அரிய பொக்கிஷம் ஆனந்தரங்கப் பிள்ளை நாள்குறிப்பு!

on Monday, November 22, 2010


1709 மார்ச் 30ம் தேதி புதுச்சேரியில் பிறந்த ஆனந்தரங்கப் பிள்ளை, கப்பல் ஓட்டிய முதல் தமிழர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

அவர் உபயோகப்படுத்திய கத்தியும், கைத்துப்பாக்கியும் அவரது படுக்கை அறையில் தூசுபடிந்து ஒட்டடை மூடிக் கிடக்க, அவைகளோடு கேட்பாரற்றுக் கிடந்தவைதான் அவரது நாள்குறிப்பேடுகள். தினப்படி சேதிக் குறிப்பு என்கிற தலைப்பில் எழுதப்பட்டிருந்தன அந்த நாள்குறிப்பேடுகள்.

பிரெஞ்சு-இந்திய ஆளுநர் டூப்ளே காலத்தில் அவரது தலைமை "துவிபாசி"யாகப் (மொழிபெயர்ப்பாளர்) பணியாற்றியவர் ஆனந்தரங்கப் பிள்ளை. தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு, சம்ஸ்கிருதம், போர்ச்சுகீசியம் எனப் பல மொழிகளை அறிந்தவர்.

தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிம்ம மகாராஜாவுக்கு கடன் கொடுக்கும் அளவுக்குப் பெரிய செல்வந்தர். தென்னிந்திய அரசியலில் சாணக்கியராகத் திகழ்ந்த அவர் "ஆனந்த புரவி" எனும் கப்பலுக்குச் சொந்தக்காரர். வெளிநாட்டு வணிகங்களுக்கு இக்கப்பலை அவர் பயன்படுத்தியுள்ளார்.

1846ம் ஆண்டு கலுவா மோம்பிரன் என்ற தமிழ் அறிந்த பிரெஞ்சுக்காரர் ஆனந்தரங்கப் பிள்ளையின் மாளிகையில் நுழையும் போதுதான் அவரது நாள்குறிப்பேடுகள் மானிடக் கண்களுக்குத் தெரிய வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

1736 செப்டம்பர் 6ம் தேதி தொடங்கப்பட்ட நாள்குறிப்பு 1760 செப்டம்பர் 6ம் தேதியுடன் முடிகிறது.

இந்த நாள்குறிப்பு முழுவதும் ஒரே நடையில் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இவர் அரசியலிலும், வணிகத்திலும் தீவிரமாக ஈடுபட்ட காலங்களில் எழுதப்பட்ட நாள்குறிப்புகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இருபத்தைந்து ஆண்டு கால தமிழக, இந்திய, உலக அரசியல், பண்பாட்டு, சமயச் செய்திகளை வெளிப்படுத்தி உள்ளன.

மோம்பிரன் தான் கண்டுபிடித்த நாள்குறிப்பை தன் சொந்த உபயோகத்துக்காக ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொண்டார். பின்பு தமிழில் இருந்தவற்றை பிரெஞ்சில் மொழியாக்கம் செய்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னால், பிரெஞ்சு அரசின் கீழ் புதுவையில் செயல்பட்ட எதுவாத் ஆரியேல் என்பவர், மூல நாள்குறிப்பை பிரதி எடுத்து பாரீஸ் தேசிய நூலகத்தில் சேர்த்தார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் சென்னை ஆவணக் காப்பகத்தின் காப்பாளராக இருந்த ஹெச். டாட்வெல்லின் உதவியோடு நாள்குறிப்பு முழுதும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. பின்னர் அது 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இந்த வேலை 1917ல் தொடங்கப்பட்டு 1928ல் முடிக்கப்பட்டது.

ஆனந்தரங்கப் பிள்ளை பல மொழிகள் அறிந்திருந்தும், தனது நாள்குறிப்பை தாய்மொழியான தமிழில்தான் எழுதினார் என்பதில் தமிழ்த்தாய்க்குப் பெருமையே. இருந்தும் அவரது நாள்குறிப்பு பிரெஞ்சு மொழியில்தான் முதன்முதலில் மக்களுக்குப் படிக்கக் கிடைத்தது. பின்னர் ஆங்கிலத்தில் கிடைத்தது.

நாள்குறிப்பு எழுதப்பட்டு ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் தமிழில் கிடைத்தது. அதுவும் முழுமையாக இல்லை.

அன்று வரை நாள்குறிப்பு தமிழில் கிடைக்காதது குறித்து வருத்தப்பட்ட புதுவையில் உள்ள பிரெஞ்சுத் துணைத் தூதரகம் முழு முயற்சி எடுத்து 1948ம் ஆண்டு வேலையைத் தொடங்கியது.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து புதுச்சேரி சுதந்திரம் பெற்றது. அதன்பின் அந்த அச்சுவேலை கிடப்பில் போடப்பட்டிருக்க வேண்டும்.

தமிழில் படிக்க ஆனந்தரங்கப் பிள்ளை நாள்குறிப்பு கிடைக்கவில்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த தமிழர்களுக்கு புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் புண்ணியம் கட்டிக் கொண்டது.

1998ம் ஆண்டு நாள்குறிப்பின் முதல் எட்டு தொகுதிகளை ஒன்பது நூல்களாகப் பதிப்பித்தது. கடைசி நான்கு தொகுதிகளை 2005ல் பதிப்பித்து 2006ல் வெளியிட்டது. ஆனந்தரங்கப் பிள்ளையின் நாள்குறிப்பைப் பற்றித் தெரிந்தவர்கள் அது விலை மதிப்பில்லா அரிய பொக்கிஷம் என்று அறிவர்.

கலுவா மோம்பிரன் மட்டும் ஆனந்தரங்கரின் மாளிகை அழகை மேம்போக்காக இரசித்துக் கொண்டு சென்றிருப்பாரேயானால், இந்த நாள்குறிப்பு மக்கி மண்ணாய்ப் போயிருக்கும். தமிழ்த்தாயின் மகுடத்தில் ஒரு வைரக்கல் குறைந்து போயிருக்கும். பதினெட்டாம் நூற்றாண்டுப் புதுச்சேரியின் வரலாறு இன்னும் இருட்டிலேயே மூழ்கிக் கிடந்திருக்கும்.

புதுவை மாநில ஆளுநர்களில் சக்கரவர்த்தி என்று குறிப்பிடப்படும் டூப்ளேயின் வாழ்க்கை வரலாற்றில் நமக்குப் பல அத்தியாயங்கள் கிடைக்காமலே போயிருக்கும். 1741 மார்ச்சில்,

  • மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது
  • இலஞ்சம் கொடுத்துப் பணி பெறுவது
  • கண்ட இடங்களில் மலம் கழிப்பவர்க்குத் தண்டனை தருவது
  • கிறிஸ்தவ கோயிலில் தாழ்த்தப்பட்டவருக்கும் ஏனையவர்க்கும் தனித்தனி இடம் ஒதுக்கியதால் பிரச்னை ஏற்பட்டது
  • பிரமாண்டமாக நடந்த திருமண நிகழ்ச்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகள்
  • சாதிச் சண்டைகள் குற்றங்களுக்கு வழங்கப்பட்ட விசித்திரமான தண்டனைகள்
  • வணிகம் பற்றிய ஏராளமான செய்திகள்
  • அரசியல் சதுரங்கத்தில் ஆனந்தரங்கர் நகர்த்திய காய்கள் எவ்வாறு வெற்றியைத் தந்தன

முதலிய பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது.

அரசாங்கத்தில் துவிபாசி பதவி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆளுநர் கூடவேயிருந்து அரசாங்க நடப்புகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்புடையவர் அவர். அரசாங்கம் என்று ஒன்றிருந்தால், அதன் இரகசியம் என்று பல இருக்கும். இவற்றை வேறு யார் காதிலும் போடக்கூடாது என்ற எண்ணத்தோடு, தன் குறிப்பேடுகளுக்கு மட்டும் கூறியிருக்கிறார் ஆனந்தரங்கர்.

ஆனந்தரங்கரின் காதோ எலிக்காது. கண்ணோ கருடனின் கண். இந்த நாள்குறிப்பின் உயிர்நாடியே இவைகள்தான். பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் புதுச்சேரியின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு அது "டூப்ளே கால" இந்தியாவையும் படம்பிடித்துக் காட்டுகிறது.

  • அரசியல் சூழ்ச்சிகள், கலகங்கள், முற்றுகைகள்
  • குடும்பச் சச்சரவுகள், வம்பு பேச்சுகள்
  • சமுதாய நிகழ்ச்சிகள், மதச் சடங்குகள், பண்டிகைகள்
  • கப்பல் போக்குவரத்து, வாணிப நிலை
  • ஆங்கிலேயரின் போக்கு, பிரெஞ்சுக்காரர்களின் அரசாளும் திறன்
  • போர்த் தந்திரங்கள், அன்னியர் அடித்த கொள்ளை, அக்கால மக்கள் பட்ட பாடு
  • அக்காலப் பிரமுகர்களின் வரலாறு, நீதியுரைகள், சோதிடக் குறிப்புகள்

என்று பல.

அதோடு மட்டுமல்லாமல் டூப்ளே, டூப்ளே மனைவி, இலபூர்தோனே, பராதி, இலாலி தொல்லாந்தால் போன்றவர்களின் வீரப் பராக்கிரமங்கள், அவர்களின் உரையாடல்கள், தில்லி, ஹைதராபாத், திருச்சி, தஞ்சாவூர், வந்தவாசி, ஆர்க்காடு போன்ற இடங்களில் நடந்த சம்பவங்கள் என்று பலவற்றுக்கு தன் நாள்குறிப்பில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்.

பல மொழிகளில் ஆனந்தரங்கர் புலமையுடையவர் என்பதை நாள்குறிப்பை நாம் புரட்டும்போதே தெரிந்து கொள்ளலாம். புலமைப்பற்று கொண்டு பல புலவர்களுக்கு உதவிய புரவலராயிருந்த ஆனந்தரங்கர், தன் நாள்குறிப்பை பண்டிதத்தமிழில் எழுதாமல் மக்கள் தமிழிலேயே எழுதினார் என்பது ஒரு சிறப்பு அம்சமாகும்.

நாள்குறிப்பு விறுவிறுப்பாகச் செல்வதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஆனந்தரங்கர் உயிரோடு நின்று நம்மிடம் பேசுகிறாரோ என்ற பிரமிப்புகூட நம்மிடையே தோன்றுகிறது.

ஆனந்தரங்கரின் ஜூன் இருபத்தொன்றாம் நாள் சேதிக் குறிப்பு தேவனாம்பட்டினம் போர் பற்றிய அனைத்துத் தகவல்களையும் முன்வைக்கிறது. ஆளுநரைப் பார்க்கச் செல்லும் ஆனந்தரங்கரிடம், "நம்முடையவர்கள் நேற்று இராத்திரி போனவர்கள் கூடலூர் பிடிச்சுக் கொண்டார்களாம். செவுரோடு விழுந்தார்கள். தன் பேரிலே உள்ள சிறுது இராணுவுகள் கறனட்டகஸ்தானிருந்தார்கள். அவர்களையெல்லாம் வெட்டினார்களாம். கொஞ்சநஞ்சம் பேரிருந்தவர்கள் கதவைத் திறந்து ஓடச்சே வெளியிலே நம்முடையவர்கள் பிடித்துக்கொண்டு சரி கட்டிப் போட்டதாகவும் சிறிதுபேர் தப்பி ஓடிப்போனதாகவும் இப்படியாக ஒருத்தன் வந்து இப்போதான் மதாமுடனே சொன்னான். ஆனால் வெகுபேர்கள் செத்துப்போயிருப்பார்கள். வெகு சாக்குகளிருக்குமென்று" கடலூர் பிடிபட்ட தகவலைக் கூறுகிறார் ஆளுநர்.

ஆளுநரின் இந்த வெற்றி எக்களிப்பிற்குப் பின் அவர் மனத்திலோடும் எண்ணங்களை அறிந்தவர்போல் "துரையவர்களுக்கு பெண்சாதி யித்தனை நிர்வாகம் பண்ணிக்கொண்டு தமக்கு அலுவலில்லாமல் பண்ணி நடப்பித்துக் கொண்டு போரானே யென்கிற உச்சாகம் ஒரு பாரிசம் தோற்ற, மற்றொரு பாரிசம், தன் பெண்சாதியைத் தொட்டு கூடலூர் தேவனும் பட்டணம் பிடச்சோமென்கிறது, சீர்மையிலே பிராஞ்சு இராசா முதலான இராசாக்கள் யெல்லாம் கொண்டாடலும், இந்தியாவிலே இருக்கப்பட்ட துலுக்கர் முதலான நபாபுகள், அமீர்கள், இராசா முதலாகிய பேர்கள், முன் சென்னப்பட்டணம் முசியே இலபுர்தொன்னே பிடித்துப் போட்டுபோக, யிவரைக் கொண்டாட கிடைச்சாப்போலே, இப்போதான் பெண்சாதியைக் கொண்டாடுவார்கள் என்கிற உச்சாகம் சரீரம் பூரிக்கப்பண்ண, யிந்தமட்டிலே இவள் யோசனையின் பேரிலே யல்லோ கூடலூர் சுறாயசமாய் கைவச மாச்சுதென்று சந்தோஷம்'' என்று எழுதுகிறார் அரங்கர்.

சரித்திரம் படைத்த இந்தியர்களின் சரித்திரத்தை வெள்ளைக்காரன்தான் எழுதினான் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால், இந்தியர்களுக்கு சரித்திரக் கருத்தில்லை என்பதை ஏற்பதற்கில்லை. 1761 ஜனவரி 11ம் தேதி இன்னுயிர் நீத்த ஆனந்தரங்கப் பிள்ளைகூட பொக்கிஷம் போன்ற நாள்குறிப்பினை விட்டுத்தானே சென்றிருக்கிறார்.

திறனாய்வுச் செம்மல் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை



தமிழ் மொழியின் தொன்மையையும், உயர்வையும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர் பூரணலிங்கம் பிள்ளை.

இவர் நம் மண்ணின் மரபுகளையும், மக்களின் அறிவியல் சிந்தனைகளையும், இயற்கையோடு இணைந்த வழிபாட்டு நெறிமுறைகளையும் உயர்த்திப் பிடித்தார். பிற்காலத்தில் திராவிட இயக்கம் கையிலெடுத்த பல கொள்கைகளுக்கு இவர்தான் முன்னோடியாகத் திகழ்ந்தார் எனலாம்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வளமான நன்செய் வயல்கள் சூழ்ந்த "முந்நீர்ப்பள்ளம்" என்னும் கிராமத்தில் 1866ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி பிறந்தார். இவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவனது திருப்பெயராகிய "பூரணலிங்கம்" என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. இவருடைய பாட்டனார் பெயரும் பூரணலிங்கம் தான். முந்நீர்ப்பள்ளத்தைச் சேர்ந்த சைவர்கள் "பூரணம்" என்று பெயர் வைத்துக் கொள்வது இயல்பு. பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பரமக்குடி நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். பின் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன்,

  • பாளையங்கோட்டை இந்துக் கல்லூரி
  • சென்னை கிறிஸ்தவக் கல்லூரி
  • கோயம்புத்தூர் புனித மைக்கேல் கல்லூரி
  • மதுரை அமெரிக்கன் கல்லூரி
  • திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரி


ஆகிய கல்வி நிறுவனங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

ஆங்கிலப் பேராசிரியராக இருந்த பூரணலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பற்றும், தமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்ததுடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1902ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் பாடத்தை நீக்க முயன்றபோது பூரணலிங்கம் பிள்ளை அதனைக் கடுமையாக எதிர்த்துத் தடுத்தார்.

1885ஆம் ஆண்டு பூரணலிங்கனார் பரிதிமாற்கலைஞரையும் அழைத்துக் கொண்டு ஹர்சன் பிரபுவைச் சந்தித்து செம்மொழியாகும் தகுதி தமிழுக்கே முழுமையாக உள்ளது என வாதிட்டார். தமிழ்மொழியின் தொன்மையையும், உலக மனித இனத்தை ஒன்றென அன்பு கொள்ளும் நாகரிகத்தையும், இயற்கையோடு இணைந்து சிந்திக்கும் வாழ்வியல் பண்பாட்டுச் சிந்தனைகளையும், பல்வேறு மொழிகளுக்குத் தாயாகிய போதும் தன் தனித்தன்மை குன்றாத இலக்கிய, இலக்கண வளங்களைக் கொண்டு விளங்குவதையும் தொகுத்து அரசுக்கு அவர் மனு அளித்தார். தமிழைச் செம்மொழியாக்க வேண்டிய தேவையை ஊர் ஊராகச் சென்று அவர் முழங்கினார்.

பூரணலிங்கம் பிள்ளை எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். "கருணாமிர்தசாகரம்" போன்ற அதிகப் பக்கங்களைக் கொண்ட நூல்களைக் கூட முழு மூச்சில் வாசித்து முடிப்பார். இவர் எழுதுவதிலும் வல்லவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பணியாற்றியபோது "ஞான போதினி" என்ற மாதப் பத்திரிகையை நடத்தினார். பின்னர், நீதிக் கட்சியினரின் "நீதி" என்ற ஆங்கிலப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றி சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார்.

தமிழ் நாட்டில், தமிழரின் பண்பாட்டையும், அறிவியல் சிந்தனைகளையும், தொழில் நுட்பங்களையும், மரபுகளையும், பண்பாட்டையும் கற்றுக் கொடுக்கும் வகையில், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வலியுறுத்தி எழுதியும், பேசியும் வந்தார். இவற்றின் பயனாக பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு இராமநாதபுரம் மன்னர் தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்தது. அந்தக் குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார். அம்முயற்சியின் விளைவே இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

பூரணலிங்கனாரின் படைப்புகளில்,

  • சிறுகதை
  • நாவல்
  • கவிதை
  • நாடகம்
  • குழந்தை இலக்கியம்
  • ஆய்வுக் கட்டுரைகள்
  • மொழி மாற்றம்
  • சொற்பொழிவு

எனப் பல வீச்சுகளைக் காண முடிகிறது.

இளமையில் கற்ற தமிழ்க் கல்வியும், தமிழறிஞர்களின் நட்பும்தான், இவரைத் தமிழ்ப் பற்றாளராக மாற்றின.

மேலப்பாளையம் பள்ளியில் பயிலும்போது,

  • சுந்தரம் பிள்ளையிடம் இலக்கணமும்
  • முத்துசாமிப் பிள்ளையிடம் திருக்குறளும்

பயின்றார்.

பிற்காலத்தில்,

  • மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
  • பரிதிமாற்கலைஞர்
  • கோவை சிவக்கவிமணி சுப்பிரமணிய முதலியார்

ஆகியோரின் நட்பைப் பெற்றார்.

தமிழ் மொழியின் உயர் சிந்தனைகளைப் பிற மொழியாளரும் அறிந்து கொள்ளும் வகையில் பல நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பன்னிரண்டு பக்கங்களில் ஆராய்ச்சி முன்னுரையும் எழுதினார். திருக்குறள் குறித்துத் திறனாய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியா" என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழரின் உயர்ந்த அறிவியல் சிந்தனைகளையும், பண்பாட்டையும், வரலாற்று ஆதாரங்களோடு சுட்டிக் காட்டியுள்ளார். திராவிட நாகரிகமே இந்தியா முழுவதும் பரந்து விளங்கியது என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்காக "தமிழ் இலக்கிய வரலாறு" என்ற ஆங்கில நூலை எழுதினார்.

"பத்துத் தமிழ் முனிவர்கள்" என்ற நூலில் மாணிக்கவாசகர் முதல் பட்டினத்தடிகள் வரை உள்ள சமயச் சான்றோர் பதின்மர் வரலாற்றையும், அவர்களுடைய தத்துவங்களையும் விளக்கியுள்ளார்.

இவர் எழுதிய,

  • இராவணப் பெரியோன்
  • சூரபதுமன் வரலாறு
  • ஆகியன இலக்கியத் திறனாய்வு நூல்களுள் புதிய நோக்கில் அமைந்தவை.
  • பூரணலிங்கம் பிள்ளை,
  • தமிழில் 18 நூல்களையும்
  • ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும்
  • சட்ட நூல்களையும்

எழுதியுள்ளார்.

ஒரு நூலின் அணிந்துரை எத்தகைய கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் முந்நீர்ப்பள்ளம் ஈஸ்வரமூர்த்தியா பிள்ளை நூலுக்கு அளித்துள்ள அணிந்துரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஆசிரியர் பணியிலிருந்து 1926இல் ஓய்வு பெற்று முந்நீர்ப்பள்ளத்திற்குத் திரும்பி வந்த பின் பல்வேறு கட்டங்களில் இலக்கியச் சொற்பொழிவாற்றி வந்தார். திருநெல்வேலியில் இயங்கி வந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரண்டாவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கி (1940) வழி நடத்தினார். உயர் ஜாதி அல்லாத மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அவர் உழைத்ததை பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் எழுதிய கடிதத்தின் மூலம் அறிய முடிகிறது.

மனித குலத்தார் அனைவருக்கும் தன்னலத்திற்கு அப்பால் சமூக நீதிக்கான ஒரு இலட்சிய வாழ்க்கை இருக்கிறது என்பதை வாழ்ந்து காட்டியவர் பேராசிரியர் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை. அவ்வாறு வாழ்ந்த பூரணலிங்கம் பிள்ளை, தமது 81வது வயதில், 1947ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

அவருடைய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அவரது தமிழ்ப் பணிக்கும், தமிழ் உணர்வுக்கும் அளிக்கப்பட்ட உயரிய மரியாதையாகும்.



ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை



யாழ்ப்பாணத்தில் பிறந்த அப்பெருந்தகை, தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்து, தலைசிறந்த தமிழ்த் தொண்டாற்றி, வரலாற்றில் நிலையானதோர் இடமும், நெடிய புகழும் பெற்றார். 'தேசப்பற்றும், சமயப் பற்றும், மொழிப்பற்றும் அற்ற மனிதர் இருந்தென்ன? இறந்தென்ன?' என வினவினார், அப்பெருமகனார். பண்டைக்கால இலக்கியங்களைப் பதிப்பிப்பதைத் தம் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். ஏடுகளைத்தேடி, இரவு பகல் பாராது தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். பதிப்புப் பணியில் முன்னோடியாய், பத்திரிகைப்பணியில் முன்மாதிரியாய்த் திகழ்ந்த அப்பெரியார், செந்தமிழ்ச் செம்மல் சி. வை. தாமோதரம்பிள்ளை ஆவார்.

தாமோதரம் பிள்ளை, தமது இருபதாவது வயதிலேயே 'நீதிநெறி விளக்கம்' எனும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டு, அறிஞர்களின் கவனத்தக் கவர்ந்தார்.

1868 ஆம் ஆண்டு, தமது முப்பத்தாறாம் வயதில், தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையைப் பதிப்பித்தபோது, நல்லூர் ஆறுமுக நாவலரின் அறிவுரையை ஆதாரமாகக் கொண்டார், தாமோதரம்பிள்ளை. அதனைத் தொடர்ந்து 'வீரசோழியம்', 'திருத்தணிகைப் புராணம்', 'இறையனார் அகப்பொருள்', 'தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை, கலித்தொகை, இலக்கண விளக்கம், சூளாமணி, தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை ஆகிய பழமையான நூல்களச் செம்மையாகப் பதிப்பித்து, புலமை கொண்ட சான்றோரின் புகழ்க் கைக்கொண்டார் தாமோதரம்பிள்ளை.

பிள்ளைவாளின் பேரார்வமும், பேருழைப்பும் - பேணுவாரற்று நீர்வாய்ப் பட்டும், தீவாய்ப்பட்டும், செல்வாய்ப்பட்டும் அழிந்து வந்த தமிழ் ஏடுகளை, தனிப் பெரும் பழைய இலக்கியங்களைத் தமிழ் மக்களுக்கு அரிய சொத்துகளாக்கின. எடுக்கும்போதே ஓரம் ஓடியும்; கட்டை அவிழ்க்கும் போதே இதழ் முறியும். புரட்டும் போதே திண்டு துண்டாய்ப் பறக்கும். இன்னும் எழுத்துக்களோ வாலும் தலையுமின்றி நாலுபுறமும் பாணக்கலப்பை உழுது கிடக்கும். இத்தகைய நிலையிலிருந்த ஏட்டுச் சுவடிகளை, பூக்களைத் தொடுவதுபோல் மெல்ல மெல்ல அலுங்காமல் நலுங்காமல் பிரித்தெடுத்து, பிரதி செய்து, பதிப்பித்த அப்பெருந்தகை, 'தமிழ் மாது நும் தாயல்லவா? அவள் அங்கம் குலைந்து அழிகின்ற தருணத்திலும் நமக்கென்னவென்று நாம் இருக்கலாமா?' எனத் தமிழறிஞர்களைப் பார்த்துக் கேட்டார்.

திருக்குறள், திருக்கோவையார், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய நூல்களப் பதிப்பித்துத் தமிழுக்கும், சைவத்துக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த ஆறுமுக நாவலர், தாமோதரம்பிள்ளைக்குப் பதிப்புத்துறையில், வழிகாட்டியாக அமைந்தார். தொல்காப்பியத்தப் பதிப்பித்தபோது, 'தமிழ் நாடனைத்திலுமுள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவை யாவும், நான் தேடிகணட வரை ஈனஸ்திதி அடைந்திருப்பதால், இன்னும் சில வருடங்களுக்குள் அழிந்துவிடுமென அஞ்சியே, உலோகோபகாரமாக அச்சிடலானேன்' என அப்பெருமகனார், தமது தொல்காப்பியச் சேனாவரையருரைப் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது, எண்ணிப் பார்க்கத்தக்கது. 'தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும்' என்ற அரிய நோக்கங்களால், உரிய தொண்டாற்றிய ஒரு பெரும் தமிழார்வலராய்த் திகழ்ந்தார், தாமோதரம்பிள்ளை.

ஏட்டுப் பிரதியிலிருப்பதை, அச்சுருவம் பெறவைத்தல் எளிமையானதன்று. முதலில் ஏட்டிலுள்ள எழுத்துக்களைப் படிப்பதற்குத் தனித்திறமை வேண்டும். விளக்கத்தோடு அதனை வெளியிடத் தனிப்புலமை வேண்டும். திறமையும் புலமையும் கொண்டிருந்த தாமோதரனார், பதிப்புத் துறையில் நாட்டம் செலுத்தியதோடு, படைப்பாற்றலிலும் ஆர்வம் மிகக் கொண்டு, பல நூல்களை எழுதி வெளியிட்டார்.

'கட்டளைக் கலித்துறை', 'சைவ மகத்துவம்', 'சூளாமணி வசனம்', 'நட்சத்திர மாலை' ஆகிய நூல்களையும் 'காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி' எனும் நாவல் ஒன்றையும் இயற்றி வெளியிட்டுச் செய்யுள் திறத்திலும், உரைநடை வளத்திலும் ஓங்கு புகழ் பெற்றார். தாமோதரம்பிள்ளையின் செய்யுளில் அமைந்த செறிவை, ஒருமுறை மாயூரம் வேதநாயகம் பிள்ளை படித்துப் பரவசமடந்து,

"நீடிய சீர்பெறு தாமோதர மன்ன, நீள்புவியில் -

வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புற நீ -

பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன் யான்

கோடிப் புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறலரிதே!"

என எழுதி, பாடலைத் தாமோதரம்பிள்ளைக்கு அனுப்பி வைத்தாராம்.

ஏட்டுப் பிரதிகளைப் படித்து, பரிசோதித்து, பலபடியாக ஆராய்ந்து, வழுவின்றிப் பிரதி செய்கிறபோது. சில சந்தேகங்கள் தோன்றிவிடும். அதனைப் போக்கிக் கொள்ள உரியவர் கிடைக்காது, மன உளைச்சலில் உணவும் கொள்ளாது, உறக்கமும் கொள்ளாது சில நாள்கள் வருந்திக்கொண்டே இருப்பாராம் பிள்ளைவாள்! இலக்கியங்களின் பெயர்களையே தெளிவாக அறிந்திராத காலம் அது. எட்டுத் தொகையில் அடங்கிய எவை எவையெனக் கூடத் தெரியாத காலம். இன்னும் சொல்லப்போனால், 'சிலப்பதிகாரமா', 'சிறப்பதிகாரமா' என மயங்கிக் கொண்டிருந்த காலம். இத்தகைய காலக்கட்டத்தில் ஐயங்களைப் போக்கிக்கொள்ள யார் அகப்படுவர்? எனவேதான் "எனக்கு ஸ்ரீமத் சாமிநாதையரும் அவருக்கு நானுமே சாட்சி!" எனத் தாமோதரம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

லங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுப்பிட்டி என்னும் ஊரில் வைரவநாதபிள்ளையின் மகனாக, 1832 ஆம் ஆண்டில் பிறந்தார், தாமோதரம்பிள்ளை. அன்னையார் பெயர், பெருந்தேவி அம்மாள்.

பன்னிரண்டு வயதிற்குள்ளாகவே தமிழில் சில இலக்கிய, இலக்கண நூல்களத் தமது தந்தையாரிடமே முறையாகப் பயின்ற தாமோதரம்பிள்ளை, கவிராயர் முத்துக்குமாரரிடம் உயரிய இலக்கண, இலக்கியங்களக் கற்றுக் கொண்ட பின், அமெரிக்க மிஷன் பாடசாலையில் சேர்ந்து ஆங்கிலம் படித்தார். பின்னர் புகழ்பெற்ற யாழ்ப்பாணத்து 'செமினறி' என வழங்கிய சாத்திரக் கலாசாலையில் கணிதம், அறிவியல் ஆகியவற்றை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். கோப்பாய் சக்தி வித்தியாசாலையில், ஆசிரியர் பணியில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், முதன்முதலாக 1853 ஆம் ஆண்டில் 'நீதிநெறி விளக்கம்' என்னும் நூலினைப் பதிப்பித்து வெளியிட்டு, 'தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி' எனும் பெருமை பெற்றார். இளைய பருவத்தில் தாமோதரனார் கொண்ட நூல் வெளியீட்டு ஆர்வமே, தமிழ் மக்களுக்குத் தொல்காப்பியத்தையும், கலித்தொகையையும் நூல் உருவில் பெற்றுத் தந்தது. அழிந்து மறைந்து கொண்டிருந்த ஏட்டுச் சுவடிகள் பல, அச்சு வாகனமேறி, தமிழுக்குத் தனிப் பெருமையைக் கூட்டின!

யாழ்ப்பாணத்துப் பாதிரியார் 'பேர்சிவல்', ஆறுமுக நாவலரைக் கொண்டு தமிழில் பைபிளை வெளியிட்டதை அறிவோம். அந்தப் பாதிரியார் சென்னைக்குக் குடியேறி, 'தினவர்த்தமானி' எனும் தமிழ்ப் பத்திரிகையை நடத்தி வந்தார். அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்க, தாமோதரம்பிள்ளைக்கு அழைப்பு வரவே, அழைப்புக்கு உடன்பட்டு சென்னை சென்று, ஆசிரியர் ஆனார். ஆசிரியராக வீற்றிருந்த காலத்தில், ஆங்கிலேயர் பலருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த பிள்ளைவாள், சென்னை அரசினர் மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார்.

தாமோதரம்பிள்ளை பத்திரிகை ஆசிரியராகவும், கல்லூரித் தமிழ்ப் பண்டிதராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சென்னைப் பல்கலைக் கழகம் நிறுவப் பெற்று, முதன் முதலாகத் தொடங்கிய 'பி. ஏ.' தேர்வில், மாநிலத்தின் முதல் மாணவராக வெற்றி பெற்றார். பின்னர் 1871 இல் 'பி.எல்.' தேர்விலும் வெற்றி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, 1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்ற தாமோதரம்பிள்ளைக்கு 1895 ஆம் ஆண்டில் அரசினர் 'ராவ் பகதூர்' பட்டமளித்துப் பாராட்டினர்.

தாமோதரம் எந்தப் பணி ஆற்றினாலும், தமது சொந்தப் பணியாகக் கருதி ஏடு தேடுவதை, சுவடிகளைப் பிரதி எடுப்பதை, விளக்கமுடன் பதிப்பித்து வெளியிடுவதைத் தொடர்ந்து 'உயிர்த் தொண்டாக'க் கருதி, இரவு பகல் பாராது, தாகத்துடன் பாடுபட்டு, உழைத்துத் தமிழ் மொழியைச் செழுமைப்படுத்தினார். பொறாமை கொண்ட சிலர், அப்பெருமகனாரின் பணியைக் குறைத்து மதிப்பிடினும், தமிழறிஞர் உலகம், செயற்கரிய செயலைத் தெளிவாக உணர்ந்து, தாமோதரம்பிள்ளையைச் 'செந்தமிழ்ச் செம்மல்' எனப் பாராட்டி, போற்றி மகிழ்ந்தது.

தன்னரிய தமிழுக்குப் பன்னலம் பெருகச் செய்து, பதிப்புத் துறையின் 'முன்னோடி' எனப் புகழ் பெற்றுத் தமது அறுபத்தி ஒன்பதாம் வயதில், 1901 ஆம் ஆண்டில் தாமோதரம்பிள்ளை மறைந்தார். மறைந்தது அப்பெருந்தகையின் உடல் மட்டுமே. அப்பெருமகனார் உருவாக்கிய நூல்களும், ஊட்டிய உணர்வுகளும் என்றென்றும் மறையாதவை; ஆம், தமிழும், தமிழரும் உள்ளவரை நிலையானவை.

எழுதியவர்: குன்றக்குடி பெரியபெருமாள்

('தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்' நூலிலிருந்து தொகுக்கப்பட்டது)

சி. வை. தாமோதரம் பிள்ளையும் உ. வே. சாமிநாதையரும்

டி.ஏ. ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் 'தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்' (சென்னை, 1934) என்னும் நூலுக்கு அளித்துள்ள அணிந்துரையில் உ.வே.சாமிநாதையர் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்: "தமது ஓய்வு நேரத்தைத் தமிழ் ஆராய்ச்சியிற் பெரும்பாலும் செலவிட்டு, வீரசோழியம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம், கலித்தொகை, இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம் என்பனவற்றின் மூலங்களையும், உரைகளையும் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டவர் இவரே. இக்காலத்தில் தமிழில் பல துறைகளில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருந்துணையாக இருப்பன இவர் வெளியிட்ட புத்தகங்களாகும். இவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன்." சீவக சிந்தாமணி நூலை உ.வே.சா. அவர்கள் 1887-இல் வெளியிடுவதற்கு உதவியாக அதன் ஏட்டுப் பிரதிகள் இரண்டினைத் தாமோதரனார் அவருக்குக் கொடுத்து உதவியுள்ளார். ஒரு சமயம் சிந்தாமணியை அச்சிடக் காகிதம் வாங்கக் காசில்லாமல் உ.வே.சா கஷ்டப்படும் போது, சி.வை.தா. தனக்குத் தெரிந்த ஒரு காகித வியாபாரி மூலம் கடனில் காகிதம் ஏற்பாடு செய்து தருகிறார். இருவருக்கும் இடையில் நல்லுறவும் நட்பும் நிலவின என்பதும் சமயம் நேரும்போது ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர் என்பதும் இக்குறிப்புகளிலிருந்து நன்கு விளங்குகின்றன.

உண்மை இவ்வாறு இருக்க, சாமிநாதையர் முதுமைப் பருவம் அடைந்தபோது வெளிவந்த அவருடைய 'என் சரித்திரம்' எனும் நூலில், தாமோதரம் பிள்ளையை இழிவு படுத்தும் வகையில் சில செய்திகள் தரப்பட்டுள்ளன என்பது சிலர் கருத்து. 1930ஆம் ஆண்டுக்குப் பின் வெளிவந்த சாமிநாதையர் பதிப்புக்களில் அவருடைய திறமை மங்கிக் காணப்படுவதாகவும், அக்கால அளவில் சாமிநாதையருக்கு முதுமைப் பருவத்தால் அசதியும் மறதியும் தோன்றிவிட்டன என்றும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, 'தமிழ்ச்சுடர் மணிகள்' (சென்னை, 1968) என்னும் நூலில் தெரிவித்துள்ளார். சாமிநாதையர் 1930க்குப் பிறகே தம் சுயசரிதத்தை எழுதத் தொடங்கினார். தம் முதுமை காரணமாகப் பிறர் உதவியுடன் அவர் எழுதி வந்த அக்காலத்தில், அவ்வாறு உதவியவர்களின் மனப்போக்கால் இத்தகைய தவறுகள் அந்நூலில் இடம் மெற்றுவிட்டன' என்பதாக பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்கள் 'தற்காலத் தமிழ் முன்னோடிகள்' என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

ஆதாரம்: தமிழ் வளர்த்த சான்றோர்கள், சென்னை 1997

பரிதிமாற் கலைஞரின் (வீ. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் அவர்களின்) பாராட்டு

"காமோதி வண்டர் கடிமலர்ந்தேன் கூட்டுதல்போ

னாமோது செந்தமிழி னனூல் பலதொகுத்த

தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றுவெவர்

தாமோ தரமுடையார் தண்டமிழ்ச்செந் நாப்புலவீர்"

நாடகத்துறையில் தாமோதரம் பிள்ளை அவர்களின் பங்கு

1896இல் நாடகப் பேராசிரியரும் நீதிபதியுமாகிய பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் லீலாவதி, சுலோசனை ஆகிய இரண்டு நாடக நூல்களை இயற்றி வெளியிட்டபோது, அவற்றில் ஐம்பது பக்கங்களைச் சென்னைப் பல்கலைக்கழக எப்.ஏ. தேர்வுக்குப் பாடமாக வைப்பதற்குப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையைத் தாமோதரம்பிள்ளை அவர்கள் ஒப்புக் கொள்ளச் செய்தார். சென்னைப் பல்கலைக்கழகம் இக்காலத் தமிழ் நாடக நூல் ஒன்றைத் தேர்வுக்குப் பாடமாக வைத்தது அதுவே முதல் முறை என்று பம்மல் சம்பந்த முதலியார் 'யான் கண்ட புலவர்கள்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பதிப்புச் செம்மல் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை (1832 - 1901)


ஆய்வாளர்கள் தமிழ் நூல்கள் பதிப்பு குறித்த காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள்.

  • 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை ஆறுமுக நாவலர் காலம் என்றும்
  • 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தாமோதரம் பிள்ளையின் காலம் என்றும்
  • 20ஆம் நூற்றாண்டின் தொடக்கமான பகுதியை உ.வே.சாமிநாதய்யர் காலம் என்றும்

அவர்கள் வகுத்துள்ளனர்.


இவர்களில் "சி.வை.தாமோதரம் பிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்த குற்றத்துக்காக அவர் சரித்திரமாகிய தமிழ்ச் சரித்திரத்தை மறைக்க முயல்வது நன்றிக்கேடு" என்றும் "தமிழ்தந்த தாமோதரம் பிள்ளை" என்ற கட்டுரையில் சி.கணபதி பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

பதிப்புத்துறையில் தொண்டாற்றிய மேற்கண்ட மூன்று அறிஞர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது.

ஆறுமுக நாவலர் 1868இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் உரையைத் தான் ஆய்வுசெய்து தாமோதரம் பிள்ளையைக் கொண்டு பதிப்பிக்கச் செய்துள்ளார்.

"ஆங்கில மோகம் அதிகரிக்க, தொல்காப்பியப் பிரதிகள் அருகி, தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் சுருங்குவதை தாமோதரம் பிள்ளை கண்டார்; கண்ணீர் வடித்தார்...

தொல்காப்பியக் கடலில் இறங்கினார்" என்று பண்டிதர் சி.கணபதிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.

தமது 33ஆம் வயதில் உ.வே.சா., தாமோதரம் பிள்ளையைச் சந்தித்தார். அப்போது உ.வே.சா., சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்கும் எண்ணம் கொண்டு சுவடிகளை ஆய்ந்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அப்போது அச்சுத்துறை மிகவும் புதியது. தாமோதரம் பிள்ளையின் சந்திப்புதான் உ.வே.சா.வுக்கு அச்சிடும் ஊக்கத்தை அளித்தது. இதை உ.வே.சாவே, "இந்த நூலையும் (சீவகசிந்தாமணி), உரையையும் பின்னும் இரண்டொருமுறை பரிசோதித்தற்கு விருப்புடையனேனும், இவற்றை விரைவில் பதிப்பித்து பிரகடனஞ் செய்யும்படி, யாழ்ப்பாணம் ம.ஸ்ரீ.சி.வை.தாமோதரம் பிள்ளயவர்கள் பலமுறை தூண்டினமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்'' என்று 1887இல் சீவகசிந்தாமணி முதற்பதிப்பு முன்னுரையில் எழுதியிருக்கிறார்.


இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுப்பிட்டி என்னும் கிராமத்தில் வைரவநாத பிள்ளை - பெருந்தேவி தம்பதியினர்க்கு மகனாக 1882ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி பிறந்தார்.

தாமோதரம் பிள்ளை, சிறுவயது முதல் தமது தந்தையாரிடத்திலே வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம் போன்ற நூல்களைக் கற்றுணர்ந்தார். தொடர்ந்து சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர் என்பவரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்களையும் மேலும் சில இலக்கண நூல்களையும் பயின்றார்.

பிள்ளையவர்களின் ஆங்கிலக்கல்வி தெல்லிப்பிழை அமெரிக்க மிஷன் பள்ளியில் தொடங்கியது. மேலும் ஆங்கிலத்தில் உயர்கல்வியை யாழ்ப்பாணம் பல்கலையில் கற்றார். அங்கு கணிதம், தமிழ், ஆங்கிலம், தத்துவம் போன்ற பாடங்களில் முதல் மாணவராய்த் திகழ்ந்தார்.


ஆங்கில உயர்தரக்கல்வியை எட்டு ஆண்டுகள் பயின்றபின் தமது 20ஆம் வயதில் கோப்பாயிலிருந்த பள்ளியில் பிள்ளை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அக்காலத்திலேயே நீதிநெறிவிளக்க உரையை அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


சென்னையில் இருந்த பார்சிவல் பாதிரியார், தாமோதரம் பிள்ளையின் தமிழ் அறிவைக் கேள்விப்பட்டு அவரைச் சென்னைக்கு அழைத்து "தினவர்த்தமானி" எனும் இதழின் ஆசிரியராக்கினார். அவ்விதழைச் சிறப்பாக நடத்தி அதில் தனியான ஒரு வசன நடையைக் கையாண்டார் பிள்ளை. மேலும் இலஷ்சிஸ்டன் துரை போன்ற ஆங்கிலேயர்க்குத் தமிழும் கற்பித்து வந்தார். இதை அறிந்த அன்றைய அரசாங்கம், தாமோதரம் பிள்ளையை, இன்று மாநிலக் கல்லூரி என்றழைக்கப்படும் அன்றைய "சென்னை இராசதானி" க்கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்து மகிழ்ந்தார்கள்.


சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., தேறிய பிள்ளையை, கள்ளிக்கோட்டை இராஜாங்க வித்தியாசாலை உதவியாசிரியராகப் பணியாற்ற அழைத்தது. அப்பள்ளியில் பணியாற்றியபோது அவர் பல சீர்திருத்தங்கள் செய்து நிர்வாகத்துறையிலும் சிறந்து விளங்கினார். இதனால் அவருக்கு அரசாங்க வரவு - செலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளர் பதவியும், அப்பதவியில் காட்டிய திறமையினால் விசாரணைக்கர்த்தர் பதவியும் வந்து சேர்ந்தன. 1871இல் தாமோதரம்பிள்ளை பி.எல்.தேர்வில் வெற்றி பெற்றார்.

எப்பணியை மேற்கொண்ட போதிலும் தமது ஓய்வு நேரங்களில் தாமோதரம் பிள்ளை பழைய நூல்களை ஓலைச் சுவடிகளில் பயின்றுவந்தார். அச்சுவடிகள் ஓரம் சிதைந்தும், இதழ் ஒடிந்தும் சீரழிந்து இருந்தன. அச்சுவடிகளைச் சீராக்கி அச்சேற்றிப் பதிப்பிக்க வேண்டியது தமது தலையாய பணி என்று பிள்ளை கருதினார். ஏற்கெனவே தம் 20ஆம் வயதிலேயே நீதிநெறி விளக்கத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதால், பிள்ளைக்கு இப்பணி சுமையாகத் தோன்றவில்லை. எனினும் எந்நூலையும் நாவலரவர்கள் பரிசோதித்தலே நன்று என்று கருதி அவருக்கே பிள்ளை உதவி செய்து வந்தார்.

இந்த நெருங்கிய தொடர்பினால் நாவலர் பரிசோதித்து அளித்த சொல்லதிகாரத்தைத் தம் பெயரினால் பிள்ளை முதன்முதல் 1868இல் வெளியிட்டார். இந்நூல் வெளிவந்து பதினொரு ஆண்டுகள் கடந்தபின் 1879இல் ஆறுமுகநாவலர் காலமானார். பிள்ளை மிகவும் மனம் வருந்தியதோடு நாவலரின் பணியைத் தாம் தொடர வேண்டுமென முடிவு செய்தார்.

நாவலரின் மறைவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிள்ளை அரசுப்பணியிலிருந்து விலகி முழுநேரத்தையும் தமிழ்ப்பணிக்கே செலவிடத் துணிந்தார். அதன் பயனாய்,

  • வீரசோழியம் (1881)
  • தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் (1883)
  • தொல்காப்பியப் பொருளதிகாரம் (1885)
  • கலித்தொகை (1887)
  • இலக்கண விளக்கம், சூளாமணி (1889)
  • தொல்காப்பிய எழுத்ததிகாரம் (1891)
  • தொல்காப்பிய சொல்லதிகாரம் (1892)


முதலியவை தாமோதரம்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தன.

  • இது மட்டுமன்றி,
  • கட்டளைக் கலித்துறை
  • வசன சூளாமணி
  • சைவ மகத்துவம்
  • நட்சத்திரமாலை

முதலிய நூல்களைத் தாமே எழுதி வெளியிட்ட பெருமை பிள்ளைக்கே உரியதாகும்.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் பிள்ளை, 1887ஆம் ஆண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 4 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றினார்.

மேலும்,

  • சென்னை திராவிடக் கிரந்த பரிபாலன சபை
  • நியாயப் பரிபாலன சபை
போன்ற அமைப்புகளில் உறுப்பினராயும் இருந்து சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் மாணவர் என்ற பெருமையையும் பெற்றார் தாமோதரம் பிள்ளை.

அன்றைய சென்னை அரசு இவருக்கு 1875இல் "இராவ்பகதூர்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இவ்வாறு சிறந்த பதிப்புச் செம்மலாக விளங்கியதோடு தமிழ் ஆசிரியராக, கணக்காயராக, நீதிபதியாக, தான் தோன்றிய துறையில் எல்லாம் புகழோடு தோன்றிய பிள்ளை, 1901ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல் நாள், வைகுந்த ஏகாதசித் திருநாளில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

பல பழைய இலக்கியங்களைப் பதிப்பித்தவர் உ.வே.சா. என்று மகிழும் நாம், பல பண்டைய இலக்கண நூல்களைப் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை என்பதை அறிந்து பெருமைப்பட வேண்டியது தமிழர் கடமை.

தமிழ்மணி - ஒப்பாரும் மிக்காரும் இல்லா வையாபுரிப் பிள்ளை!



கர்னாடக இசையின் மும்மூர்த்திகளைப் போலத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் மூவரை வரிசைப்படுத்திச் சொன்னால் அவர்கள்,

  • எஸ்.வி.பி. என்று அழைக்கப்பட்ட எஸ்.வையாபுரிப் பிள்ளை
  • ஆர்.பி.எஸ். என்று பரவலாகக் அறியப்படும் இரா.பி.சேதுப்பிள்ளை மற்றும்
  • தெ.பொ.மீ. என்று மரியாதையுடன் கூப்பிடப்படும் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

ஆகிய மூவராகத்தான் இருக்கும்.

மொழியியலில் தெ.பொ.மீ.யும், இலக்கிய ஆய்வில் ஆர்.பி.எஸ்.சும் தனித்துவம் காட்டினார்கள் என்றால் எஸ்.வி.பி.யின் பங்களிப்பு கால ஆராய்ச்சி மற்றும் தமிழில் பேரகராதித் தொகுப்பு என்று பன்முகப்பட்டதாக இருந்தது.


வையாபுரிப்பிள்ளை தமிழ் ஆராய்ச்சியில் விஞ்ஞான பூர்வமான பார்வை கொண்டு ஆய்வு செய்தவர். ஓர் இலக்கியம் பற்றி நன்கு அறிந்துகொள்ள வேண்டுமானால், அந்த இலக்கியம் தோன்றிய காலம் பற்றிய அறிவு முக்கியமானது என்று கருதி, இலக்கியம் தோன்றிய கால ஆராய்ச்சியில் தனி கவனம் செலுத்தியவர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை என்ற ஊரில் 1891ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி சரவணப்பெருமாள் - பாப்பம்மாள் தம்பதிக்கு மகனாய்ப் பிறந்த வையாபுரிப்பிள்ளை, பாளையங்கோட்டை புனித சவேரியர் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றவர். அந்த ஆண்டு சென்னை மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று "சேதுபதி தங்க மெடல் (பதக்கம்)" பெற்ற பெருமைக்குரியவரும் அவரே.

தமிழில் ஆர்வம் அதிகமிருந்தும் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து வழக்கறிஞரானது மட்டுமல்ல, ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராகவும் பணிபுரிந்தார் அவர். பிறகு மூன்று ஆண்டுகள் வையாபுரிப் பிள்ளை திருநெல்வேலியிலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

வையாபுரிப் பிள்ளையின் நெல்லை வாழ்க்கையில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக,

  • "இரசிகமணி" டி.கே. சிதம்பரநாத முதலியார்
  • நீலகண்ட சாஸ்திரியார்
  • பேராசிரியர் சாரநாதன்
  • பெ. அப்புசாமி

போன்றோர் இருந்திருக்கிறார்கள் என்பதும், "இரசிகமணி"யின் "வட்டத் தொட்டி" ஏற்பட இவர்களது ஆரம்பகால இலக்கியச் சர்ச்சைகள் தான் பிள்ளையார் சுழி இட்டது என்பதும் பரவலாகத் தெரியாத விஷயம்.

வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த காலத்தில், வையாபுரிப் பிள்ளை எழுதிப் பிரசுரமான பல கட்டுரைகளும், இலக்கிய ஆய்வுகளும் அவரை அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தன. உ.வே. சாமிநாதய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை எஸ். வையாபுரிப் பிள்ளையைத் தான் சாரும். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு.

  • 1926ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியில் (ஏழு தொகுதிகள்) பதிப்பாசிரியர் பொறுப்பேற்றார் வையாபுரிப்பிள்ளை.
  • 1936ஆம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக விளங்கினார்.
  • 1946ஆம் ஆண்டு வரை அப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு, பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார்.

வையாபுரிப் பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தைப் பொற்காலம் என்றுதான் கூற வேண்டும். "வள்ளல்" அழகப்பச் செட்டியாரின் இல்லத் திருமண விழாவுக்கு அன்றைய திருவிதாங்கூர் திவான் சி.பி.இராமசாமி அய்யர் போன போது, தமிழுக்கெனத் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வுக்கட்டில் நிறுவ ஒரு இலட்சம் ரூபாய் அறக்கட்டளையாகக் கொடுத்தார். அப்படி தொடங்கப்பட்ட தமிழ்த் துறையின் முதல் தலைவராக மு. இராகவையங்கார் நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் பணிபுரிந்து அவர் ஓய்வு பெறும்போது தனக்குப் பிறகு அந்தப் பதவிக்குத் தகுதியானவர் எஸ். வையாபுரிப் பிள்ளை மட்டுமே என்பது இராகவையங்காரின் தேர்ந்த முடிவு.

மு. இராகவையங்காரின் அழைப்பை வையாபுரிப் பிள்ளை ஏற்றார் எனினும், ஒரு நிபந்தனை விதித்தார். "நான் விண்ணப்பிக்க முடியாது. அழைத்தால் ஏற்பேன்" என்பது எஸ்.வி.பியின் பதில். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் மு. இராகவையங்கார் செய்த பரிந்துரையின் பேரில், திருவிதாங்கூர் பல்கலைக்கழக ஆளுநர் குழு விண்ணப்பமே இல்லாமல் எஸ். வையாபுரிப் பிள்ளையை தமிழ்த் துறைத் தலைவராக நியமித்து ஆணை அனுப்பியது.

சுமார் நான்கு ஆண்டுகள் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக வையாபுரிப் பிள்ளை இருந்த காலகட்டத்தில்தான் மலையாள மொழி லெக்சிகன் (சொற்களஞ்சியம்) பதிப்பிக்கப்பட்டது. அதன் உறுப்பினாரகவும் பணியாற்றிய பெருமை வையாபுரிப் பிள்ளைக்கு உண்டு. இந்தக் காலகட்டத்தில் தான், பின்னாளில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக விளங்கிய வ.அய். சுப்பிரமணியம், ஆய்வு மாணவராக வையாபுரிப் பிள்ளையிடம் பணியாற்றி அவரது வாரிசு என்கிற பெயரையும் பெற்றார்.

வையாபுரிப் பிள்ளையிடம் ஆய்வு மாணவராக வ.அய். சுப்பிரமணியம் சேர்ந்தபோது, அவருக்குத் தரப்பட்ட முதல் பணி, பிரிட்டிஷ் கலைக் களஞ்சியத்திலிருந்து காந்தத்தைப் பற்றிய செய்திகளைத் திரட்டித் தருவது. காந்தத்தைப் பற்றிய செய்திகளை எஸ்.வி.பி. கேட்டதற்குக் காரணம் இருந்தது. காந்தம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்று கலைக்களஞ்சியத்தில் கூறப்பட்டிருந்தது. காந்தத்தைப் பற்றிக் கூறும் கலித்தொகை, அதனால் 2ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் தோன்றியிருக்க வேண்டும் என்று மு. இராகவையங்காரிடம் எஸ்.வி.பி. விளக்கியதாக சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.

சங்க கால மக்கள் அறிந்த மற்றும் பயன்படுத்திய உலோகங்களின் அடிப்படையில் எஸ்.வி.பி. காலநிர்ணயம் செய்வது சரிதானா?கலைக்களஞ்சியத்தின் செய்தி தவறாக இருந்தால் கால நிர்ணயம் தவறாகுமே?என்ற கேள்விக்கு, எஸ்.வி.பியின் பதில்,

"அந்த செய்தி தவறு என்று நிரூபணம் ஆகும் வரை அந்தச் செய்தியை ஏற்றுக் கொள்வதுதானே நியாயம்?"

தேவநேயப் பாவாணர் போன்றவர்கள், வையாபுரிப் பிள்ளை தமிழ் இலக்கியங்களின் காலத்தை சரியாக கணிக்கவில்லை என்றும், கிறிஸ்துவுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்தைப் பிற்பட்ட காலத்தது என்று கூறுவதாகவும் கண்டித்தனர்.

விமர்சனங்கள் எஸ்.வி.பியை சற்றும் பாதிக்கவில்லை. தமிழ் நூல்களைப் பிற்காலமாக வையாபுரிப் பிள்ளை கூறியதற்குக் காரணம் தெளிவுகளும், அவற்றிற்குரிய காலநிலையும் தான். தமது ஆய்வை அவர் முற்ற முடிந்த ஆய்வாகக் கருதவில்லை.

வையாபுரிப் பிள்ளையின் மேஜையில் எப்போதும் மானியர் வில்லியம்சின் சம்ஸ்கிருத - ஆங்கில அகராதி இருக்கும். "எந்தச் சான்றையும் கூடிய மட்டிலும் மூல நூலிலிருந்து அறிந்திட வேண்டும். ஆய்வில் பிறர் சொல்லை நம்புவது தகாது. சம்ஸ்கிருதச் சான்றுகளை நாமே படித்துப் பொருள் அறிதல் நல்லது. அதனால் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் நிச்சயம் சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்" என்பது எஸ்.வி.பியின் கருத்து.

பாராமல் படிக்கும் பழக்கம் எஸ்.வி.பிக்கு இல்லை. தான் கண்ட சான்றுகளையும், உதவும் செய்திகளையும் 300 பக்க அளவிலான ஒரு தடித்த நோட்டில் தனது கையெழுத்தில் குறித்துக் கொள்வார். கட்டுரையோ, நூலோ எழுதும்போது, அந்த நோட்டைப் புரட்டி, அதில் காணும் சான்றுகளைப் பயன்படுத்திக் கொள்வார். அவர் காலமான பின் அந்த நோட்டு எங்கே போனது என்று யாருக்கும் தெரியாது.


ஒவ்வொரு கட்டுரையையும் தனது கைப்படத்தான் எழுதுவார். ஆங்கிலக் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, பலமுறை சரிசெய்து பிழையின்றி வெளியிட முயல்வார். பல அறிஞர்கள் ஆங்கிலக் கட்டுரைகளைப் படிப்பதால் மிகக் கவனமாக வாதங்களை உருவாக்க வேண்டும் என்பார்.

தமிழின் பழம் பெருமைக்கு எதிரானவர் எஸ்.வி.பி. என்று அவரை திராவிடக் கட்சிகள் கடுமையாக விமர்சித்தபோது, அதை அவர் சற்றும் சட்டை செய்யவில்லை. இரா.பி. சேதுப்பிள்ளையைப் போலவே கம்பனின் கவிநயத்தில் தன்னைப் பறிகொடுத்த வையாபுரிப் பிள்ளை, "இரசிகமணி" டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தார். கம்பனை ஆதரித்தார் என்பதால் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல தமிழறிஞர்களில் வையாபுரிப் பிள்ளையும் ஒருவர்.

மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. ஆகிய இருவரிடமும் வையாபுரிப் பிள்ளைக்கு நெருங்கிய அறிமுகம் இருந்தது. தனது சிறைவாசத்துக்குப் பிறகு, அரசியல் வாழ்வில் வெறுப்புற்றிருந்த வ.உ.சிதம்பரனார், ஏட்டிலிருந்த இளம்பூரணரின் தொல்காப்பிய உரையைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு படியெடுத்தார். அதனை எஸ்.வி.பி.யிடம் காட்டி செப்பம் செய்தார். எஸ்.வி.பியையும் அதன் பதிப்பாசிரியராகத் தன்னுடன் இருக்குமாறு கேட்டதையும், ஆனால் எஸ்.வி.பியோ நீங்களே பதிப்பாசிரியராக இருந்தால் போதும் என்று மறுத்து விட்டதாகவும் அந்த உரைப் பதிப்பின் முன்னுரையில் வ.உ.சி. நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

  • சற்று குள்ளமான உருவம்
  • நீண்ட நேரப் படிப்பால் வீங்கிய இமைகளையுடைய கண்கள்
  • மாநிறம்
  • நல்ல விஷயங்களைக் கேட்டால் கடகடவென்று உரக்கச் சிரிக்கும் சுபாவம்
  • மனம் திறந்து பேசும் நெருக்கம்

ஆய்வுக்கென்றே தன்னை அர்ப்பணித்த அந்த மாமேதை தெளிவின் அடிப்படையில் மட்டுமே ஆய்வுகள் அமைந்திட வேண்டுமென்று வற்புறுத்தியவர். நல்ல ஆய்வாளன் பாராட்டையோ, மவுசையோ தேடிப் போக வேண்டிய அவசியமில்லை; அவை தாமாக வரும் என்று அழுத்தமாக நம்பியவர்.

தனது வாழ்நாளில் அவர் படித்து முடித்த புத்தகங்கள் கணக்கில் அடங்கா. தனது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மனி, மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில். அவை அனைத்தையும் கல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார் வையாபுரிப் பிள்ளை.

சங்கத் தமிழ் வார்த்தைகளுக்கு விளக்கங்கள் நல்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதியுடன் வையாபுரிப் பிள்ளையின் பங்களிப்பு முடிந்துவிடவில்லை. நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் அவர். "மனோன்மணியம்" உரையுடன் தொடங்கிய அவர் 1955ல் திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்துத் தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார். கம்பராமாயணத்துக்கு உரை எழுதிப் பதிப்பிக்க வேண்டும் என்கிற அவரது அவா மட்டும் நிறைவேறாமலே போய்விட்டது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்மொழி ஆய்வில் ஒப்பாரும் மிக்காரும் அற்ற மிகப்பெரிய ஆய்வாளரான வையாபுரிப் பிள்ளை 1956ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தனது 65வது வயதில் இயற்கை எய்தியபோது, தமிழ் அழுதது... தமிழ்த்தாய் அழுதாள்...

வையாபுரிப்பிள்ளையின் மறைவு குறித்து, "ஸ்ரீவையாபுரிப்பிள்ளை காலமானது தமிழ் உலகிற்கு ஈடு செய்ய முடியாத நஷ்டம். நிறைகுடம்; நற்பண்புகள் அனைத்தின் உறைவிடம். விஞ்ஞானியைப் போல உண்மையைக் கண்டறிவதையே இலட்சியமாகக் கொண்டு இலக்கியப் பணியாற்றிய ஆராய்சியாளர். தமக்குப் பிடித்தமான ஒரு நிலைக்கு ஏற்ப ஆராய்ச்சியை இழுத்துப் பொருத்தும் தன்மைக்கு நேர் எதிரிடையானவர். வாழ்க்கையைப் போலவே இலக்கிய சேவையிலும் அறநெறி நின்று அரும்பணியாற்றியவர்" என்று "தினமணி" (18.2.1956) நாளிதழ் தலையங்கமே எழுதித் தனது இரங்கலைத் தெரிவித்தது என்றால், அந்த மாமேதை எத்தகையவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

தமிழ்மணி - அருள்நெறித் தமிழ் வளர்த்த அடிகளார்




"அடிகளார்" என்பது துறவியைக் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச் சொல். எனினும், அப்பெயர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருவரையே குறிக்கும் சிறப்புப் பெயரானது தனி வரலாறு.

தமிழகத்துத் தஞ்சைத் தரணியில் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் கிராமத்தில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு, 1925ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன். அவருக்கு முந்திப் பிறந்த சகோதரர் இருவர்; சகோதரி ஒருவர்.

அப்போது அவன், நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன். வழக்கறிஞரும், தமிழ்ப்பேராசிரியருமான "சொல்லின் செல்வர்" இரா.பி.சேதுப்பிள்ளையின் வீட்டில், அவரது அறையின் ஜன்னல் முன் நின்று தினம் ஒரு திருக்குறள் ஒப்பித்துக் காலணா பெறுவது அரங்கநாதனின் வழக்கம். இவ்வாறு அரங்கநாதனின் வாழ்வை உயர்த்திய திருக்குறள், பின்னாளில் அடிகளாரான அவருக்குப் பொதுநெறி ஆகியது. இதே போல, அரங்கநாதனின் பிஞ்சு உள்ளத்தில் தீண்டாமை விலக்கு உணர்வும், மனிதநேயப் பண்பும் குறிக்கோள்களாகப் பதியக் காரணமானவர் அருள்திரு விபுலானந்த அடிகள் ஆவார்.

பள்ளி இறுதி வகுப்புவரை படித்த அரங்கநாதன், தருமபுர ஆதீனத்தில் கணக்கர் வேலை இருப்பதை அறிந்து 1944ஆம் ஆண்டு அப்பணியில் சேர்ந்தான். 1945 - 48 கால இடைவெளியில் முறைப்படி தமிழ் கற்று வித்துவான் ஆனதும் அங்கேதான். அத்திருமடத்தின் 25ஆவது பட்டமாக வீற்றிருந்த தவத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அரங்கநாதனைத் துறவுக்கு ஆட்படுத்திக் கந்தசாமித் தம்பிரான் ஆக்கினார்கள்.

1945ஆம் ஆண்டு தருமபுர ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரானாக நியமனம் பெற்ற கந்தசாமித் தம்பிரான், சமயம் தொடர்பான பல பணிகளைத் திறம்பட ஆற்றினார். அவர் தருமையாதீனத்தின் சார்பில், குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீன குருபூஜை விழாவொன்றில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்ற நேர்ந்தது. கந்தசாமித் தம்பிரானின் நாவன்மையால் கவரப்பட்ட குன்றக்குடித் திருமட ஆதீனகர்த்தர் திருப்பெருந்திரு ஆறுமுக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி தருமையாதீனத்திடம் இசைவுபெற்றுத் தமது திருமடத்துக்கு ஆதீன இளவரசராகக் கந்தசாமித் தம்பிரானை ஆக்கினார்.

அப்போது தெய்வசிகாமணி "அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்" என்ற திருப்பெயரும் அவருக்குச் சூட்டப்பட்டது.

1949ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஆதீன இளவரசராகிய அவர், 1952 ஜூன் 16ஆம் தேதி முதல் அத்திருமடத்தின் தலைமைப் பொறுப்பேற்று, 45ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கினார். பின்னர் தம் பணிகளால், அடிகளார் ஆகி, ஊர்ப்பெயர் இணைய, "குன்றக்குடி அடிகளார்" என்று மக்களால் சிறப்புடன் அழைக்கப்பட்டார். தவத்திரு அடிகளார் ஆதீனப் பொறுப்பேற்ற காலம், இந்து மதத்திற்கு மிகவும் சோதனையான காலம். இறைமறுப்புப் பிரசாரங்களால் தாக்குதலுக்கும், கண்டனத்துக்கும் உரியதாக இந்து மதம் ஆயிற்று. இதன் எதிர்கால விபரீதங்களை மனதில் எண்ணிய அடிகளார், காலத்திற்கேற்ப, இந்து மதத்தின் உன்னத சீலங்களைப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கினார். இதன்பொருட்டு 1952 ஆகஸ்ட் 11ஆம் தேதி சமயச் சான்றோர்களையும், பெருந் தமிழறிஞர்களையும் குன்றக்குடியில் ஒன்றுதிரட்டிப் பெரும் மாநாடு ஒன்றை நடத்தினார். அதன்விளைவாகத் தோன்றியதே "அருள்நெறித் திருக்கூட்டம்".

1954 ஜூலை 10ஆம் தேதி இதன் முதல் மாநாடு தேவகோட்டையில் மூதறிஞர் இராஜாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் முழு வீச்சோடு செயல்பட்ட இவ்வியக்கத்தின் கிளைகள் தமிழகம் மட்டுமல்லாது, இலங்கையிலும் கிளைத்தன. அதன் செயலாக்கப்பிரிவாக "அருள்நெறித் திருப்பணி மன்றம்" எனும் அமைப்பும் 1955 ஜூன் 10ஆம் தேதி கிளைத்தது. அப்போதைய தமிழக அரசின் துணையோடு தமிழ்நாடு "தெய்வீகப் பேரவை" எனும் அமைப்பு, 1966இல் முகிழ்த்தது. தருமை ஆதீன குருமகா சந்நிதானம் தலைமையேற்ற இப்பேரவையில் அவருக்குப்பின், 1969 முதல் 1976 வரை அடிகளார் தலைமையேற்று அரும்பணிகள் பல ஆற்றினார்.

பேச்சுக்கு நிகராக, எழுத்திலும் வல்லவரான அடிகளார், தம் வாழ்நாளில் ஏராளமான நூல்களை எழுதியதோடு,

  • மணிமொழி
  • தமிழகம்
  • அருளோசை

முதலிய இதழ்களையும் நடத்தினார்.

அவர் தோற்றுவித்து, இன்றளவும் வந்துகொண்டிருக்கும் "மக்கள் சிந்தனை"யும், "அறிக அறிவியல்" இதழும் குறிப்பிடத்தக்கன.

தமது சமய, சமுதாயப் பணிகள் மூலம் உலகை வலம்வந்த மகாசந்நிதானம், அடிகளார் ஒருவர்தாம்.

வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்தார் அடிகளார். அவர் மேற்கொண்ட அந்த மேலைநாட்டுப் பயணங்கள், அவரைத் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதுவராகவும், அங்குள்ள தமிழ் மக்களின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவராகவும் ஆக்கின. இவ்வாறு, அவர் 1972இல் சோவியத்தில் மேற்கொண்ட பயணத்தின் விளைவாக தோன்றியது தான் "குன்றக்குடி கிராமத்திட்டம்".

திருக்குறளின் ஆழத்தையும், அழகையும், செறிவையும் உள்வாங்கிய அடிகளாரின் எழுத்துகள் தமிழ் இலக்கிய உலகில் தனித்தன்மை கொண்டமைவன.

  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் காட்டும் அரசியல்
  • திருவள்ளுவர் காட்டும் அரசு
  • குறட்செல்வம்
  • வாக்காளர்களுக்கு வள்ளுவர் தொடர்பான அறிவுரை
  • திருக்குறள் பேசுகிறது
  • குறள்நூறு

ஆகியன அடிகளார் அருளிய திருக்குறள் தொடர்பான நூல்களாகும்.

சமய இலக்கியத்திற்கு அடிகளார் அளித்த கொடைகளாக அமைவன,

  • அப்பர் விருந்து
  • அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர்
  • திருவாசகத்தேன்
  • தமிழமுது
  • சமய இலக்கியங்கள்
  • நாயன்மார் அடிச்சுவட்டில்

உள்ளிட்ட நூல்களாகும்.

ஆலய சமுதாய மையங்கள் என்னும் நூல், தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற நூல்.

அந்த வரிசையில் வைத்துப் போற்றத்தக்க நூல், "நமது நிலையில் சமயம் சமுதாயம்".

சமரச சமய நெறியாளர்களுக்கு உரிய ஆன்மிக இலக்கியமாக அடிகளார் அருளிய "திருவருட்சிந்தனை". நாள் வழிபாட்டுக்குரிய "தினசரி தியான நூல்".

பெரியபுராணத்தோடு, சிலப்பதிகாரத்தையும், கம்பராமாயணத்தையும் ஆராய்ந்து அடிகளார் எழுதிய நூல்கள்,

  • சிலம்பு நெறி
  • கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்
  • ஆகியனவாகும்.

சங்க, சமய இலக்கியங்களோடு நின்றுவிடாமல் சமகால இலக்கியத்திலும் ஆழ்ந்த புலமையுடைய அடிகளார், "பாரதி யுக சந்தி", "பாரதிதாசனின் உலகம்" ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

அவர்தம் சிறுகதைகள், அறிவொளி இயக்கத்தின் மூலமாக மக்களைச் சென்றெய்தியது. அதுபோல் அடிகளார் அரங்கத்தலைமையேற்றுப் பாடிய கவிதைகள், "கவியரங்கில் அடிகளார்" என்னும் நூலாகியிருக்கிறது.

அவர்தம் சுயசரிதையென அமைவது, "மண்ணும் மனிதர்களும்" எனும் நூலாகும். சில நாடகங்களும் அடிகளாரால் எழுதப்பெற்று அரங்கேற்றம் ஆகியிருக்கின்றன.

சிறுபொழுதும் ஓய்வின்றி, உலக நலனுக்காகத் துடித்த அடிகளாரின் இதயம் 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி தமது துடிப்பை நிறுத்திக்கொண்டது. ஆயினும் அவர் ஆற்றிய அருட்பணிகள், தொடங்கிய தூய இயக்கங்கள் இன்னும் தொடர்ந்து விரிந்து வளர்கின்றன. அவர்தம் நிறைவுக் காலத்தில் "தினமணி"யில் தொடராக வெளிவந்த "எங்கே போகிறோம்?" என்ற கட்டுரைகள் இன்றைக்கும் வழி காட்டுவன!





தமி​ழில் "அபி​தான சிந்​தா​மணி" என்​னும் பெய​ரில் ஒரு நூல் உள்​ளது. இதைப்​பற்றி அறிந்​துள்ள தமிழ் ஆர்​வ​லர்​கள் மிகச் சிலரே. இந்நூ​லின் பெய​ரைக் கேள்​விப்​ப​டும் சிலர்,​ "அபி​தான சிந்​தா​மணி" என்று ஒரு நூல் உள்​ள​தாமே,​ அதைக் கொடுங்​கள் படித்​து​விட்​டுத் தரு​கி​றேன் என்று கேட்​கி​றார்​கள்.
  • சீவக சிந்​தா​மணி,
  • விவேக சிந்​தா​மணி

என்​பது போல,​ அபி​தான சிந்​தா​மணி எளி​தில் படிக்​கக் கூடிய புரா​ணக்​க​தையோ அல்​லது இதி​காச நூலோ அல்ல. பல துறை​க​ளைச் சேர்ந்த சொற்​க​ளுக்கு விளக்​கம் கூறி விளங்​கச் செய்​யும் கலைக் களஞ்​சி​யம் ​தான் "அபி​தான சிந்​தா​மணி".

அபி​தான சிந்​தா​மணி என்​னும் இந்நூ​லின் ஆசி​ரி​யர் ஆ.சிங்​கா​ர​வேலு முத​லி​யார்.

இவர் பிறந்த ஊர் பொன்​வி​ளைந்​த​க​ளத்​தூ​ருக்கு அரு​கில் உள்ள ஆலூர். பிறந்த ஆண்டு 1855. இவர் பிறந்த தேதி,​ மாதம்,​ தாய் -​ தந்தை பற்​றிய விவ​ரங்​கள் அறி​யக் கிடைக்​க​வில்லை. இந்நூ​லின் முதல்​ப​திப்பு வெளி​யான 1910ஆம் ஆண்​டில் சிங்​கா​ர​வேலு முத​லி​யார் சென்னை -​ பச்​சை​யப்​பன் கல்​லூ​ரி​யில் தமி​ழா​சி​ரி​ய​ரா​கப் பணி​யாற்றி வந்​துள்​ளார்.

1,050 பக்​கங்​கள் கொண்ட இந்​நூல்​தான் தமிழ் மொழி​யில் வெளி​யான முதல் கலைக்களஞ்​சி​யம். பாண்​டித்​து​ரைத் தேவர் முயற்​சி​யால் மதுரை தமிழ்ச்​சங்​கம் வெளி​யிட்​டது.

சிங்​கா​ர​வேலு முத​லி​யார் இந்​நூ​லுக்கு "சர்​வார்த்த சித்தி" என்​னும் பெயரை வைத்​தி​ருந்​தார். இந்​நூல் கையெ​ழுத்​துப் பிர​தி​யாக இருந்​த​போது இதற்கு ஓர் அறி​முக உரையை யாழ்ப்​பா​ணம் கன​க​சபை பிள்ளை எழு​தித்​தந்​துள்​ளார். இவர் எழு​திய அறி​முக உரை​யில் இருந்​து​தான் இந்நூ​லின் பழைய பெயர் தெரி​ய​ வ​ரு​கி​றது.

சொல்​லப்​ப​டும் பொருள் எது​வாக இருந்​தா​லும் அதைக் கவிதை வடி​வில் மட்​டுமே எழு​தி​வ​ரும் வழக்​கம் தொடக்​கம் முதலே இருந்து வந்​தது. அருஞ்​சொற்​க​ளுக்​குப் பொருள்​கூற வேண்​டிய தேவை பிற்​கா​லத்​தில்​ தான் எழுந்​தது. அந்த அமைப்​பில் உரு​வா​ன​து​தான் அபி​தான சிந்​தா​மணி. நூல் உரு​வான வர​லாற்​றைப் பற்றி நூலா​சி​ரி​யர் சிங்​கா​ர​வேலு முத​லி​யார் தமது முதற் பதிப்பு முன்​னு​ரை​யில் இவ்​வாறு குறிப்​பிட்​டுள்​ளார்.

"நான் இந்த அபி​தான சிந்​தா​மணி என்​னும் இந்​நூ​லைச் சற்​றே​றக் குறைய 1890ஆம் வரு​ஷங்​க​ளுக்கு முன் தொடங்​கி​னேன். இது எனது அரிய நண்​ப​ரும் சென்னை பச்​சை​யப்​பன் முத​லி​யார் ஹைஸ்​கூல் எட்​மாஸ்​ட​ரு​மா​கிய மகாஸ்ரீ சி.கோபா​ல​ரா​ய​ர​வர்​கள்,​ பி.ஏ., என​மண்​ட​ரம் வெங்​க​ட​ரா​மை​ய​ர​வர்​கள் செய்த "புராண நாம சந்​தி​ரிகை" போல்,​ தமி​ழில் ஒன்று ​ இயற்​றின் நல​மாம் என்று அந்​தப் புத்​த​க​மும் ஒன்று கொடுத்​து​தவ,​ அதனை முதல் நூலா​கக் கொண்டு "புராண நாமா​வளி" என்று பெயர் புனைந்து எழு​தத் தொடங்​கி​யது".

இந்​நூலை எழு​தி​வ​ரும்​போது சிலர் வாயி​லா​கக் கேட்ட தக​வல்​கள் மறந்​து​வி​டா​மல் இருப்​ப​தற்​கா​கத் தமது கைப்​புத்​த​கத்​தில் குறித்​துக்கொள்​வா​ராம் ஆசி​ரி​யர். பின்​னர் அதை எழு​தும் புத்​த​கத்​தில் பதித்​துக்​கொண்டு,​ அவற்​றைச் சில ​நாள்​கள் கழித்து அகர வரி​சைப்​ப​டுத்தி மீண்​டும் பெயர்த்து எழு​தி​யுள்​ளார். நூலை அச்​சில் கொண்​டு​வர பல்​வேறு தடை​கள் ஏற்​பட்​டன சிங்​கா​ர​வேலு முத​லி​யா​ருக்கு. சொந்​த​மாக வெளி​யிட எண்​ண​மும், ஆர்​வ​மும் இருந்த போதி​லும் அவ​ரது ஆசி​ரி​யப் பணி மூலம் குறை​வான வரு​மா​னமே கிடைத்​தது. ஆகவே தமிழ் -​ பருவ இதழ்​க​ளில் எதி​லா​வது வெளி​யிட நினைத்து ஓர் அறிக்கை தயா​ரித்து வெளி​யிட்​டார்.

இ​தழ் உரி​மை​யா​ளர்​களோ பல கார​ணங்​க​ளைக் கூறித் தட்​டிக்​க​ழித்​த​னர். கா​லம் கடந்து சென்​றது. இதைப் பயன்​ப​டுத்​திக்​கொண்டு வேறு சிலர் இதே போன்ற வேறு நூல்​களை எழு​தத் தொடங்​கி​னார்​கள். மீண்​டும் அவர் மற்​றொரு அறிக்​கை​யைத் தயா​ரித்து இதழ்​க​ளின் மூலம் வெளிப்​ப​டுத்​தி​னார். இவ​ரது அறிக்​கை​க​ளைப் பற்றி அறி​யும் போது மகா​கவி பார​தி​யார்,​ தமது நூல்​களை அச்​சில் கொண்​டு​வர மக்​க​ளி​டம் நிதி​யு​தவி வேண்டி அறிக்கை வெளி​யிட்ட கதை​தான் நினைவு வரு​கி​றது.கா​லம் கனிந்​தது.அபி​தான சிந்​தா​ம​ணியை வெளி​யி​டும் பொருள் வச​தி​யும் ஈர நெஞ்​ச​மும் கொண்ட மனி​தர் யாரா​வது தமி​ழ​கத்​தில் இல்​லா​மலா போய்​வி​டு​வார்​கள்?​ இருக்​கத்​தான் செய்​தார்.

அவர்​தான் மது​ரைத் தமிழ்ச் சங்​கத்​துத் தலை​வ​ரும், பால​வ​னத்​தம் ஜமீன்​தா​ரும்,​ தமிழ் வளர்த்த பெரு​ம​கன் பொன்​னு​சா​மித்​தே​வ​ரின் குமா​ர​ரும் ஆகிய பொ.பாண்​டித்​து​ரை​சா​மித் தேவர் என்​ப​வர். இவர்,​ சிங்​கா​ர​வேலு முத​லி​யார் வெளி​யிட்ட அறிக்​கை​யைப் பார்த்து,​ தாமே சென்​னைக்கு வருகை தந்து அபி​தான சிந்​தா​மணி நூலின் கையெ​ழுத்​துப் படி​யைக் கண்டு பெரு​ம​கிழ்ச்சி அடைந்​தார். கை​யெ​ழுத்​துப் படியை மது​ரைக்கு எடுத்​துச்​சென்ற பாண்​டித்​து​ரை​சா​மித் தேவர்,​ பல தமி​ழ​றி​ஞர்​க​ளைக் கொண்டு அதைச் சுத்​த​மாக எழு​து​வித்​துப் புதுப்​பி​ரதி தயா​ரித்​தார். அதை எடுத்​துக்​கொண்டு மீண்​டும் சென்​னைக்கு வந்து நூலா​சி​ரி​யரை உடன் வைத்​துக்​கொண்டு அச்​ச​கத்​தில் கொடுத்து அச்​சுப்​பணி தொடங்க ஆணை​யிட்​டார். அவ்​வப்​போது அச்​சுப்​ப​ணிக்கு வேண்​டிய பொரு​ளு​த​வி​யும் செய்​து​வந்​தார்.

சிங்​கா​ர​வேலு முத​லி​யார் இந்நூ​லின் முதல் பதிப்பு முக​வு​ரை​யில் இவ்​வாறு குறிப்​பிட்​டுள்​ளார்.

"இந்​நூல் ஒரு தனி நூல் அன்று. இது பல சான்​றோர்​கள் இயற்​றிய நூல்​க​ளின் தொகுப்​பா​கும்". - இதி​லி​ருந்து அவ​ரது பணி​வும்,​ அவை​ய​டக்​க​மும் வெளிப்​ப​டு​கின்​றன.

சிங்​கா​ர​வேலு முத​லி​யார் தமது நூலுக்​குத் தமி​ழில் முக​வுரை எழு​தி​ய​து​டன் அதன் சுருக்​கத்தை ஆங்​கி​லத்​தி​லும் எழு​திச் சேர்த்​துள்​ளார். அது தமி​ழ​றி​யா​த​வர்​கள் அறிந்​து​கொள்ள வழி​வ​குத்​தது. மு​க​வு​ரை​யின் தொடக்​கத்​தி​லும்,​ நூலின் தொடக்​கத்​தி​லும் அவர் எழுதி அமைத்​துள்ள அக​வற்​பா​வும்,​ கட்​ட​ளைத்​து​றை​யும் மர​புக் கவிதை புனை​யும் அவ​ரது ஆற்​ற​லுக்கு எடுத்​துக்​காட்​டாக விளங்​கு​கின்​றன. அ​பி​தான சிந்​தா​மணி,​ தமி​ழில் ​ வெளி​வந்த அக​ரா​தி​க​ளின் முன்​னோடி என​லாம். சொல்​லுக்​குச் சொல் பொருள் மட்​டும் கூறா​மல் சொற்​க​ளுக்கு உரிய விரி​வான விளக்​கங்​க​ளை​யும் கூறு​கி​றது. அகர வரி​சை​யில் அமைந்த இந்​நூல்,​ அகத்​திய முனி​வர் என்​னும் சொல்​லு​டன் தொடங்கி,​ வெளவால் என்​னும் சொல்​லில் முடி​கி​றது.

நூ​லின் பிற்​ப​கு​தி​யில்,

  • சிவத்​த​லங்​கள்
  • திரு​மால் தலங்​கள்
  • தேவார வைப்​புத் தலங்​கள்
  • அறு​பத்​து​மூ​வர் திரு​நட்​சத்​தி​ரம்
  • ஆழ்​வார்​க​ளின் திரு​நட்​சத்​தி​ரம்

முத​லிய பட்​டி​யல் இடம்​பெற்​றுள்​ளன.

அதன் பிறகு "அநு​பந்​தம்" என்​னும் பகு​தி​யில் நூலில் விட்​டுப்​போன சொற்​கள் அகர வரி​சைப்​ப​டுத்​தப்​பட்டு அவற்​றின் பொரு​ளும் தரப்​பட்​டுள்​ளன.

முதல் பதிப்பு வெளி​யான பிற​கு​தான் அதில் பல சொற்​கள் விடு​பட்​டுப்​போ​னது நூலா​சி​ரி​ய​ருக்​குத் தெரி​ய​வந்​தது. ஆகவே விடு​பட்​டுப்​போன சொற்​க​ளை​யும் மேலும் பல புதிய சொற்​க​ளை​யும் அவர் தொகுத்து வந்​தார். இவற்​றை​யெல்​லாம் சேர்த்து அபி​தான சிந்​தா​ம​ணியை இரண்​டாம் பதிப்​பாக வெளி​யி​டும் திட்​டத்​து​டன் அச்​சுக்​குத்
தந்​த​துள்​ளார். அச்​ச​கத்​தில் இருந்து வந்த அச்​சுத்​தாள்​க​ளில் 1,000 பக்​கங்​களை சிங்​கா​ர​வேலு முத​லி​யாரே பிழை திருத்​தம் செய்து வந்​தார்.

ஆனால், 1931ஆம் ஆண்டு நவம்​பர் மாதம் நோய்​வாய்ப்​பட்டு அவர் இயற்கை எய்​தி​னார். அத​னால்,​ தந்​தை​யா​ரின் எண்​ணத்தை நிறை​வேற்​றும் ஆவல் கொண்ட அவ​ரது மகன் சிவப்​பி​ர​காச முத​லி​யார் தொடர்ந்து அந்த அச்​சுப் பணி​களை மேற்​கொண்​டார். மு​தல் பதிப்​பில் 1,050 பக்​கங்​கள் கொண்ட இந்​நூல்,​ இரண்​டாம் பதிப்​பில் 1,634
பக்​கங்​க​ளு​டன் வெளி​யி​டப்​பட்​டது.

1855ஆம் ஆண்டு பிறந்து 1931ஆம் ஆண்டு இயற்கை எய்​திய சிங்​கா​ர​வேலு முத​லி​யார்,​ தாம் வாழ்ந்த 76 ஆண்​டு​க​ளில் செயற்​க​ரிய இச்​செ​ய​லைச் செய்து தமிழ் இலக்​கிய உல​கில் மங்​காத புகழ் பெற்​றுள்​ளார்.

"செந்​த​மிழ்ச் செல்​வர்" வித்​து​வான் து.கண்​ணப்ப முத​லி​யார்




த​மி​ழும்,சைவ​மும் ஒரு​சேர தழைத்​தோங்கி வள​ரச்​செய்த பெரு​மைக்​கு​ரி​ய​வர் வித்​து​வான் பாலூர் து.கண்​ணப்​பர்.​ ஆற்​றல் மிக்க எழுத்​தா​ள​ராய்,​​ பன்​மு​கத் திற​மை​யு​டன் திகழ்ந்த,​​ து.கண்​ணப்​பர்,​​ தமிழ் அன்​னைக்​குப் பல ஒளி​மிக்க அணி​க​லன்​க​ளைப் பூட்டி அழ​கு​பார்த்​த​வர்.​

செங்​கல்​பட்டு மாவட்​டத்​தைச் சேர்ந்த பாலூர் எனும் சிற்​றூ​ரில்,​​ துரை​சாமி முத​லி​யார் - மாணிக்​கம்​மாள் தம்​ப​திக்கு 1908ஆம் ஆண்டு டிசம்​பர் 14ஆம் தேதி பிறந்​தார்.​ சைவத்தை உயிர் மூச்​சா​க​வும் தமி​ழின் மீது ஆறாக் காத​லும் கொண்​டி​ருந்​த​வர் இவ​ரது தந்​தை​யார் துரை​சாமி.​

மீன் குஞ்​சுக்கு நீந்​த​வும் கற்​றுக்​கொ​டுக்க வேண்​டுமா என்ன?​

தந்தை வழி​யைப் பின்​பற்​றியே சைவ​மும் தமி​ழும் இரு​கண்​கள் எனப் போற்றி,​​ அவை செழித்​தோங்​கப் பாடு​பட்​டார் கண்​ணப்​பர்.​

ஆ​ரம்​பப் பள்​ளிக் கல்​வியை முடித்து,​​ பின்​னர் செந்​த​மிழ்க் கல்​வி​யைக் கற்​ப​தில் மிகுந்த ஆர்​வம் காட்​டி​னார்.​ கல்​வித் தொண்டு புரி​வ​தையே தம் கட​மை​யா​கக்​கொண்டு வாழ்ந்த டி.என்.சேஷா​ச​லம் ஐயர் என்​ப​வ​ரி​டம் கண்​ணப்​பர் ஆங்​கில மொழி​யை​யும்,​​ தமி​ழி​லக்​கிய இலக்​க​ணங்​க​ளை​யும் குற்​ற​ம​றக் கற்​றார்.​ என்​றா​லும்,​​ அவ​ரது தமிழ் வேட்கை ஒரு​சி​றி​தும் தணி​ய​வில்லை.​ இத​னால்,​​

  • மே.வீ.வேணு​கோ​பா​லப் பிள்ளை
  • கோ.வடி​வேலு செட்​டி​யார்
  • "இசைத் தமி​ழ​றி​ஞர்" சூளை வைத்​திய​லிங்​கம்
  • ஆகி​யோ​ரி​ட​மும் சென்று
  • தமி​ழி​லக்​கி​யம்
  • இலக்​க​ணம்
  • தருக்​கம்
  • வேதாந்​தம்
  • சைவ​ சித்​தாந்​தம்
  • தமி​ழிசை

ஆகி​ய​வற்றை முறை​யாக,​​ கச​ட​றக் கற்​றுத் தேர்ந்​தார்.​


"தமி​ழா​சி​ரி​யர் பணியே தலை​யா​ய​பணி" என்ற எண்​ணம் கொண்​டி​ருந்த கண்​ணப்​பர்,​​ சென்​னை​யில் உள்ள லூத்​த​ரன் மிஷன் உயர்​நி​லைப் பள்​ளி​யில் தமி​ழா​சி​ரி​யர் பணி​யைத் தொடர்ந்​தார்.​ பின்​னர், சென்னை முத்​தி​யா​லுப்​பேட்டை மேல்​நி​லைப் பள்​ளி​யில் நான்கு ஆண்​டு​க​ளும் திரு​வல்​லிக்​கே​ணி​யில் உள்ள கெல்​லெட் மேல்​நி​லைப் பள்​ளி​யில் 11 ஆண்​டு​க​ளும்
பணி​பு​ரிந்​தார்.​ நிறை​வாக இரா​யப்​பேட்​டை​யில் உள்ள புதுக் கல்​லூ​ரி​யில் 16 ஆண்​டு​கள் தமிழ்த்​து​றைத் தலை​வ​ரா​க​வும்,​​ பேரா​சி​ரி​ய​ரா​க​வும் பணி​யாற்​றி​னார்.​


அன்​றைய நாள்​க​ளில்,​​ சென்னை -​ இரா​யப்​பேட்டை,​​ பெரம்​பூர்,​​ குயப்​பேட்டை முத​லிய இடங்​க​ளில் பொது​மக்​க​ளுக்​காக இர​வுப் பாட​சா​லை​கள் இல​வ​ச​மாக இயங்கி வந்​தன.​ அங்கு பயின்று வந்த பல​ருக்கு கண்​ணப்​பர் இல​வ​ச​மா​கத் தமிழ் கற்​றுக்​கொ​டுத்​தார்.​ மேலும்,​புர​சை​வாக்​கம் ​சுந்​த​ரர் கல்​லூ​ரி​யில் புல​வர் வகுப்பு
நடத்​தி​னார்.​

  • புரசை கம்​பன் கழ​கம்
  • சிந்​தா​தி​ரிப்​பேட்டை தமிழ்ச்​சங்​கம்
  • சூளை இளை​ஞர் கழ​கம்

ஆகிய தமிழ் அமைப்​பு​க​ளுக்​குச் சென்று தமிழ் இலக்​கண,​​ இலக்​கி​யங்​க​ளைக் கற்​பித்​தார்.​ இவை​த​விர,​​ "அம்​மை​யப்​பர் கழ​கம்" எனும் ஓர் அமைப்​பைத் தோற்​று​வித்து,​​ அதன்​வழி பல​ருக்​கும் தமிழ் இலக்​கண,​​ இலக்​கி​யங்​க​ளைக் கற்​பித்​தார்.​

த​மிழ் நூல் வர​லாறு என்​னும்,​​ "தமிழ் இலக்​கிய வர​லாறு" என்ற நூலை,​​ தமிழ் இலக்​கிய உல​கிற்கு வழங்​கி​யுள்​ளார்.​ தமிழ் இலக்​கிய வர​லாற்​றில் காலம்​தோ​றும் நிகழ்ந்து வரும் பல மாற்​றங்​க​ளை​யும், திருப்​பங்​க​ளை​யும், புது​மை​யைக் கையா​ளும் முறை​க​ளை​யும் கவ​னத்​தில் கொண்டு,​​ விருப்பு வெறுப்​பற்ற நடு​நி​லை​மை​யு​டன் தான் கண்ட ஆய்வு முடி​வு​க​ளைத் துணி​வா​க​வும் அதே நேரத்​தில் தனக்கு உடன்​ப​டாத,​​ சில முர​ணான செய்​தி​க​ளைத் தகுந்த ஆதா​ரத்​து​டன் மறுத்​தும் இந்நூ​லில் பதி​வு​செய்​துள்​ளார்.​

இதைத்​த​விர,​​

  • மாண​வர்​க​ளுக்​கான நூல்​கள்
  • இலக்​க​ணம்
  • இலக்​கி​யம்
  • வாழ்க்கை வர​லாறு
  • சம​யம்
  • தொகுப்பு
  • ஆய்வு
  • உரை நூல்​கள்

என 57 நூல்​க​ளைப் படைத்​த​ளித்​துள்​ளார்.​


தெய்​வானை என்​னும் பெண்ணை இல்​வாழ்க்​கைத் துணை​யாக ஏற்​றுக்​கொண்ட கண்​ணப்​பர்,​​ இல்​ல​ற​நெ​றி​யி​லும் சிறந்து விளங்​கி​னார்.​ அவர்​க​ளுக்கு மக​ளிர் எழு​வர் பிறந்​த​னர்.​ ப​ழம்​பெ​ரும் இலக்​கிய,​​ இலக்​கண உரை​யா​சி​ரி​யர்​க​ளான இளம்​பூ​ர​ணர்,​​ நச்​சி​னார்க்​கி​னி​யர்,​​ பேரா​சி​ரி​யர் முத​லிய உரை​யா​சி​ரி​யர்​க​ளுக்கு இணை​யா​கத் தமிழ் மந்​தி​ரம்,​​ திரு​ஈங்​கோய்​மலை எழு​பது,​​ சேக்​கி​ழார் பிள்​ளைத் தமிழ் போன்ற நூல்​க​ளுக்கு இவர் எழு​திய ஆராய்ச்சி உரை​களே இவ​ரது உரைச்​சி​றப்​புக்கு சான்று கூறு​வன.​

மகா​வித்​து​வான் மீனாட்​சி​சுந்​த​ரம் பிள்​ளை​யின்,​​ சேக்​கி​ழார் பிள்​ளைத் தமி​ழுக்கு கண்​ணப்​பர் எழு​திய பேருரை "பெரு​வி​ளக்​க​வுரை" எனப் போற்​றப்​ப​டு​கி​றது.​ தமிழ் இலக்​கண,​​ இலக்​கி​யங்​கள்,​​ சைவ சித்​தாந்த ​மெய்​கண்ட சாத்​தி​ரங்​கள்,​​ பெரி​ய​பு​ரா​ணம் முத​லி​ய​வற்றை ஆராய்​ப​வ​ருக்கு கண்​ணப்​பர் இயற்​றிய இப்பேருரை மிக​வும் பய​னுள்​ள​தா​க​வும் மிகச் சிறந்த வழி​காட்டி நூலா​க​வும் விளங்​கும் என்​ப​தில் எள்​ள​ள​வும் ஐய​மில்லை.​

தொள்​ளா​யி​ரம் பக்​கங்​கள் கொண்ட இவ​ரது பேருரை நூல் போல் இது​வரை வேறு எவ​ரும் உரை​வி​ளக்​கம் அளிக்​க​வில்லை என்​ப​தும் குறிப்​பி​டத்​தக்​கது.​ அது​மட்​டு​மன்றி,​​ இவ​ரது பணி​க​ளி​லேயே மிக உன்​ன​த​மான பணி என்று கூறி​னால்,​​

  • சென்​னை​யில் அமைந்த "சைவ சித்​தாந்த சமா​ஜம்"
  • சென்னை எழுத்​தா​ளர் சங்​கம்
  • செங்கை மாவட்ட எழுத்​தா​ளர் சங்​கம்

முத​லிய அமைப்​பு​க​ளில் முக்​கிய பொறுப்​பு​களை ஏற்று அதன்​வழி பல பணி​க​ளைச் செவ்​வனே செய்​த​தும்,​​ தமி​ழா​சி​ரி​யர் நிலை உய​ர​வும் பாடு​பட்​டது தான் என​லாம்.​

மேலும்,​​ சென்​னைப் பல்​க​லைக்​க​ழ​கப் பாடத்​திட்​டக் குழு​வி​லும் முக்​கிய உறுப்​பி​ன​ராய்த் திகழ்ந்து பணி​யாற்​றி​யுள்​ளார்.​


"தமிழ் மந்​தி​ரம்" என்ற ஓர் அரிய நூலைப் படைத்​துள்​ளார் பேரா​சி​ரி​யர் கண்​ணப்​பர்.​ திரு​மூ​ல​ரின் திரு​மந்​தி​ரத்தி​லி​ருந்து தேர்ந்​தெ​டுக்​கப்​பட்ட 365 பாடல்​களை உள்​ள​டக்​கிய ஒரு தொகுப்பு நூல் இது.​ எளிய நடை​யி​லும்,​​ சிறந்த உரை​யு​ட​னும் கூடிய இந்நூ​லில்,​​ 15க்கும் மேற்​பட்ட ஆய்​வுக் கட்​டு​ரை​களை எழு​தி​யுள்​ளார்.​ திரு​மந்​தி​ரத்தை ஆராய்​ப​வர்க்கு இந்​நூல் மிகுந்த பயன் தரக்​கூ​டி​யது.​கற்​ப​னைக் காட்​சி​களை கண்​முன் கொண்​டு​வந்து நிறுத்​தும் ஓர் அற்​புத நூல்,​​ "திரு​ஈங்​கோய் மலை எழு​பது".​ இது 11ஆம் திரு​மு​றை​யில் இடம்​பெற்ற பக்​திப் பனு​வல்.​ தலை​சி​றந்த ஆய்​வா​ள​ரான கண்​ணப்​ப​ரின் ஆய்​வுத்​தி​ற​னுக்​குக் கட்​டி​யம் கூறும் நூல்,​​ "பொய்​ய​டிமை இல்​லாத புல​வர் யார்?​" என்​பது.​ சுந்​த​ர​மூர்த்தி சுவா​மி​க​ளால் பாடப்​பட்ட திருத்​தொண்​டத்​தொ​கை​யில்,​​ "பொய்​ய​டிமை இல்​லாத புல​வர்க்​கும் அடி​யேன்" என்று சுந்​த​ர​மூர்த்தி சுவா​மி​கள் குறிப்​பி​டு​கி​றார்.​

அவர் குறிப்​பி​டும் "பொய்​ய​டிமை இல்​லாத புல​வர் யார்?​" என்று பல அறி​ஞர்​க​ளின் உள்​ளங்​க​ளில் தோன்​றிய கேள்​விக்கு சரி​யான விடை கிடைக்​க​வில்லை.​ சுந்​த​ரர் பாடிய ஒரு வரிக்கு,​​ 88 பக்​கங்​க​ளில் தக்க ஆதா​ரத்​து​டன் "பொய்​ய​டிமை இல்​லாத புல​வர் மாணிக்​க​வா​ச​கர்" தான் என்று சரி​யான - ​உண்​மை​யான விடை கண்​ட​வர் பேரா​சி​ரி​யர் கண்​ணப்​பர் ஒரு​வர்​தான்.​

இந்நூ​லின் சிறப்பு குறித்து,​​ "திரு​வா​ளர் பாலூர் கண்​ணப்ப முத​லி​யார் இயற்​றிய பொய்​ய​டிமை இல்​லாத புல​வர் யார்?​ என்ற நூலை ஓதும் பேறு பெற்​றேன்.​ இவ்​வாறு எழும் வினா​விற்கு விடை​யாக மாணிக்​க​வா​ச​கரே எனப் பல சான்​று​கள் காட்​டிக் கூறு​கின்​றார்.​ சிக்​க​லான கேள்வி இது.​ இருந்​தா​லும் இவர் நூல் இனி​தா​க​வும், எளி​தா​க​வும் அமைந்​துள்​ளமை பாராட்​டத் தக்​க​தே​யாம்" என்று பன்​மொ​ழிப் புல​வர் தெ.பொ.மீனாட்​சி​சுந்​த​ர​னார் கூறி​யுள்​ளார்.​

சன்​மார்க்க சிங்​க​மான வள்​ள​லா​ரின் "இங்​கி​த​மாலை" என்ற அகப்​பொ​ருள் சார்ந்த இந்​நூ​லுக்கு பேரா​சி​ரி​யர் கண்​ணப்​பர் அளித்​துள்ள உரை​ வி​ளக்​கம்,​​ இவ​ரது உரைத்​தி​ற​னுக்​குச் சான்​றாய் அமை​கி​றது.​கண்​ணப்​ப​ரது மணி​விழா,​​ 1969ஆம் ஆண்டு அக்​டோ​பர் 16ஆம் தேதி மிகச் சிறப்​பா​கக் கொண்​டா​டப்​பட்டு,​​ அம்மணி​வி​ழா​வின் ​போது சிறப்பு மலர் ஒன்​றும்
வெளி​யி​டப்​பட்​டது குறிப்​பி​டத்​தக்​கது.​ இவ​ரது அரும்​பெ​ரும் பணி​களை நினைவு கூர்ந்து போற்​றும் வகை​யில்,​​

  • செந்​த​மிழ்ச் செல்​வர்
  • சைவ​ச​மய சிரோன்​மணி

என்று இவ​ரைத் தமி​ழ​றி​ஞர்​கள் போற்​றிச் சிறப்​பித்​துள்​ள​னர்.​


த​மது 63ஆம் அக​வை​யில்,​​ 1971ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி இவ்​வுலக வாழ்வை நீத்​தா​லும்,​​ தமிழ்ப் பேரு​ல​கில் நிலை​யான தடம் பதித்​து​விட்​டார் பாலூர் கண்​ணப்​பர்.​

தன் கண்​ணையே பரம்​பொ​ரு​ளுக்​குத் தந்த கண்​ணப்​பநா​ய​னா​ரைப் போல,​​ தமிழ்ப் பணிக்​கா​க​வும் சைவ சம​யத்​துக்​கா​க​வும்
தமது வாழ்​நா​ளையே அர்ப்​ப​ணித்த பேரா​சி​ரி​யர் கண்​ணப்​ப​ரின் பெய​ரும் புக​ழும்,​​ தமி​ழும் சைவ​மும் உள்​ள​வரை நின்​றோங்​கும்!

"கரந்தைக் கவியரசர்" அரங்க. வேங்கடாசலம் பிள்ளை




கரிய மேனியும், நரைத்த மீசையும், சந்தனப் பொட்டும், நிமிர்ந்த தோற்றமும் தலைப்பாகையும் துண்டும் வெள்ளை உடையும் நிமிர்ந்த நடையும் உடையவர். சங்க இலக்கியப் பாடல்களை மட்டுமல்லாது இலக்கணங்களையும் குறிப்பாக, தொல்காப்பியத்தையும் மனப்பாடமாக நூற்பா எண்ணோடு சொல்லக்கூடியவர். உரைகளும் கூட அவருக்கு மனப்பாடம். வெறும் பாடமாக, ஏட்டுச் சுரைக்காயாகக் கற்றுத்தராமல் வாழ்வியல் சிந்தனைகளுடன் நகைச்சுவை ததும்பப் பாடம் நடத்துவார். இலக்கியங்களை மட்டுமல்லாமல் இலக்கணங்களையும் சுவையுடன் நடத்துவார். இத்தகு பெருமைக்குரியவர்தான் கரந்தை வேங்கடாசலம் பிள்ளை.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மோகனூர் என்ற சிற்றூரில், 1886ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி, அரங்கசாமிப் பிள்ளை - தருமாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

தஞ்சை தூயபேதுரு உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், தனிக்கல்வியாக தமிழ் இலக்கியத்தை கரந்தை வேங்கடராமப் பிள்ளையிடமும், தமிழ் இலக்கணத்தை மன்னை காவல் ஆய்வாளர் மா.ந.சோமசுந்தரம் பிள்ளையிடமும் பயின்றார்.

தமிழவேளின் நண்பரும், கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளருமான கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, திருவையாறு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆனார்.

"கரந்தை" என்பது கருந்திட்டைக்குடியின் மரூஉ. மொழிப்பெயர் கரந்தை என்ற பூவின் பெயர். புறத்திணை அடிப்படையில் மீட்டலைக் குறிக்கும். தமிழின் பெருமையையும் வளர்ச்சியையும் மீட்கும் பணியில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தையே தம் வாழ்வாகக் கொண்டு உழைத்தவர் கவியரசு. சங்க அமைச்சராகவும் சங்கத்து இதழாகிய "தமிழ்ப்பொழில்" ஆசிரியராகவும் இரவு பகல் பாராமல் பாடுபட்டவர்.

கவியரசு வேங்கடாசலம், கரந்தையில் குடியிருந்தார். நண்பர் ஒருவர், "சாகை கரந்தையில் தானே?'' என்று கேட்டார். சாகை என்ற சொல் (ஜாகை) குடியிருப்பதைக் குறிக்கும், தமிழில் "சாதல்" என்ற பொருளும் தரும். ஆதலால், "ஆம்..ஆம்.. சாகை கரந்தையில்தான்'' என்றார் கவியரசு. சாகை என்றது சாகும்போதும் தமிழ் படித்துச் சாகும் வரை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்குத் தொண்டு செய்து வாழ்வேன் என்ற பொருளில் நகைச்சுவையுடன் கூறினார் எனில், அவர் தமிழ்ப் பற்றை என்னவென்பது?

இலக்கணம் என்றாலே பிலாக்கணம் என்று அஞ்சி ஓடினாராம் பாரதியார். இலக்கணம் என்றால் பலாச்சுளை என்று எடுத்துத் தேனில் தோய்த்து அளித்தார் கவியரசு. குற்றியலுகரம் என்பது ஒற்றுமை நயம்; உயிர்மெய் என்பது வேற்றுமை நயம் என்னும் கருத்துக்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியைக் கூறினார்.

புதுக்கோட்டை மன்னர், பார்ப்பனர்களுக்கு இலவச வேட்டி சேலை அளித்தார். அதை வாங்க பார்ப்பனப் பெண் மகனுடன் தொடர்வண்டியில் சென்றார். ஆய்வாளர் வந்து சீட்டுக் கேட்டபொழுது, மடியில் மகனை வைத்துக்கொண்டு, "நான் மட்டும் தான், மடியில் இருப்பது சிறுகுழந்தை'' என்றார். அரண்மனையில் பார்ப்பனப் பெண் தனக்குப் புடவையும் தன் குழந்தைக்குத் தனியே சிற்றாடையும், கருவுற்றிருக்கிற தன் வயிற்றைக் காட்டி இன்னொரு சிற்றாடையும் என மூன்று கொடை வாங்கினார். அவர் போட்ட கணக்கு முதலில் ஒன்றும் ஒன்றும் ஒன்றாகியது! பின் ஒவ்வொன்றாக மூன்று ஆகியது! தனக்கும் குழந்தைக்கும் ஒரு சீட்டு என்பது ஒற்றுமை நயம். மூன்று கொடை வாங்கியது வேற்றுமை நயம் என்றார் கவியரசு. இப்படிப் பாடம் நடத்தினால் இலக்கணம் கசக்குமா?

இன்னொரு நிகழ்ச்சி. உ.வே.சா. ஒரு முறை திருக்காட்டுப்பள்ளிக்கு வந்திருந்தார். ந.மு.வே.நாட்டாரும் கவியரசும் சிலப்பதிகார உரை எழுதிக் கொண்டிருந்தனர். கவியரசின் மாணவர் ஒளவை துரைசாமிப் பிள்ளையும், தமிழவேள் உமாமகேசுவரனாரும் அப்போது உடன் இருந்தனர். தேள் கொட்டியதால் மருந்துண்டு தேறிய நண்பர் ஒருவர், "கடித்த வாய்தான் கடுக்கிறது'' என்றார். "கடியும் கடுக்கிறதும் ஒன்றுதானே?'' என்று தமிழவேள் கேட்டார். தமிழ்த்தாத்தா கவியரசரைப் பார்த்தார். கவியரசு தம் மாணவரைப் பார்த்து, "நீர் சொல்லும்'' என்று தலையாட்டினார். ஒளவை துரைசாமிப்பிள்ளை, "கடி என்னும் உரிச்சொல் கடுக்கிறது எனத் திரிந்து வினை ஆயிற்று. கடுத்தது காட்டும் முகம் போல்'' என்று கூறினார். தமிழ்த்தாத்தா உடனே, "கவியரசரிடம் இலக்கணம் கற்றவர் என்று நிறுவினீர்கள். எடுத்துக்காட்டுகளுடன் இனிமையான இலக்கணம் கற்பிப்பவர் என்றால் கவியரசுதான்'' என்று பாராட்டினார். மேலும், "சீவகசிந்தாமணியை நான் பதிப்பித்தபோது பொறாமையால் பலர் குறை கூறி எழுதினார்கள். ஆனால், உண்மையிலேயே திருத்தங்களை எடுத்துக்காட்டிப் "பெயர் விழையான்" என்ற புனைப்பெயரில் கவியரசு மடல் அனுப்பியிருந்தார். என்னையே திருத்திய பெரும்புலவர் என்ற புகழ் வேண்டாமென்று தன்னடக்கத்தால் பெயர் எழுதவில்லை'' என்று பலவாறு பாராட்டினார் உ.வே.சா.

தமிழ்ச்சங்கத்தின் மிகப்பெரும் பணி தனித்தமிழைப் பரப்பியது தான். தமிழவேள் உமாமகேசுவரனாரும் கரந்தைத் தமிழ்ச்சங்க இதழும் கல்லூரியும் தனித்தமிழில் ஊற்றங்கொள்ளக் கவியரசின் எழுத்தும் பேச்சும் தூண்டல் ஆகும். பா.வே.மாணிக்கநாயக்கரும் தனித்தமிழ் பரப்பி வந்தார்.

"பிரேரேபிக்கிறேன்" போய் "முன்மொழிகிறேன்" என்றும், "தீர்மானம்" போய் "முடிவு" என்றும் வந்தன. "போஜனம் ஆயிற்றா! எனக் கேட்பது தமிழ் மரபு'' என்று எழுதிய உ.வே.சா. தமிழ்ப்பொழிலின் எழுத்துத் தாக்குதலுக்கு ஆளானார். "உண்மைத் தமிழர் ஒவ்வொருவரும் தாம் பேசுங்காலும், எழுதுங்காலும் தமிழ்ச் சொற்களையே எடுத்தாளுதல் தமது கடமை என்று உறுதி கொள்ளல் வேண்டும். சிறார் முதல் கிழவர் ஈறாக உள்ளார் யாவரும் பிறமொழிக் கலப்பினை எவ்வாற்றானும் வேண்டாது விட்டொழித்தலைக் கடனாகக் கொள்ளல் வேண்டும்'' என்று "தமிழ்ப் பொழில்" இதழில் கவியரசு எழுதினார்.

ஆங்கிலக் கல்வியால் தமிழ்க் குழந்தைகள் சீர்கெடுகின்றன. இதை, "ஐந்துவயதிலிருந்தே தங்கு தடையின்றிப் பேசக்கற்றிருந்த தாய்மொழியில் இப்போது பேசுவதற்குத் தம்மால் இயலாது என்கின்றனரே! ஆங்கிலம் படித்த வாழ்வுதான் என்னே!'' என்று வருந்தி எழுதியுள்ளார்.

கரந்தைச் தமிழ்ச்சங்கத்தின் வழியாகவும், திருவையாறு அரசர் கல்லூரியில் பணியாற்றியதன் மூலமும் எண்ணற்ற புலவர் பெருமக்களையும், தனித்தமிழ் அன்பர்களையும் உருவாக்கியவர் கவியரசு.

திருவையாறு கல்லூரி ஆண்டு விழாவில் பேசிய பெரும்புலவர் ஒருவர், "செந்தமிழ் என்று இக்காலத்தில் கூறுவதால் முக்காலத்தில் கொடுந்தமிழாக இருந்ததுபோலும்'' என்று பேசினார். உடனே அதை மறுத்து, "செஞ்ஞாயிறு இருந்தது என்றால் கருஞாயிறு இருந்தது என்று ஆகுமா? செந்தமிழ் என்றும் செந்தமிழ்தான்; செம்மொழிதான்'' என்று முழங்கியவர் கவியரசு வேங்கடாசலம்.


ஆசான் ஆற்றுப்படை (தூயபேதுரு பள்ளியில் தம் ஆசிரியராக இருந்த குயிலையா என்னும் சுப்பிரமணிய ஐயர் மேல் இயற்றியது)

  • மொழி அரசி
  • மணிமேகலை நாடகம்
  • செந்தமிழ்க் கட்டுரைகள் (தமிழ்ப்பொழில் இதழில் வந்த கட்டுரைகள்)

என்ற நூல்களையும்,

  • அகநானூறு உரை
  • வேங்கட விளக்கு

போன்ற உரை நூல்களையும் படைத்துள்ளார்.

ந.மு.வே.நாட்டாருடன் இணைந்து தொல்காப்பியம் - சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை என்ற நூலையும் பதிப்பித்துள்ளார்.

இலக்கண, இலக்கியங்களில் துறைபோகியவரும், சிறந்த மாணவர்களை உருவாக்கியவரும், தமிழுக்குப் பெருமை சேர்த்தவருமான கவியரசர், 1953ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.

கரந்தை என்று கூறினாலே கவியரசரின் பெயரும் அவரது தமிழ்த்தொண்டும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.


ஒளிரும் தமிழ்மணி, நம் ஒப்பற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை





பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள்;
  • சுப்பிரமணிய பாரதியார்
  • கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
  • பாவேந்தர் பாரதிதாசன்
  • நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
  • ஆகிய நால்வருமாவர். அவருள்;
  • பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்;
  • பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்;
  • நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர்.

ஆயின்,கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் கவிஞர் எனக் கூறுதல் சாலப் பொருந்தும்.


"அழகு என்பதே உண்மை, உண்மை என்பதே அழகு" என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும்.
கரும்பினும் இனிமை பெற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம் என புகழ்வார் இரசிகமணி டி.கே.சி.

"தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை." எனப் புகழ்மொழி சூட்டுவார் நாமக்கல் கவிஞர்.


"இவரது உண்மையுள்ளம், உண்மைப் பாடல்களின் மூலமாய் உண்மை வித்துக்களைக் கற்பவர் மனத்தில் விதைத்து, உண்மைப் பயிரைச் செழித்தோங்கச் செய்கிறது. இவர் பாடல்களில் காணும் தெளிவும், இனிமையும், இவரது உள்ளத்திலேயுள்ள தெளிவு, இனிமை முதலிய சிறந்த இயல்புகளின் நிழற்படமேயாகும்," என்பார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.

"உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை."
என்னும் கவிமணியின் கவிதை பற்றிய விளக்கம் அவரின் கவிதைகளுக்கு நன்கு பொருந்துவதாகும்.


தேசிக விநாயகம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில் 1876 சூலை 27ம் நாள் வேளாளர் குலத்தில் சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் வாழ்ந்து வந்த நாஞ்சில்நாடு மலையாள நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால், பள்ளியில் மலையாள மொழி கற்க வேண்டியவரானார். எனினும் தேரூரை அடுத்த வாணன்திட்டிலிருந்த திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிபுனையும் ஆற்றலும் கைவரப் பெற்றார்.


ஆரம்பப் பள்ளிக் கல்விக்குப்பின் கோட்டாறு அரசுப் பள்ளியில் பயின்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து, 1931ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.

பழந்தமிழ்ப்பண்பும், தமிழ் மணமும், புதுமைக் கருத்துக்களும் நிறைந்த பல பாடல்களைக் கவிமணி எழுதியுள்ளார். இப்பாடல்களின் தொகுப்பு "மலரும் மாலையும்" என்னும் நூலகாக வெளியிடப் பெற்றது.

  • ஆசியஜோதி
  • உமர்கய்யாம் பாடல்கள்

ஆகிய இருகவிதை நூல்களும் ஆங்கில நூல்களைத் தழுவி எழுதப் பெற்றவை. நாஞ்சில் நாட்டில் நிலவிய மருமக்கள் தாய முறையினை எள்ளி நகையாடும் முறையில் எழுதப் பெற்ற நூல் "நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழிமான்மியம்" என்பதாகும். "தேவியின் கீர்த்தனங்கள்" கவிமணி இயற்றிய இசைப்பாடல்களின் தொகுப்பாகும். "கவிமணியின் உரை மணிகள்" என்ற நூல் அவரால் எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பாகும்.
கவிமணி ஆங்கிலத்தில் எழுதிய வரலாற்று ஆய்வுநூல் "காந்தளூர் சாலை" ஆகும். தேசிக விநாயகம் பிள்ளையின் கவிபாடும் புலமையைப் பாராட்டிச் சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் 1940ல் "கவிமணி" என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. மலரும் மாலையும் நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மூலம் கவிமணியின்

  • நாட்டுப்பற்று
  • மொழிப்பற்று
  • இறைவழிபாடு
  • சாதிபேதம் கடிதல்
  • குழந்தைகளிடம் கொண்ட பற்று

ஆகியவற்றை அறியலாம்.


ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாகக் குதூகலித்த பாரதிக்கு சுதந்திர இந்தியாவில் வாழக் கொடுத்து வைக்கவில்லை. ஆயின் கவிமணி விடுதலை பெற்ற இந்தியாவில் ஏழாண்டுகள் வாழும் பேறு பெற்றார். "பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பது நமது கடமை என்றும், உரிமை வாழ்வின் பயனை நினையாது வாதினை விளைவித்துச் சண்டை செய்வது தேவையற்றது," என்றும் வலியுறுத்தினார். நம் நாட்டு மக்களுக்கு ஊக்கமும் உழைப்பும் வேண்டும்.

"உண்ணும் உணவுக்கும், உடுக்கும் உடைக்கும் அந்நியரை நம்பி வாழ்தல் கூடாது."

"பலதொழில்கள் செய்து பஞ்சப் பேயினைத் துரத்த வேண்டும்."

"அண்ணல் காந்தியினை அடியொற்றி வாழ்வோம்," என்பதைக் கீழ்காணும் கவிதை வலியுறுத்தும்.

"ஆக்கம் வேண்டுமெனில்- நன்மை
அடைய வேண்டுமெனில்
ஊக்கம் வேண்டுமப்பா - ஓயாது
உழைக்க வேண்டுமப்பா

உண்ணும் உணவுக்கும் - இடுப்பில்
உடுக்கும் ஆடைக்கும்
மண்ணில் அந்நியரை நம்பி
வாழ்தல் வாழ்வாமோ?

உண்ணும் உணவுக் கேங்காமல்
உடுக்கும் ஆடைக் கலையாமல்
பண்ணும் தொழில்கள் பலகாண்போம்
பஞ்சப் பேயைத் துரத்திடுவோம்
அண்ணல் காந்திவழி பற்றி
அகிலம் புகழ வாழ்ந்திடுவோம்."


கவிமணி தமிழுக்குத் தொண்டாற்றிய புலவரைப் போற்றுகிறார். தமிழ்நூல்களின் சிறப்புகளைக் கூறுகிறார். தமிழ்மொழி வளரப் பழைமையோடு புதுமையையும் வரவேற்கின்றார். தமிழில் புதுப்புதுத் துறைகளைத் தோற்றுவித்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
"அறிவின் எல்லை கண்டோன், உலகை அளந்து கணக்கிட்டோன்," என வள்ளுவரையும்,
"நெல்லிக்கனியைத் தின்றுலகில் நீடுவாழும் தமிழ்க் கிழவி," என ஔவையாரையும்,
"இந்திர சாலமெல்லாம் கவியில் இயற்றிக் காட்டிடுவான்," எனக் கம்பரையும்,
"பாட்டைக் கேட்டு கிறுகிறுத்துப் போனேனேயடா அந்த கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா," எனப் பாரதியையும்
போற்றிக் கவியாரம் சூட்டுகிறார்.


மனத்தூய்மையின்றிச் செய்யும் இறைவழிப்பாட்டினால் பயனில்லை என்பது கவிமணியின் கருத்து. இதனை வலியுறுத்தும் பாடல்:

"கண்ணுக் கினியன கண்டு - மனதைக்
காட்டில் அலைய விட்டு
பண்ணிடும் பூசையாலே - தோழி
பயனொன்றில்லையடி
உள்ளத்தில் உள்ளானடி - அது நீ
உணர வேண்டும் அடி
உள்ளத்தில் காண்பாயெனில் - கோயில்
உள்ளேயும் காண்பாயடி."
கவிமணி தம் கவிதைகளில் சாதிபேதங்களைச் சாடுகிறார். "சாதியிரண்டொழிய வேறில்லை," என்றார் ஔவையார். சாதி இறைவனால் வகுக்கப்படவில்லை. மக்களின் கற்பனையே. பிறர்க்காக உழைப்பவர் உயர்ந்தவர். தன்னலம் பேணுவோர் தாழ்ந்தவர். இதனை,

"மன்னுயிர்க்காக உழைப்பவரே - இந்த
மாநிலத் தோங்கும் குலத்தினராம்
தன்னுயிர் போற்றித் திரிபவரே - என்றும்
தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா."
எனப் பாடுகிறார்.
கவிமணி ஒரு தலைசிறந்த குழந்தைக் கவிஞர். இவர் குழந்தைகளுக்காகத் தாய்மார் பாடும் தாலாட்டுப் பாடல்களையும், குழந்தைகள் தாமே பாடி மகிழத்தக்க எளிய அழகிய பாடல்களையும் பாடியுள்ளார். காக்கை, கோழி முதலிய பறவைகளைக் குழந்தை விளித்துப்பாடும் பாடல்கள் சுவைமிக்கன.

காக்காய்! காக்காய்! பறந்து வா
கண்ணுக்கு மை கொண்டு வா
கோழி! கோழி! கூவி வா
குழந்தைக்குப் பூக்கொண்டு வா

கோழி! கோழி! வா வா
கொக்கொக்கோ என்று வா
கோழி! ஓடி வாவா
கொண்டைப்பூவைக் காட்டு வா


சர். எட்வின் அர்னால்டு எழுதிய "The Light of Asia" என்னும் நூலைத் தழுவி எழுதப் பெற்ற அரிய நூல் "ஆசிய ஜோதி" ஆகும். இந்நூல் புத்தர் பெருமானின் வரலாற்றை விளக்குவது.
சுத்தோதனர் மனைவி மாயாதேவி இறைவன் தன் மூலமாகப் பிறக்க விருப்பதைக் கணவாகக் காண்கிறாள். "Dreamed a strange dream" என்பதை "எந்நாளும் காணாத கனவொன்று கண்டாள்" எனக் கவிமணி, மொழியாக்கம் எனத் தோன்றா வகையில் ஆக்கியுள்ள அருமை போற்றத்தக்கது. பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை எட்வர்ட் பிட்ஸ் ஜெரால்டு ஆங்கிலத்தில் ஆக்கியுள்ளார். கவிமணி ஆங்கில நூலைத் தழுவித் தம் நூலைப் படைத்துள்ளார். இப்பாடலின் தழுவலாக கவிமணி எழுதிய கீழ்க்கண்ட பாடல் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.

வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 78 ஆண்டுகள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து 26.09.1954ல் இம் மண்ணுலக வாழ்வினை நீத்தார். வாழ்நாள் முழுவதும் தமிழ்மணி ஒலித்துக் கொண்டிருந்த கவிமணியின் நா ஓய்ந்தது. எனினும் அவர் பாடல்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே உள்ளன.

தேசத்தின் சொத்து ப.ஜீவானந்தம்பிள்ளை

வீரத்துறவி விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமுதாயத்தை வசீகரித்தவர் ஜீவா என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம்.

நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டப்பிள்ளை - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.



பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து.

ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.

அவர்கள் குல தெய்வம் அது.

வெள்ளையரை எதிர்த்துப் போராடிய காலம்.திராவிடர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இளம் வயதினராய் இருந்த அவரது உள்ளத்தில் எரிமலையாய் புகையச்செய்தது.இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மாவின் கொள்கைகள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப, நேர்மை தவறாத ஒழுக்க குணம், தனக்குச் சரியெனப் படாததை எதிர்க்கும் போர்க்குணம், அஞ்சா நெஞ்சம், அறிவு, ஆற்றல் போன்றவற்றை இளம் வயதிலேயே வாய்க்கப் பெற்றார்.

அந்த நாளில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸோடு, ஜீவா நெருங்கிப் பழகினார்.சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார்.நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார்.அந்தக் கவிதை காந்திஜியையும், கதரையும் பற்றியது.

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார்."ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார்.அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார்.காந்திய வெளியீடுகளைப் படித்தார்.காந்திஜியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது.

காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது.

அவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது.அன்னியத் துணிகளைத் தீயிட்டுக் கொளுத்தி, வெறும் கோவணத்துடன் வீடு திரும்பினார்.அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார்.

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. வாலிபர் உலகம் கொந்தளித்து எழுந்தது. வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை அவரால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது.

சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா.

ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக ஜீவாவைக் கைதுசெய்து, கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோஷலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.

பொதுத் தொண்டில் சிறு வயதிலிருந்தே நாட்டம் கொண்ட ஜீவாவுக்கு, தீண்டாமை ஒழிப்பைப் பற்றியே எப்போதும் சிந்தனை. ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் தந்தை மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் அவர் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17.

ஜாதி வித்தியாசம் பாராமல் ஆசிரமம் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நிதி சேர்க்கப்பட்ட வ.வே.சு.ஐயரால் சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட தேசிய குருகுலத்தில் ஜாதி பாகுபாடு காட்டப்பட்டது என்ற புகார் எழுந்து வ.வே.சு.ஐயரைக் கண்டித்து கிளர்ச்சி நடத்தது. இதை அறிந்த ஜீவா மற்றும் பெரியார் போன்றோர் கடுமையாக எதிர்த்தனர்.

வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். தீண்டாமையை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ஜீவா, ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார். அந்த ஆசிரமத்தையும் அதன் செயல்பாடுகளையும் வ.உ.சி. போன்றவர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர்.

ஆசிரமம் அமைக்கும் முன்பே ஜீவாவுக்குத் தனித்தமிழிடம் அதிகப் பற்று ஏற்பட்டது. தூய தமிழில் பெயரிட வேண்டும் என்ற ஆவலில் தனது பெயரை "உயிர் இன்பன்" என்று மாற்றிக்கொண்டார். ஜீவாவின் ஆசிரமத்துக்கு வந்த வ.ரா., ஆசிரமக் கொள்கையையும் நடைமுறையையும் பாராட்டினார். ஜீவாவின் சொற்பொழிவுகளைக் கேட்டு அவர் மீது பெரும் மதிப்பு கொண்ட வ.ரா., ஜீவாவுக்கு ஆலோசனை கூறினார்:-

"உங்களை நான் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நன்மையையும், வளர்ச்சியையும் கருதியாவது தனித்தமிழில் பேசுவதை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசிய போதிலும் உங்களுடைய தனித்தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியுமா?'' என்ற வ.ரா.வின் அறிவுரையை சிந்தித்த ஜீவாவுக்கு தனித்தமிழில் உள்ள வெறி நீங்கியது.

"உயிர் இன்பன்" என்று மாற்றிக்கொண்ட தனது பெயரை, மீண்டும் ஜீவானந்தமாக மாற்றினார்.

இறுதிவரை ப. ஜீவானந்தம் - ஜீவா என்றே அழைக்கப்பட்டார்.

ஜீவா நடத்திய காந்தி ஆசிரமத்துக்கு ஜீவா அழைப்பின்பேரில் மகாத்மா காந்தி விஜயம் செய்தார். ஜீவானந்தத்தின் இளமைத் தோற்றமும், வாதத் திறமையும் காந்தியை வியக்கவைத்தன. ஆசிரமப் பணிகளையும் சேவையையும் பாராட்டிய காந்தி, ஜீவாவைப் பார்த்து, "உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?'' என்றார்.

"இந்த தேசம்தான் எனக்குச் சொத்து'' என்று ஜீவா பதிலளித்தார்.

ஜீவாவின் பதிலைக் கேட்டு காந்திஜி திகைத்தார்.

பிறகு "இல்லையில்லை, நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து'' என்றார்.கம்பனிலும், பாரதியிலும் அவர் கண்ட புரட்சிக்கொள்கை, அவரை இலக்கியங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்தது.

கடலூர் சட்டமன்றத் தொகுதி ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.

அவ்வப்போது போராட்டங்களில் கலந்து கொண்டு ஜீவா பலமுறை சிறை சென்றுவிடுவார். கட்சி, கொள்கை, போராட்டம், சிறைவாசம் என்று வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த அவர், குடும்பம் ஒன்று உண்டு என்பதை மறந்துவிடவில்லை.

கொள்கையைப் பரப்ப "ஜனசக்தி" நாளிதழைத் தொடங்கிய ஜீவா, "தாமரை" என்ற இலக்கிய இதழை 1959இல் தொடங்கினார். அதில், "தமிழ் மணம் பரப்ப" என்று பாராட்டி கவிதைகள் எழுதினார், பொதுவுடைமைக் கொள்கைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.1933இல் ஜீவா எழுதிய "பெண்ணுரிமை கீதாஞ்சலி" என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல்.

அப்போதிலிருந்து இந்த நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கேற்றார்.

1963ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி அந்த மாவீரன் மரணமடைந்தார்.

மரணமா? அவருக்கு மரணமேது?

நாட்டில் சமத்துவம் நிலவும் வரை, தீண்டாமை ஒழியும் வரை, ஒற்றுமையான குடியரசு அமையும் வரை அவர் ஜீவனுக்கு அழிவேது?

மகாத்மா காந்தி கூறியதுபோல் அவர் இந்தியாவின் சொத்து.