தேசத்தின் சொத்து மாமனிதர் தோழர் ப.ஜீவானந்தம் பிள்ளை

on Sunday, December 12, 2010


வீரத்துறவி விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமுதாயத்தை வசீகரித்தவர் ஜீவா என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம்.

நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டப்பிள்ளை - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து.

ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.

அவர்கள் குல தெய்வம் அது.

வெள்ளையரை எதிர்த்துப் போராடிய காலம்.திராவிடர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இளம் வயதினராய் இருந்த அவரது உள்ளத்தில் எரிமலையாய் புகையச்செய்தது.இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மாவின் கொள்கைகள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப, நேர்மை தவறாத ஒழுக்க குணம், தனக்குச் சரியெனப் படாததை எதிர்க்கும் போர்க்குணம், அஞ்சா நெஞ்சம், அறிவு, ஆற்றல் போன்றவற்றை இளம் வயதிலேயே வாய்க்கப் பெற்றார்.

அந்த நாளில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸோடு, ஜீவா நெருங்கிப் பழகினார்.சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார்.நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார்.அந்தக் கவிதை காந்திஜியையும், கதரையும் பற்றியது.

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார்."ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார்.அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார்.காந்திய வெளியீடுகளைப் படித்தார்.காந்திஜியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது.

காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது.

அவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது.அன்னியத் துணிகளைத் தீயிட்டுக் கொளுத்தி, வெறும் கோவணத்துடன் வீடு திரும்பினார்.அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார்.

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. வாலிபர் உலகம் கொந்தளித்து எழுந்தது. வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை அவரால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது.

சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா.

ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக ஜீவாவைக் கைதுசெய்து, கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோஷலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.

பொதுத் தொண்டில் சிறு வயதிலிருந்தே நாட்டம் கொண்ட ஜீவாவுக்கு, தீண்டாமை ஒழிப்பைப் பற்றியே எப்போதும் சிந்தனை. ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் தந்தை மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் அவர் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17.

ஜாதி வித்தியாசம் பாராமல் ஆசிரமம் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நிதி சேர்க்கப்பட்ட வ.வே.சு.ஐயரால் சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட தேசிய குருகுலத்தில் ஜாதி பாகுபாடு காட்டப்பட்டது என்ற புகார் எழுந்து வ.வே.சு.ஐயரைக் கண்டித்து கிளர்ச்சி நடத்தது. இதை அறிந்த ஜீவா மற்றும் பெரியார் போன்றோர் கடுமையாக எதிர்த்தனர்.

வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். தீண்டாமையை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ஜீவா, ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார். அந்த ஆசிரமத்தையும் அதன் செயல்பாடுகளையும் வ.உ.சி. போன்றவர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர்.

ஆசிரமம் அமைக்கும் முன்பே ஜீவாவுக்குத் தனித்தமிழிடம் அதிகப் பற்று ஏற்பட்டது. தூய தமிழில் பெயரிட வேண்டும் என்ற ஆவலில் தனது பெயரை "உயிர் இன்பன்" என்று மாற்றிக்கொண்டார். ஜீவாவின் ஆசிரமத்துக்கு வந்த வ.ரா., ஆசிரமக் கொள்கையையும் நடைமுறையையும் பாராட்டினார். ஜீவாவின் சொற்பொழிவுகளைக் கேட்டு அவர் மீது பெரும் மதிப்பு கொண்ட வ.ரா., ஜீவாவுக்கு ஆலோசனை கூறினார்:-

"உங்களை நான் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நன்மையையும், வளர்ச்சியையும் கருதியாவது தனித்தமிழில் பேசுவதை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசிய போதிலும் உங்களுடைய தனித்தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியுமா?'' என்ற வ.ரா.வின் அறிவுரையை சிந்தித்த ஜீவாவுக்கு தனித்தமிழில் உள்ள வெறி நீங்கியது.

"உயிர் இன்பன்" என்று மாற்றிக்கொண்ட தனது பெயரை, மீண்டும் ஜீவானந்தமாக மாற்றினார்.

இறுதிவரை ப. ஜீவானந்தம் - ஜீவா என்றே அழைக்கப்பட்டார்.

ஜீவா நடத்திய காந்தி ஆசிரமத்துக்கு ஜீவா அழைப்பின்பேரில் மகாத்மா காந்தி விஜயம் செய்தார். ஜீவானந்தத்தின் இளமைத் தோற்றமும், வாதத் திறமையும் காந்தியை வியக்கவைத்தன. ஆசிரமப் பணிகளையும் சேவையையும் பாராட்டிய காந்தி, ஜீவாவைப் பார்த்து, "உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?'' என்றார்.

"இந்த தேசம்தான் எனக்குச் சொத்து'' என்று ஜீவா பதிலளித்தார்.

ஜீவாவின் பதிலைக் கேட்டு காந்திஜி திகைத்தார்.

பிறகு "இல்லையில்லை, நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து'' என்றார்.கம்பனிலும், பாரதியிலும் அவர் கண்ட புரட்சிக்கொள்கை, அவரை இலக்கியங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்தது.

கடலூர் சட்டமன்றத் தொகுதி ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.

அவ்வப்போது போராட்டங்களில் கலந்து கொண்டு ஜீவா பலமுறை சிறை சென்றுவிடுவார். கட்சி, கொள்கை, போராட்டம், சிறைவாசம் என்று வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த அவர், குடும்பம் ஒன்று உண்டு என்பதை மறந்துவிடவில்லை.

கொள்கையைப் பரப்ப "ஜனசக்தி" நாளிதழைத் தொடங்கிய ஜீவா, "தாமரை" என்ற இலக்கிய இதழை 1959இல் தொடங்கினார். அதில், "தமிழ் மணம் பரப்ப" என்று பாராட்டி கவிதைகள் எழுதினார், பொதுவுடைமைக் கொள்கைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.1933இல் ஜீவா எழுதிய "பெண்ணுரிமை கீதாஞ்சலி" என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல்.

அப்போதிலிருந்து இந்த நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கேற்றார்.

1963ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி அந்த மாவீரன் மரணமடைந்தார்.

மரணமா? அவருக்கு மரணமேது?

நாட்டில் சமத்துவம் நிலவும் வரை, தீண்டாமை ஒழியும் வரை, ஒற்றுமையான குடியரசு அமையும் வரை அவர் ஜீவனுக்கு அழிவேது?

மகாத்மா காந்தி கூறியதுபோல் அவர் இந்தியாவின் சொத்து.

No comments:

Post a Comment