தமிழ்மணி:- திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

on Sunday, December 12, 2010



"பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவர் வாயில் துதியறிவாய்,
அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே."

என பாரதி, உ.வே.சாமிநாதய்யரைப் போற்றுகிறார்.

ஓலைச் சுவடிகளிலிருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடித்தொகுத்து அச்சிட்டுப் பெரும்புகழ் பெற்றார் உ.வே.சா எனில், அத்தகைய உ.வே.சா.வுக்கு அருந்தமிழ் போதித்து அவரைக் கற்றோரவையில் முந்தியிருக்கச் செய்த பெருமைக்குரியவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார்.

ஆசிரியரால் மாணாக்கர் தமிழ்நூற்கடலை நிலைகண்டுணர்ந்தார். மாணாக்கர் தம் ஆசிரியர் மகாவித்துவானின் வரலாற்றை நூலாக்கி அவரின் அளக்கலாகாப் புலமையை உலகறியச் செய்தார்.

கற்றல்
கற்பித்தல்
கவிபுனைதல்
எனும் இவற்றை நற்றவமாய் மேற்கொண்ட நற்புலவர் மகாவித்துவான் எனக் கூறுதல் மிகையன்று.



பலர்க்கும் இன்ன காலமென்னாது எத்தகைய பெருநூலும் எளிதுணர்த்திப் பயனுறுத்தும் இணையிலா ஆசான் எனத் தம் ஆசானைப் பற்றிச் சாமிநாதய்யர் குறிப்பிடுவார். ஆசானின் மற்றொரு மாணாக்கர் சி.தியாகராச செட்டியார். பிள்ளை எழுதிக்கொடுத்த நூல்கள் பற்றிக் கூறுகையில், "எத்தனையோ கோவைகள் மற்றும் எத்தனையோ புராணங்கள், எண்ணிலடங்கா நூல்கள் அத்தனையும் இத்தனையென்று எத்தனை நாவிருந்தாலும் இயம்ப இயலாது," என்பார்.
சிதம்பரம்பிள்ளை - அன்னத்தாச்சி தம்பதியர் மதுரையில் சைவக் குடும்பத்தில் பிறந்தவர்கள். சிதம்பரம் பிள்ளை மதுரை மீனாட்சியம்மை திருக்கோயிலில் மீன் முத்திரையிடும் பணி செய்துவந்தார். திருக்கோயில் நிர்வாகத்தோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், திருச்சிக்கு மேற்கே காவிரியின் தென்பாலுள்ள எண்ணெய் மாகாணம் என்னும் ஊரில் வந்து தங்கினார். தமிழறிவு நிரம்பப் பெற்றிருந்த சிதம்பரம் பிள்ளை அவ்வூரிலிருந்தோர்க்கு தமிழ் நூல்களைக் கற்பித்தார். சிறிது காலத்துக்குப்பின் அங்கிருந்து அதவத்தூர் சென்று அங்கும் ஆசிரியப்பணியை மேற்கொண்டார். குடும்பம் அதவத்தூரில் இருந்தபோது ஸ்ரீபவ ஆண்டு பங்குனித் திங்கள் 26ம் நாள் (6.4.1815) அன்னதாச்சி ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தார்.


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருவருளால் பிறந்தமையின் மீனாட்சிசுந்தரம் எனப் பெயர் சூட்டினர். குடும்பம் சோமரசம்பேட்டைக்குக் குடிபெயர்ந்தது.



மீனாட்சிசுந்தரம் தந்தையிடம் தமிழ் கற்றார்.
நெடுங்கணக்கு
ஆத்திச்சூடி
அந்தாதிகள்
கலம்பகங்கள்
பிள்ளைத்தமிழ் நூல்கள்
மாலைகள்
சதகங்கள்
நிகண்டு
கணிதம் மற்றும்
நன்னூல்
போன்ற இலக்கண நூல்களையும் கற்றுத் தேர்ந்தார்.



கவிபுனையும் ஆற்றலும் பெற்றார். இவரின் கவிபுனையும் ஆற்றலைச் சோதிக்க விரும்பிய முருங்கப்பேட்டை செல்வர் ஒருவர், "இப்பாட்டுக்கு அருத்தம் சொல்" என்று முடியுமாறு ஒரு வெண்பா இயற்றச் சொன்னாராம். உடனே மீனாட்சிசுந்தரம் நெல்லுக்கும் திரிமூர்த்திகளுக்கும் சிலேடை அமைத்து ஒரு வெண்பா பாடினார்.



"ஒண்கமலம் வாழ்ந்து அன்னமாகி உரலணைந்து
தண்கயநீர்த் தூங்கித்தகும் ஏறூர்ந்து - ஒண்கதிரின்
மேயவித்தான் மூவராகும் விளம்பியதென்
தூயஇப் பாட்டுக் கருத்தம் சொல்."
இப்பாட்டில்,

ஒண்கமலம் வாழ்ந்து அன்னமாகி - நெல்லுக்கும் பிரமனுக்கும் சிலேடை
உரலணைந்து தண்கயநீர்த்தூங்கி - நெல்லுக்கும் திருமாலுக்கும் சிலேடை
ஏறூர்ந்து ஒண்கதிரின் மேயவித்தால்-நெல்லுக்கும் சிவனுக்கும் சிலேடை

"சொல்" என்பதற்கு "நெல்" என்று பொருளுண்டு. "இப்பாட்டுக் கருத்தம் சொல் என்றால்", "இப்பாட்டுக் கருத்தம் நெல்" என்பது
பொருளாகும்.


மீனாட்சிசுந்தரத்தின் 15ம் வயதில் தந்தை சிதம்பரம் பிள்ளை காலமானார். அவர் தந்தை இறந்த ஆண்டின் பெயர் "விரோதி". "விரோதி" என்னும் சொல்லை இருபொருளில் அமைத்து அவர் எழுதிய வெண்பா, இளம் வயதிலேயே அவரின் கவிபாடும் ஆற்றலுக்குச் சான்றாக உள்ளது. அவ்வெண்பா வருமாறு:

"முந்தை அறிஞர் மொழிநூல் பல நவிற்றும்
தந்தை எனைப் பிரியத் தான்செய்த- நிந்தை மிகும்
ஆண்டே விரோதியெனும் அப்பெயர் நிற்கே தகுமால்
ஈண்டேது செய்யாய் இனி."

சோமரசம்பேட்டையில் இருந்தபோது காவேரியாச்சி என்ற பெண் இவரின் வாழ்க்கைத் துணைவியானார். தமிழ்ப் புலவர்களைக் கண்டு உரையாடுவதற்கும், தம் ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்கும் வாய்ப்பாகத் திருச்சி மலைக்கோட்டை கீழவீதியில் குடியேறினார். முத்துவீரியம் என்னும் இலக்கண நூலைச் செய்த,
முத்துவீர வாத்தியார்
திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார்
முதலான புலவர்களுடன் அளவளாவும் வாய்ப்பினைப் பெற்றார். வெளியூர்ப் புலவர்கள் இவரைத் "திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை" எனக் குறிப்பிட்டனர்.
மலைக்கோட்டை மெளனமடம் வேலாயுத முனிவர்
காஞ்சிபுரம் சபாபதி முதலியார்
திருவம்பலம் தின்னமுதம் பிள்ளை
மழவை மகாலிங்கையர்
ஆகிய தமிழ்ப் புலவர்களை அணுகித் தம் ஐயங்களைப் போக்கிக் கொண்டார்.
எழுத்து
சொல்
பொருள்
யாப்பு
அணி
ஆகிய ஐந்திலக்கணங்களையும் தக்கவரிடம் பாடங்கேட்டார்.



திருவாவடுதுறை அம்பலவாண முனிவரிடம் கம்பரந்தாதியையும்
கீழ்மேலூர் சுப்பிரமணிய தேசிகரிடம் குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் இலக்கண விளக்கத்தையும் பாடங்கேட்டார்.


இதனால் அவர் தமிழ்ப் புலமை மேலும் சிறப்புற்றது.
பல சிவத்திருத்தலங்களுக்குச் சென்று, அத்தலங்களைப் பற்றித்
தலபுராணங்களும்
பதிகங்களும்
அந்தாதிகளும்
அங்குள்ள இறைவன், இறைவி மீது பிள்ளைத்தமிழ்
கலம்பகம்
கோவை
உலா
தூது
குறவஞ்சி
முதலான நூல்களும் இயற்றினார்.


1851ல் திரிசிரபுரத்திலிருந்தவர்கள் விரும்பிய வண்ணம் சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய "செவ்வந்திப்புராணம்" என்னும் நூலைப் பதிப்பித்தார்.


1860 முதல் மாயூரத்தில் வசிக்கத் தொடங்கி, அங்கிருந்து அடிக்கடி திருவாவடுதுறை மடத்திற்குச் சென்று வந்தார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை. திருவாவடுதிறை ஆதீன வித்துவானாக நியமிக்கப்பட்டார். ஆதீனகர்த்தர் அம்பலவாணதேசிகர் மீது கலம்பகம் பாடினார். ஆதீனகர்த்தர் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு "மகாவித்துவான்" என்ற பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார். அன்று முதல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.


1871ல் உ.வே.சாமிநாதய்யர் மகாவித்துவானின் மாணாக்கரானார். இறுதிவரைத் தம் ஆசானோடிருந்து பல்வேறு நூல்களைப் பாடங்கேட்டார். மகாவித்துவான் திருவாவடுதுறையிலிருந்து பட்டீஸ்வரம், திருப்பெருந்துறை, குன்றக்குடி முதலிய தலங்களுக்குச் சென்றுவந்தார்.


பிள்ளையவர்கள் 1876ல் நோய்வாய்ப்பட்டார். மாணாக்கர் சவேரிநாத பிள்ளை மார்பில் சாய்ந்த வண்ணம், திருவாசம் படிக்குமாறு கூறினார். உ.வே.சா திருவாசகம் அடைக்கலப்பத்தைப் பாட, 1.2.1876ல் தம் 61ம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் கம்பன்
இணையிலாப் புலவன்
மெய்ஞானக் கடல்
நாற்கவிக்கிறை
சிரமலைவாழ் சைவசிகாமணி
முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றார்.
தலபுராணங்கள் 22
சரித்திரம் 3
மான்மியம் 1
காப்பியம் 2
பதிகம் 4
பதிற்றுப்பத்தந்தாதி 6
யமக அந்தாதி 3
மாலை 7
பிள்ளைத்தமிழ் 10
கலம்பகம் 2
கோவை 3
உலா 1
தூது 2
குறவஞ்சி 1
பிறநூல்கள் 7
என இவர் செய்துள்ள மொத்த நூல்கள் ஏறத்தாழ 80. மேலும் பல தனிச் செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.

"பார்கொண்ட புகழ் முழுதும் ஒருபோர்வை
எனப் போர்த்த பண்பின்மிக்க
ஏர்கொண்ட மீனாட்சி சுந்தரவேள்." - என்று சி.சாமிநாததேசிகர் பாராட்டுவது பொருத்தமே.

எழுதிய நூல்கள்

இவர் 65 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கன.

  1. திருவானைக்காத் திருபந்தாதி
  2. திரிசிராமலை யமகவந்தாதி
  3. தில்லையமக அந்தாதி
  4. துறைசையமக அந்தாதி
  5. திருவேரகத்து யமக அந்தாதி
  6. திருக்குடந்தை திருபந்தாதி
  7. சீர்காழிக்கோவை
  8. குளத்தூக்கோவை
  9. வியாசக்கோவை
  10. அகிலாண்டநாயகி மாலை
  11. சிதம்பரேசர் மாலை
  12. சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
  13. திருநாகைக்க்ரோண புராணம்

2 comments:

anba said...

Right now i am reading the biography of Meenatchi Sundram pillay by Dr. Swaminatha Ayer. Interesting book. Could you please tell me, where is thirisirapuram in T.Nadu?

Unknown said...

Thirisirapuram is Trichy

Post a Comment