"கரந்தைக் கவியரசர்" அரங்க. வேங்கடாசலம் பிள்ளை

on Monday, November 22, 2010



கரிய மேனியும், நரைத்த மீசையும், சந்தனப் பொட்டும், நிமிர்ந்த தோற்றமும் தலைப்பாகையும் துண்டும் வெள்ளை உடையும் நிமிர்ந்த நடையும் உடையவர். சங்க இலக்கியப் பாடல்களை மட்டுமல்லாது இலக்கணங்களையும் குறிப்பாக, தொல்காப்பியத்தையும் மனப்பாடமாக நூற்பா எண்ணோடு சொல்லக்கூடியவர். உரைகளும் கூட அவருக்கு மனப்பாடம். வெறும் பாடமாக, ஏட்டுச் சுரைக்காயாகக் கற்றுத்தராமல் வாழ்வியல் சிந்தனைகளுடன் நகைச்சுவை ததும்பப் பாடம் நடத்துவார். இலக்கியங்களை மட்டுமல்லாமல் இலக்கணங்களையும் சுவையுடன் நடத்துவார். இத்தகு பெருமைக்குரியவர்தான் கரந்தை வேங்கடாசலம் பிள்ளை.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மோகனூர் என்ற சிற்றூரில், 1886ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி, அரங்கசாமிப் பிள்ளை - தருமாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

தஞ்சை தூயபேதுரு உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், தனிக்கல்வியாக தமிழ் இலக்கியத்தை கரந்தை வேங்கடராமப் பிள்ளையிடமும், தமிழ் இலக்கணத்தை மன்னை காவல் ஆய்வாளர் மா.ந.சோமசுந்தரம் பிள்ளையிடமும் பயின்றார்.

தமிழவேளின் நண்பரும், கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளருமான கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, திருவையாறு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆனார்.

"கரந்தை" என்பது கருந்திட்டைக்குடியின் மரூஉ. மொழிப்பெயர் கரந்தை என்ற பூவின் பெயர். புறத்திணை அடிப்படையில் மீட்டலைக் குறிக்கும். தமிழின் பெருமையையும் வளர்ச்சியையும் மீட்கும் பணியில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தையே தம் வாழ்வாகக் கொண்டு உழைத்தவர் கவியரசு. சங்க அமைச்சராகவும் சங்கத்து இதழாகிய "தமிழ்ப்பொழில்" ஆசிரியராகவும் இரவு பகல் பாராமல் பாடுபட்டவர்.

கவியரசு வேங்கடாசலம், கரந்தையில் குடியிருந்தார். நண்பர் ஒருவர், "சாகை கரந்தையில் தானே?'' என்று கேட்டார். சாகை என்ற சொல் (ஜாகை) குடியிருப்பதைக் குறிக்கும், தமிழில் "சாதல்" என்ற பொருளும் தரும். ஆதலால், "ஆம்..ஆம்.. சாகை கரந்தையில்தான்'' என்றார் கவியரசு. சாகை என்றது சாகும்போதும் தமிழ் படித்துச் சாகும் வரை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்குத் தொண்டு செய்து வாழ்வேன் என்ற பொருளில் நகைச்சுவையுடன் கூறினார் எனில், அவர் தமிழ்ப் பற்றை என்னவென்பது?

இலக்கணம் என்றாலே பிலாக்கணம் என்று அஞ்சி ஓடினாராம் பாரதியார். இலக்கணம் என்றால் பலாச்சுளை என்று எடுத்துத் தேனில் தோய்த்து அளித்தார் கவியரசு. குற்றியலுகரம் என்பது ஒற்றுமை நயம்; உயிர்மெய் என்பது வேற்றுமை நயம் என்னும் கருத்துக்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியைக் கூறினார்.

புதுக்கோட்டை மன்னர், பார்ப்பனர்களுக்கு இலவச வேட்டி சேலை அளித்தார். அதை வாங்க பார்ப்பனப் பெண் மகனுடன் தொடர்வண்டியில் சென்றார். ஆய்வாளர் வந்து சீட்டுக் கேட்டபொழுது, மடியில் மகனை வைத்துக்கொண்டு, "நான் மட்டும் தான், மடியில் இருப்பது சிறுகுழந்தை'' என்றார். அரண்மனையில் பார்ப்பனப் பெண் தனக்குப் புடவையும் தன் குழந்தைக்குத் தனியே சிற்றாடையும், கருவுற்றிருக்கிற தன் வயிற்றைக் காட்டி இன்னொரு சிற்றாடையும் என மூன்று கொடை வாங்கினார். அவர் போட்ட கணக்கு முதலில் ஒன்றும் ஒன்றும் ஒன்றாகியது! பின் ஒவ்வொன்றாக மூன்று ஆகியது! தனக்கும் குழந்தைக்கும் ஒரு சீட்டு என்பது ஒற்றுமை நயம். மூன்று கொடை வாங்கியது வேற்றுமை நயம் என்றார் கவியரசு. இப்படிப் பாடம் நடத்தினால் இலக்கணம் கசக்குமா?

இன்னொரு நிகழ்ச்சி. உ.வே.சா. ஒரு முறை திருக்காட்டுப்பள்ளிக்கு வந்திருந்தார். ந.மு.வே.நாட்டாரும் கவியரசும் சிலப்பதிகார உரை எழுதிக் கொண்டிருந்தனர். கவியரசின் மாணவர் ஒளவை துரைசாமிப் பிள்ளையும், தமிழவேள் உமாமகேசுவரனாரும் அப்போது உடன் இருந்தனர். தேள் கொட்டியதால் மருந்துண்டு தேறிய நண்பர் ஒருவர், "கடித்த வாய்தான் கடுக்கிறது'' என்றார். "கடியும் கடுக்கிறதும் ஒன்றுதானே?'' என்று தமிழவேள் கேட்டார். தமிழ்த்தாத்தா கவியரசரைப் பார்த்தார். கவியரசு தம் மாணவரைப் பார்த்து, "நீர் சொல்லும்'' என்று தலையாட்டினார். ஒளவை துரைசாமிப்பிள்ளை, "கடி என்னும் உரிச்சொல் கடுக்கிறது எனத் திரிந்து வினை ஆயிற்று. கடுத்தது காட்டும் முகம் போல்'' என்று கூறினார். தமிழ்த்தாத்தா உடனே, "கவியரசரிடம் இலக்கணம் கற்றவர் என்று நிறுவினீர்கள். எடுத்துக்காட்டுகளுடன் இனிமையான இலக்கணம் கற்பிப்பவர் என்றால் கவியரசுதான்'' என்று பாராட்டினார். மேலும், "சீவகசிந்தாமணியை நான் பதிப்பித்தபோது பொறாமையால் பலர் குறை கூறி எழுதினார்கள். ஆனால், உண்மையிலேயே திருத்தங்களை எடுத்துக்காட்டிப் "பெயர் விழையான்" என்ற புனைப்பெயரில் கவியரசு மடல் அனுப்பியிருந்தார். என்னையே திருத்திய பெரும்புலவர் என்ற புகழ் வேண்டாமென்று தன்னடக்கத்தால் பெயர் எழுதவில்லை'' என்று பலவாறு பாராட்டினார் உ.வே.சா.

தமிழ்ச்சங்கத்தின் மிகப்பெரும் பணி தனித்தமிழைப் பரப்பியது தான். தமிழவேள் உமாமகேசுவரனாரும் கரந்தைத் தமிழ்ச்சங்க இதழும் கல்லூரியும் தனித்தமிழில் ஊற்றங்கொள்ளக் கவியரசின் எழுத்தும் பேச்சும் தூண்டல் ஆகும். பா.வே.மாணிக்கநாயக்கரும் தனித்தமிழ் பரப்பி வந்தார்.

"பிரேரேபிக்கிறேன்" போய் "முன்மொழிகிறேன்" என்றும், "தீர்மானம்" போய் "முடிவு" என்றும் வந்தன. "போஜனம் ஆயிற்றா! எனக் கேட்பது தமிழ் மரபு'' என்று எழுதிய உ.வே.சா. தமிழ்ப்பொழிலின் எழுத்துத் தாக்குதலுக்கு ஆளானார். "உண்மைத் தமிழர் ஒவ்வொருவரும் தாம் பேசுங்காலும், எழுதுங்காலும் தமிழ்ச் சொற்களையே எடுத்தாளுதல் தமது கடமை என்று உறுதி கொள்ளல் வேண்டும். சிறார் முதல் கிழவர் ஈறாக உள்ளார் யாவரும் பிறமொழிக் கலப்பினை எவ்வாற்றானும் வேண்டாது விட்டொழித்தலைக் கடனாகக் கொள்ளல் வேண்டும்'' என்று "தமிழ்ப் பொழில்" இதழில் கவியரசு எழுதினார்.

ஆங்கிலக் கல்வியால் தமிழ்க் குழந்தைகள் சீர்கெடுகின்றன. இதை, "ஐந்துவயதிலிருந்தே தங்கு தடையின்றிப் பேசக்கற்றிருந்த தாய்மொழியில் இப்போது பேசுவதற்குத் தம்மால் இயலாது என்கின்றனரே! ஆங்கிலம் படித்த வாழ்வுதான் என்னே!'' என்று வருந்தி எழுதியுள்ளார்.

கரந்தைச் தமிழ்ச்சங்கத்தின் வழியாகவும், திருவையாறு அரசர் கல்லூரியில் பணியாற்றியதன் மூலமும் எண்ணற்ற புலவர் பெருமக்களையும், தனித்தமிழ் அன்பர்களையும் உருவாக்கியவர் கவியரசு.

திருவையாறு கல்லூரி ஆண்டு விழாவில் பேசிய பெரும்புலவர் ஒருவர், "செந்தமிழ் என்று இக்காலத்தில் கூறுவதால் முக்காலத்தில் கொடுந்தமிழாக இருந்ததுபோலும்'' என்று பேசினார். உடனே அதை மறுத்து, "செஞ்ஞாயிறு இருந்தது என்றால் கருஞாயிறு இருந்தது என்று ஆகுமா? செந்தமிழ் என்றும் செந்தமிழ்தான்; செம்மொழிதான்'' என்று முழங்கியவர் கவியரசு வேங்கடாசலம்.


ஆசான் ஆற்றுப்படை (தூயபேதுரு பள்ளியில் தம் ஆசிரியராக இருந்த குயிலையா என்னும் சுப்பிரமணிய ஐயர் மேல் இயற்றியது)

  • மொழி அரசி
  • மணிமேகலை நாடகம்
  • செந்தமிழ்க் கட்டுரைகள் (தமிழ்ப்பொழில் இதழில் வந்த கட்டுரைகள்)

என்ற நூல்களையும்,

  • அகநானூறு உரை
  • வேங்கட விளக்கு

போன்ற உரை நூல்களையும் படைத்துள்ளார்.

ந.மு.வே.நாட்டாருடன் இணைந்து தொல்காப்பியம் - சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை என்ற நூலையும் பதிப்பித்துள்ளார்.

இலக்கண, இலக்கியங்களில் துறைபோகியவரும், சிறந்த மாணவர்களை உருவாக்கியவரும், தமிழுக்குப் பெருமை சேர்த்தவருமான கவியரசர், 1953ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.

கரந்தை என்று கூறினாலே கவியரசரின் பெயரும் அவரது தமிழ்த்தொண்டும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.


No comments:

Post a Comment