியிட்டார்.
இந்து சமயங்களின் சுருக்க வரலாறு
திருநான்மறை விளக்கம்
முருகன் பெருமை
சைவச்சடங்கு விளக்கம்
மெய்கண்ட நூல்களின் உரைநடை
போன்றவை கா.சு.பிள்ளையின் சிறந்த படைப்புகளாகும்.
1940ல் இருந்தே வாதநோயால் பாதிக்கப்பட்டு உதவியாளர் ஒருவர் மூலம் எழுதிவந்தார். தம்முடைய 56வது வயதில் 1945ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி இறையடி சேர்ந்தார்.
நுண்மாண் நுழைபுலச் செம்மல்
பல்கலைப் புலவர்
என பல சிறப்புகளைப் பெற்ற பேராசிரியர் கா.சுப்பிரமணிய பிள்ளை நினைவாக திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் அருகேயுள்ள நகர்மன்ற பூங்காவில் நடுகல்(13.10.1947) நாட்டப்பட்டது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி, தமிழ் இலக்கியத்திற்கும், சமயத் துறைக்கும், சட்டத் துறைக்கும் சிறப்பாக தொண்டாற்றிய அன்னாருக்கு சிலைவைத்து நம் நன்றியுணர்வை வெளிப்படுதுவது தமிழர்களின் கடமையாகும்.
1 comment:
பேரறிஞர் கா.சு. பிள்ளை தமிழர்களின் தவப்பயன். தமிழ் நாட்டில் அரசியல் கலவாத அறிஞர்களை யாரும் பொருட்படுத்துவதில்லை. ஏதாவது ஒரு கட்சிக்கொடியைத் தூக்கிப் பிடித்து அந்தக் கட்சியின் தலைவரைத் துதி பாடினால் தான் மாலை மரியாதை எல்லாம். Ch.N
Post a Comment